உள்ளூர் செய்திகள்

 டவுட் தனபாலு

தமிழக காங்., சட்டசபை குழு தலைவர் ராஜேஷ்குமார்: த.வெ.க.,வை, காங்., ஆதரிப்பது குறித்து திட்டமிட்டு விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன. பதவி ஆசைக்காக முதுகில் குத்திவிட்டதாக கூறுவதை மறுக்கிறோம். கடந்த சட்டசபை தேர்தலில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வெற்றி பெற காங்., தொண்டர்கள் கடுமையாக உழைத்தனர். டவுட் தனபாலு: பதவி ஆசை இல்லைன்னு சொல்றவங்க, புதிய அரசில் அமைச்சர் பதவி வேண்டி பட்டியலோட சுத்துறது ஏன்னு, 'டவுட்' வருதே! அதே மாதிரி, மதவாதத்தை தடுக்கத்தான் ஆதரவுன்னு சொல்லிட்டு, தேர்தலுக்கு முன் எதிர்த்த கட்சியையே இப்போ ஆதரிப்பது கொள்கையா இல்ல கணக்கா என்ற, 'டவுட்'டும் வருதே! lll பத்திரிகை செய்தி: த.வெ.க., மாநில நிர்வாகக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் அமைச்சர் ஆகி விட்டதால், தி.மு.க., -- அ.தி.மு.க.,வில் கொங்கு மண்டலத்தில் பதவி கிடைக்காமல் ஓரங்கட்டப்பட்ட நிர்வாகிகள், த.வெ.க.,வில் இணைவதற்கு தயாராகி வருகின்றனர். அடுத்த ஆண்டு உள்ளாட்சி தேர்தலும், 2029ல் லோக்சபா தேர்தலும் நடைபெற உள்ள நிலையில், 'சீட்' கிடைக்காதவர்கள், ஓரங்கட்டப்பட்டவர்கள், தற்போதைய நகராட்சி, பேரூராட்சி தலைவர்கள் பலரும் செங்கோட்டையனை சந்தித்து பேசியுள்ளனர். டவுட் தனபாலு: பதவி கிடைக்கலன்னு கட்சி மாறுறவங்க, நாளைக்கு அங்கயும் பதவி கிடைக்கலன்னா இன்னொரு கலர் போடுவாங்க. இப்படி தேர்தல் வந்தாலே கூட்டம் கூட்டமா கட்சி மாறுறதை பார்த்தா, தமிழக அரசியலில் உறுதி அதிகமா இல்ல 'அட்ஜஸ்ட்மென்ட்' அதிகமா அப்டிங்கிற 'டவுட்' வருதே! lll பா.ம.க., தலைவர் அன்புமணி அறிக்கை: தமிழக முதல்வராக பொறுப்பேற்றுள்ள தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், பெண்களுக்கு எதிரான குற்றங்களை கட்டுப்படுத்த சிறப்பு அதிரடிப்படை அமைக்கவும், போதைப்பொருட்கள் புழக்கத்தை ஒழிக்கவும் கையெழுத்திட்டுள்ளார். அதேபோல, அரசு சார்பில் விற்பனை செய்யப்படும் மது வகைகளை ஒழிக்கவும், தமிழகத்தில் 69 சதவீத இட ஒதுக்கீட்டை பாதுகாக்க ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தவும் நடவவடிக்கை எடுக்க வேண்டும். டவுட் தனபாலு: நீங்க எப்போ அறிக்கை கொடுத்தாலும், 'ஜாதிவாரி கணக்கெடுப்பு' இல்லாம அந்த பேப்பர் முழுமை அடையாது போலிருக்கே... ஒருவேளை விஜய் இதை செஞ்சுட்டா, அதுக்கப்புறம் நீங்க எதை வச்சு அரசியல் பண்ணுவீங் கங்கன்னு, 'டவுட்' வருதே! lll


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி