தி.மு.க., முன்னாள் அமைச்சர் தியாகராஜன்: ஒரு எம்.எல்.ஏ.,வாக, 10 ஆண்டுகள் நேரம் பார்க்காமல் உழைத்தேன். தற்போது, என் முழு நேரத்தையும் எவ்வாறு செலவிட வேண்டும் என நானே தீர்மானிக்கும் சுதந்திரத்துடன், சில வாரங்கள் ஓய்வை எதிர்நோக்கி இருக்கிறேன். முன்பு, நேரமின்மையால், நாடு முழுதும் சென்று உரையாற்றும் வாய்ப்புகளை மறுத்தேன். தற்போது, அவற்றை ஏற்க முடியும். புத்துணர்ச்சியுடனும், புதுப்பிக்கப்பட்ட ஆற்றலுடனும் மீண்டும் வருவேன். டவுட் தனபாலு: 'எனக்கு எம்.எல்.ஏ., அமைச்சர்னு பதவிகள் இருந்தால் தான் அரசியல்ல இருக்க முடியும்... பதவிகள் இல்லாம என்னால மக்கள் சேவை செய்ய முடியாது' என்பதை சுத்திவளைச்சு சொல்றீங்களோ என்ற, 'டவுட்'தான் வருது! lll தி.மு.க., தலைவர் ஸ்டாலின்: நம் கட்சி சார்பில் பூத் கமிட்டி, ஒன்றிணைவோம் வா, மண்டல மாநாடு என, பல்வேறு பணிகளை செய்தோம். ஆனால், எந்த பணிகளும் செய்யாமல், பூத் கமிட்டி கூட அமைக்காதவர்கள் வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்துள்ளனர். சமூக வலைதளங்களை பயன்படுத்தி, ரொம்ப சுலபமாக, சிறு பிள்ளைகளை பிரசாரம் செய்ய வைத்து, அவர்களின் தாத்தா, அப்பா, அம்மா போன்ற பெரியவர்களிடையே பிரசாரம் செய்து, திட்டமிட்ட பணியை முடித்து விட்டனர். டவுட் தனபாலு: வாஸ்தவம் தான்... நீங்க, முருகன் மாதிரி, தமிழகம் முழுக்க சுத்தி வேகாத வெயில்ல பிரசாரம் பண்ணிட்டு இருந்தீங்க... ஆனா, த.வெ.க., தரப்புக்கு ஆதரவா, சின்ன குழந்தைகள், பிள்ளையார் மாதிரி வீட்டுல பெரியவங்களை மட்டும் சுத்தி வந்து, விஜய் வசம் கோட்டையை ஒப்படைச்சுட்டாங்க என்பதில், 'டவுட்'டே இல்லை! lll பா.ஜ., மகளிர் அணி தேசிய தலைவர் வானதி சீனிவாசன்: திருச்செந்துார் சுப்ரமணிய சுவாமி கோவிலில், சுவாமி தரிசனத்திற்கு விரைவாக அழைத்து செல்வதாக கூறி, பக்தர்களிடம் சிலர் வசூல் வேட்டை நடத்துகின்றனர். இதை கோவில் நிர்வாகம் அறியவில்லையா அல்லது அறிந்தும் கமிஷன் போய் விடும் என்று கண்டுகொள்ளாமல் இருக்கிறதா என தெரியவில்லை. எனவே, முதல்வர் விஜய், அறநிலையத் துறைக்கு விரைவில் அமைச்சரை நியமித்து, இதுபோன்ற சம்பவங்களை தடுத்து நிறுத்த வேண்டும். டவுட் தனபாலு: பக்தியின் பெயரால், பக்தர்களிடம் நடத்தும் பகல் கொள்ளை தடுக்கப்படணும் என்பதில் எந்த, 'டவுட்'டும் இல்லை... ஓட்டு எண்ணிக்கைக்கு முன்னாடி, திருச்செந்துார் முருகன் கோவிலுக்கு சென்று மனமுருக வேண்டிட்டு வந்த விஜய், இந்த பிரச்னையில் கண்டிப்பா நடவடிக்கை எடுப்பார்னு நம்பலாம்! lll