உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / இதப்படிங்க முதல்ல / நாட்டின் முதல் ஆசிரியை

நாட்டின் முதல் ஆசிரியை

மற்ற தொழில்களை விட, ஆசிரியர் தொழில் மிகவும் புனிதமானதாக கருதப்படுகிறது. வளமான நாட்டை உருவாக்குவதில், ஆசிரியர்களுக்கு முக்கிய பங்குள்ளது என்பதை, யாராலும் மறுக்க முடியாது. சிறார்களின் அறிவு கண்களை திறந்து, அவர்களின் வாழ்வில் ஒளியேற்றும் புனிதமான பணியை, ஆசிரியர்கள் செய்கின்றனர். இவர்களில் சாவித்ரி பாய் புலேவும் முக்கியமானவர்.ஆணாதிக்கம் உச்சத்தில் இருந்த காலகட்டத்தில், பெண்கள் அடுப்படியை விட்டு வெளியே வர முடியாத கட்டுப்பாடுகள் இருந்தன. அடிப்படை உரிமையான கல்வியும் கூட, பெண்களுக்கு மறுக்கப்பட்டது.அனைத்து விஷயங்களிலும், ஆண் பிள்ளைகளுக்கு மட்டுமே முக்கியத்துவம் இருந்தது. சிறுமிகள் பள்ளிக்கு செல்வதை, பெருங்குற்றமாகவே நினைத்தனர். இத்தகைய காலத்திலும், கல்வி பயின்றது மட்டுமின்றி, மற்றவருக்கு கல்வி போதிக்கும் அளவுக்கு உயர்ந்தவர் சாவித்ரி பாய் புலே.மஹாராஷ்டிராவை சேர்ந்த இவர், இந்தியாவின் முதல் ஆசிரியை என்ற பெருமை பெற்றவர். சமுதாயத்தில் பல மாற்றங்களை கொண்டு வந்தவர். குறிப்பாக பெண்கள் கல்வி பெற வேண்டும் என, குரல் கொடுத்தவர். அதில் வெற்றியும் பெற்றவர். ஜனவரி 3ம் தேதி, இவரது 194வது பிறந்த நாளை பெங்களூரு உட்பட, கர்நாடகாவின் பல்வேறு இடங்களில் கொண்டாடினர்.கடந்த 1840ம் ஆண்டில், 9வது வயதில் இவருக்கு, 13 வயதான ஜோதிராவ் புலேயுடன் திருமணம் நடந்தது. பெண்கள் கல்வி கற்காவிட்டால், அது அவர்களின் குடும்பத்துக்கு மட்டுமின்றி, சமுதாயத்துக்கு பேரிழப்பு என்பதை உணர்ந்த சாவித்ரி பாய் புலே, அதற்காக நிரந்தரமாக போராட துவங்கினார்.கடந்த 19ம் நுாற்றாண்டில் தன் வீட்டிலேயே, பள்ளி திறந்து கல்வியில் புரட்சியை ஏற்படுத்தினார். பின்தங்கிய சமுதாயத்தினர், பெண்களுக்கு கல்வி போதித்தார். இதற்கு அவரது கணவர் ஜோதிராவ் புலே பக்கபலமாக நின்றார். தாழ்த்தப்பட்ட பெண்களுக்காக தனி பள்ளியை திறந்தார். தாழ்த்தப்பட்டவர்களின் பள்ளியில் பணியாற்ற, ஆசிரியர்கள் முன் வரவில்லை. எனவே தன் மனைவி சாவித்ரி பாயை ஆசிரியையாக நியமித்தார். இவரே நாட்டின் முதல் பெண் ஆசிரியை.அந்த காலத்தில் பெண்ணொருவர் ஆசிரியையானதை, சமுதாயம் பார்க்கும் கண்ணோட்டமே வேறாக இருந்தது. இது செய்யக்கூடாத தவறாகவே பலரும் கருதினர். கேலி செய்து சிரித்தனர். சாவித்ரி பாய் பாடம் நடத்த பள்ளிக்கு செல்லும் போது, பலரும் வழி மறித்து சாணம், கழிவு நீரை வீசி அவமதித்தனர். தினமும் இத்தகைய அவமானங்களை அனுபவித்தார். ஆனால் மனம் தளராமல், தொடர்ந்து தன் பணியை செய்தார். பள்ளிக்கு செல்லும் போது மறக்காமல், மாற்று சேலையை பையில் வைத்து கொண்டு செல்வார்.பள்ளிக்கு சென்றதும், சாணம், கழிவு நீரால் நனைந்த சேலையை மாற்றி கொண்டு, சிறார்களுக்கு பாடம் நடத்துவார். எந்த மிரட்டலுக்கும் பணியாமல் தங்கள் பணியில் ஜோதிராவ் புலே, சாவித்ரி பாய் தம்பதி கடமையில் கண்ணும், கருத்துமாக இருந்தனர். 1848 முதல் 1852 வரை 18 பள்ளிகளை திறந்தனர். இவற்றை நிர்வகிக்கும் பொறுப்பை, சாவித்ரி பாய் ஏற்று கொண்டார். ஆசிரியையாக, தலைமை ஆசிரியையாக, பள்ளி பொறுப்பாளராக தன் பொறுப்புகளை சிறப்பாக நிர்வகித்து, கணவரிடம் பாராட்டு பெற்றார்.கடந்த 1854ல், தொழிலாளர்கள், விவசாயிகளுக்காக இரவு நேர பள்ளிகளை திறந்தனர். 10 மாணவர் விடுதிகளை கட்டினர். குழந்தை இல்லாத சாவித்ரி பாய், தாய், தந்தையை இழந்த குழந்தைகளுக்காக ஆதரவற்றோர் மையம் அமைத்தனர். அங்கிருந்த குழந்தைகளுக்கு தாங்களே தாய், தந்தையாக இருந்தனர்.சிறந்த ஆசிரியையாக மட்டுமில்லாமல், முற்போக்கு சிந்தனையாளராகவும், சீர்திருத்தவாதியாகவும் இருந்தார். அன்றைய காலத்தில், கணவரை இழந்த விதவைகள் தலையை மொட்டையடிக்கும் நடைமுறை இருந்தது. இதை எதிர்த்து கடுமையாக போராடியவர் சாவித்ரி பாய் புலே, எந்த எதிர்ப்பையும் பொருட்படுத்தாமல் விதவை பெண்களுக்கு மறுமணம் செய்து, அவர்களின் வாழ்வில் ஒளியேற்றினார்.அன்றைய ஆணாதிக்க சமுதாயத்தில், பெண்ணொருவர் விதவைகளுக்கு மறுமணம் செய்து வைத்தது, புரட்சிகரமான சாதனை என, வரலாற்றில் பதிவாகியுள்ளது. இவரது சாதனையை அடையாளம் கண்டு, அன்றைய பிரிட்டிஷ் அரசு, இந்தியாவின் முதல் மகளிர் ஆசிரியை என, அழைத்து கவுரவித்தது - நமது நிருபர் -.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை