உடல் உறுப்புகள் தானம்: 5 பேருக்கு மறுவாழ்வு
மதுரை: திண்டுக்கல் மாவட்டம் பழநி பாலசமுத்திரத்தை சேர்ந்தவர் தனுஷ்லால் 37. இவர் ஜன.,12ல் பழநி அருகே டூவீலரில் சென்றபோது வாகனம் மோதியதில் தலையில் காயம் ஏற்பட்டது. ஜன.,13ல் மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். நேற்று முன்தினம் (ஜன.,15) மூளைச்சாவு அடைந்தார். உடல் உறுப்புகளை தானமாக வழங்க மனைவி மரியஏஞ்சல் முன்வந்தார். இதயம் சென்னை ரேலா மருத்துவமனைக்கும், கருவிழிகள் மதுரை அரசு மருத்துவமனைக்கும் வழங்கப்பட்டன. கல்லீரல், ஒரு சிறுநீரகம் திருச்சி காவேரி மருத்துவமனைக்கும், மற்றொரு சிறுநீரகம் திருச்சி முருகன் ஹெல்த்கேருக்கும் அனுப்பப்பட்டன. இதன்மூலம் 5 பேர் மறுவாழ்வு பெற்றனர். அரசு மரியாதைக்கு பின் உறவினர்களிடம் உடல் ஒப்படைக்கப்பட்டது. நேற்று பாலசமுத்திரத்தில் அடக்கம் செய்யப்பட்டது. உடலுக்கு திண்டுக்கல் ஆர்.டி.ஓ., திருமலை, தாசில்தார் பிரசன்னா மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.