டீக்கடையாக மாறியது பழைய வி.ஏ.ஓ., அலுவலகம்
தஞ்சாவூர்: சேதமடைந்த பழைய வி.ஏ.ஓ., அலுவலகத்தை, தனிநபர் ஒருவர் ஆக்கிரமிப்பு செய்து, டீக்கடையாக மாற்றியுள்ளார். தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு அருகே ஆதனக்கோட்டை கிராமத்தில், திருவோணம் தொகுதி அ.தி.மு.க., முன்னாள் எம்.எல்.ஏ., ராஜேந்திரனின் தொகுதி மேம்பாட்டு நிதியில், 2001 - 2006ம் ஆண்டு வி.ஏ.ஓ., அலு வலகம் கட்டப்பட்டது. சில மாதங்களுக்கு முன், வி.ஏ.ஓ., அலுவலக மேற்கூரை சேதம் அடைந்தது. இதையடுத்து , புதிய அலுவலகம் கட்டப்பட்டு, வி.ஏ.ஓ., அலுவலகம் அங்கு மாற்றப்பட்டது. பழைய கட்டடம் பயன்பாடு இல்லாத நிலையில், அவ்வூரை சேர்ந்த ஒருவர், ஆளும்கட்சி மற்றும் அதிகாரிகளின் ஆதரவுடன், அந்த கட்டடத்தை டீக்கடையாக மாற்றியுள்ளார். இது குறித்து, அப்பகுதியை சேர்ந்த ஓய்வு பெற்ற வருவாய்த் துறை அதிகாரிகள் கூறியதாவது: அரசு நிதியில் கட்டப்பட்ட வி.ஏ.ஓ., கட்டடம் சேதமடைந்ததால், அதை இடித்து விட்டு புதிய கட்டடம் கட்டலாம் அல்லது பஞ்சாயத்துக்கு சொந்தமான இடமாக இருந்தாலும், சேதமடைந்த கட்டடத்தை, பஞ்சாயத்து நிர்வாகம் வேறு பொது பயன்பாட்டிற்கு மட்டுமே பயன்படுத்த முடியும். ஆனால், தனிநபர் ஆக்கிரமிப்பு செய்து, டீக்கடை நடத்தி வருகிறார்.ஆளும்கட்சி மற்றும் அதிகாரிகள் துணையோடு தான் இது நடக்கிறது. இது தொடர்பாக வருவாய்த் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.