டவுட் தனபாலு
தமிழக பொதுப்பணித் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா: தமிழக வெற்றிக் கழகத்தின் வெற்றியை பொறுத்துக்கொள்ள முடியாமல், தி.மு.க., தலைவர் ஸ்டாலினும், எதிர்க்கட்சி தலைவர் உதயநிதியும் போலி பிரசாரம் செய்கின்றனர். த.வெ.க.,வை ஆட்சிக்கு வர விடாமல் தடுக்க, தி.மு.க., - அ.தி.மு.க., - பா.ஜ., இணைந்து, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமியை முதல்வராக்க முயற்சித்தனர். த.வெ.க.,வை, புதிய அ.தி.மு.க., வாகத்தான், அ.தி.மு.க., தொண்டர்கள் பார்க்கின்றனர். யார் வேண்டு மானாலும் த.வெ.க.,வுக்கு வரலாம். டவுட் தனபாலு: நல்லது... போற போக்கை பார்த்தால், அ.தி.மு.க., தலைமை பிடிக்காம உங்க கட்சிக்கு வர்றவங்களை வரவேற்க, ஒரு தனி அணியை உருவாக்கி, தலைமை செயலகம் பக்கத்துல, உங்க கட்சிக்கு ஒரு கிளை அலுவலகமும் திறக்க வேண்டியிருக்குமோ என்ற, 'டவுட்'தான் வருது! lll ம.தி.மு.க., முதன்மை செயலர் துரை: தமிழகத்தில் கவர்னர் ஆட்சியை தவிர்க்க, காங்., -- கம்யூ., உள்ளிட்ட கட்சிகள், த.வெ.க., அரசுக்கு ஆதரவு தெரிவித்துள்ளன. தி.மு.க., - -அ.தி.மு.க., இணைந்து ஆட்சி அமைத் தால், மக்கள் ஏற்க மாட்டார்கள். இனி வரும் அனைத்து தேர்தல் களிலும், ம.தி.மு.க.,வின் சின்னத் தில் தான் போட்டியிடுவோம். டவுட் தனபாலு: அது சரி... இப்ப இருக்கும் உங்க கட்சியின் ரெண்டு எம்.எல்.ஏ.,க்களும், உதயசூரியன் சின்னத்தில் ஜெயித்தவர்கள்... இதே, நீங்க தனி சின்னத்தில் நின்று ஜெயித்திருந்தால், முஸ்லிம் லீக், வி.சி., கட்சிகள் மாதிரி த.வெ.க.,வுக்கு ஆதரவு தந்து, அமைச்சர் பதவி வாங்கியிருக்கலாம்... தனி சின்னத்தில் போட்டி என்ற உங்க முடிவு, காலம் கடந்த ஞானம் என்பதில், 'டவுட்'டே இல்லை! lll தி.மு.க., துணை பொதுச்செயலர் கனிமொழி: 'காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டப்படும்' என, கர்நாடக அரசு அறிவித்திருப்பது, கடும் கண்டனத்திற்குரியது. தமிழகத்தின் பாதியை பாலைவனமாக்க துடிக்கும் கர்நாடக காங்கிரஸ் அரசின் திட்டத்தை, தி.மு.க., ஆட்சியில் இருந்த வரை தடுத்து நிறுத்தியது. தற்போது, தமிழக அரசில் காங்., பங்கேற்றுள்ள நிலையில், இப்பிரச்னையில் தமிழக காங்., தலையிட்டு, உடனே அத்திட்டத்தை தடுத்து நிறுத்தும் என நம்புகிறேன். டவுட் தனபாலு: மேகதாது அணை திட்டத்தை நீங்க ஒண்ணும் நிறுத்தி வைக்கலை... 'அது சம்பந்தமா, விரிவான திட்ட அறிக்கையை தயாரிச்சு கொண்டு வாங்க'ன்னு கர்நாடக அரசிடம் மத்திய நீர்வள ஆணையம் கேட்டுக்கிட்டதால, திட்டம் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கு என்பது தான், 'டவுட்' இல்லாத உண்மை! lll