சிவன்மலை உத்தரவு பெட்டி: ஏர் கலப்பை வைத்து வழிபாடு
திருப்பூர்: சிவன்மலை சுப்ரமணிய சுவாமி கோவிலில் உள்ள ஆண்டவன் உத்தரவு பெட்டியில், மண் கலசத்தில் தீர்த்தம், மண் கலசத்தில் மண் மற்றும் ஏர் கலப்பை, பிரம்பு வைத்து பூஜை செய்யப்படுகிறது. திருப்பூர் மாவட்டம், காங்கயம், சிவன்மலையில் பிரசித்தி பெற்ற சுப்ரமணிய சுவாமி கோவில் உள்ளது. இங்குள்ள, ஆண்டவன் உத்தரவு பெட்டியில், முருகப்பெருமான், பக்தர்கள் கனவில் தோன்றி குறிப்பிடும் பொருட்களை வைத்து பூஜை செய்வது வழக்கம். கடந்த மார்ச் 10ம் தேதி முதல் மஞ்சள் பிள்ளையார், அருகம்புல், வெற்றிலை பாக்கு, எலுமிச்சை வைத்து பூஜிக்கப்பட்டு வந்தது. கோவை மாவட்டம், பொள்ளாச்சி, புரவிபாளையத்தை சேர்ந்த விவசாயி கதிர்வேல், 50 என்பவர் கனவில், மண் கலசத்தில் தீர்த்தம், மற்றொரு மண் கலசத்தில் மண், ஏர் கலப்பை, பிரம்பு ஆகியவை வைக்க உத்தரவானது. இதனால், அவர் கோவிலில் தெரியப்படுத்தி, சுவாமியிடம் உத்தரவு பெற்ற பின், இந்த பொருள்களை பெட்டியில் வைத்து சிறப்பு வழிபாடு நடத்தினார். கோவில் சிவாச்சாரியார்கள் கூறுகையில், 'சிவன்மலை உத்தரவு பெட்டியில் எந்த பொருள் வைத்து பூஜை செய்யப்படுகிறதோ, அந்த பொருள் சமுதாயத்தில் ஏதாவது ஒரு வகையில் தாக்கத்தை ஏற்படுத்தும். மண் கலசத்தில் தீர்த்தம், மண், ஏர் கலப்பை, பிரம்பு வைக்கப்பட்டுள்ளதால், சமுதாயத்தில் அதன் தாக் கம் போகப்போக தெரிய வரும். இருப்பினும், விவசாயம் சார்ந்த வகையில், தாக்கம் இருக்க வாய்ப்பு உள்ளது' என்றனர். கூனம்பட்டி ஸ்ரீகுருகுல வேதபாடசாலை நிறுவனர் ஸ்ரீநடராஜ சுவாமி கூறியதாவது: உலகம் முழுவதும், எத்தனையோ அசம்பாவிதங்கள், குற்ற செயல்கள், விபத்துக்கள், போர்கள் நடந்து வருகின்றன. அத்தகைய போர் குணங்களையும், குற்ற செயல்களையும் ஒடுக்கவே, பிரம்பு கொண்டு முருகப்பெருமான் எச்சரித்துள்ளார். சித்தபிரம்மைக்கு தீர்த்தம் வழங்கப்பட்டுள்ளது; மழை பெய்து, விவசாயமும், தொழிலும் சிறக்கும் என்பதன் அடையாளமாகவே, ஆண்டவர் உத்தரவு பார்க்கப்படுகிறது. இவ்வாறு கூறினார்.