மேலும் செய்திகள்
டவுட் தனபாலு
08-Jun-2026
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான்: காங்கிரசாரிடம் ஒன்றை கேட்க விரும்புகிறேன். அனைவரும், சோற்றில் உப்பு போட்டு சாப்பிடுகிறீர்களா? தி.மு.க., போட்ட பிச்சையில், 10 எம்.பி.,க்களை காங்கிரஸ் பெற்றது. உண்மையாகவே நீங்கள் மானஸ்தர்களாக இருந்தால், அந்த பதவிகளை ராஜினாமா செய்து விட்டு, தமிழக வெற்றிக் கழகத்துடன் இணைந்து இடைத்தேர்தலில் வெற்றி பெறுங்கள். டவுட் தனபாலு: உங்க பேச்சை கேட்டு, அவங்க ராஜினாமா பண்ணி, 10 எம்.பி., தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடந்தாலும், நீங்க வழக்கம் போல தனியா தான் நிற்பீங்க... அப்பவும், 'ஜெயித்தால் மகிழ்ச்சி; தோற்றால் பயிற்சி'ன்னு வீரவசனம் பேசி, 'டிபாசிட்'டை பறிகொடுத்துடுவீங்க என்பதில், 'டவுட்'டே இல்லை! தமிழக வெற்றிக் கழகத்தின் தகவல் தொழில்நுட்ப அணி அறிக்கை: ஆட்சி என்றால் தனக்கு மட்டுமே; அதிகாரம் என்றால், தன் குடும்பத்துக்கு மட்டுமே என சிலர் இருக்கின்றனர். ஆனால் நாங்கள், ஆதரவளித்தவர்களுக்கு ஆட்சியில் பங்கையும், அதிகார பகிர்வையும் அளித்தோம். கூட்டணி என்ற பெயரில், உடனிருக்கும் கட்சிகள் மீது சவாரி செய்து, அரசியல் ஆதாயங்களை மட்டும் அனுபவிக்கும் சுயநலம் மட்டுமே கொண்ட தீய சக்தி நாங்கள் அல்ல. கூட்டணியை நாங்கள் தான் அனுப்பி வைத்தோம் என பெருந்தன்மை பேசிவிட்டு, அவர்களை ஏக வசனத்தில் ஏசுவது, எந்த வகையில் சேரும் ஸ்டாலின் சார்? டவுட் தனபாலு: 'இத்தனை வருஷங்களா, ஆட்சியில் நாங்க தராத பங்கை நீங்க தந்துட்டீங்களே' என்ற ஆதங்கம் தான், தி.மு.க., தலைவர் ஸ்டாலினிடம் இருந்து ஏக வசனங்களா வெளிப்படுது என்பதில், 'டவுட்'டே இல்லை! அ.ம.மு.க., பொதுச் செயலர் தினகரன்: தேர்தலில் அ.ம.மு.க., சார்பில் வென்ற எம்.எல்.ஏ.,விடம், காரில் வைத்து கையெழுத்து வாங்கி, அவர் த.வெ.க.,வை ஆதரிப்பதாக கூறி, கவர்னரிடம் கொடுத்தனர். அ.தி.மு.க., -- எம்.எல்.ஏ.,க்கள் 25 பேரிடம், குழந்தைகளுக்கு சாக்லேட் கொடுப்பது போல ஆசை வார்த்தை கூறி, ஆதரவை பெற்று கொண்டு, தற்போது அவர்களை நடுத்தெருவில் நிறுத்தி விட்டார் முதல்வர் விஜய். டவுட் தனபாலு: த.வெ.க., பக்கம் போன 25 பேரும் அமைச்சர் பதவி, வாரிய தலைவர் பதவிகள் கிடைக்கும்னு ஆசைப்பட்டு போனாங்க... ஆனா, அங்க எதுவும் தேறாம, போன வேகத்துல தாய் கழகத்துக்கே திரும்பிட்டாங்க... உங்க கட்சியின் ஒரு எம்.எல்.ஏ.,வையும் கோட்டை விட்டுட்டு, நடுத்தெருவில் நிற்பது யார் என்ற, 'டவுட்' வருதே!
08-Jun-2026