UPDATED : ஆக 06, 2025 10:38 AM | ADDED : ஆக 06, 2025 12:24 AM
தேனி:லண்டனிலிருந்து பிரான்ஸ் வரை 36 கி.மீ., துாரம் உள்ள ஆங்கில கால்வாயை தேனியைச் சேர்ந்த 18 வயது வாலிபர் 12 மணி நேரம் 10 நிமிடங்களில் நீந்தி சாதனை படைத்தார். தேனி பழனிசெட்டிபட்டி ஹரிசங்கர் - தேவி தம்பதி மகன் அத்வைத் 18. இவர் 2025 ஜூலை 6ல் லண்டன் சென்று கடல்நீரில் எளிதாக நீந்தும் பயிற்சியை ஆங்கில கால்வாய் பகுதியில் பெற்றார். பின் 2025 ஜூலை 29 அதிகாலை 2:00 மணிக்கு லண்டனில் இருந்து பிரான்ஸ் வரை உள்ள ஆங்கில கால்வாயை 36 கி.மீ., துாரத்தை (64.8 நாட்டிக்கல் மைல் கடல்நீர் துாரம்) நீந்தி பிரான்ஸ் பகுதிக்கு மதியம் 2:10 மணிக்கு சென்று சாதனை படைத்தார். இவரை நீச்சல் பயிற்சியாளர் விஜயகுமார், பொது மக்கள் பாராட்டினர். பயிற்சியாளர் கூறியதாவது: ஆங்கில கால்வாய் அமைந்துள்ள கடலில் பிற கடல்களின் நீரோட்டம் போல் இருக்காது. மின்சார அதிர்வுகளை கொண்டுள்ள நீரோட்டமாக இருக்கும். மேலும் குளிர் 14 முதல் 15 டிகிரி வரை இருக்கும். ஜெல்லி மீன்கள், கடல் நாய்கள், சுறா மீன்கள் அதிகளவில் உள்ளன. இப்பகுதியில் நீந்துவது கடினம். இதனை தமிழகத்தைச் சேர்ந்த குற்றாலீஸ்வரன் நீந்தியுள்ளார். அவருக்கு பிறகு தேனி நீதிராஜன் மகன் சினேகன் ஆங்கில கால்வாயை நீந்தி பிரான்ஸ் சென்று மீண்டும் நீந்தியே இங்கிலாந்து வந்து 31 மணி நேரம் 29 நிமிடங்கள் எடுத்து சாதனை புரிந்தார். இது 72 கி.மீ., துாரமாகும். தற்போது அத்வைத் சாதனை படைத்துள்ளார் என்றார்.