பாக்ஸிங் களத்தில் இளம்வீரர் மூளைச்சாவு; உடல் உறுப்பு தானமாக வழங்கிய பெற்றோர்
சென்னை: பள்ளியில் நடந்த குத்துச்சண்டை போட்டியின் இறுதியாட்டத்தில், திடீரென மயங்கி விழுந்து மூளைச்சாவு அடைந்த 15 வயது இளம்வீரரின் உடல் உறுப்புகளை, அவரது பெற்றோர் தானமாக வழங்கினர். அம்பத்துார், டீச்சர்ஸ் காலனி, 2வது தெருவைச் சேர்ந்தவர் சந்திரபாபு, 44; ஐ.டி., நிறுவன ஊழியர். இவரது மனைவி ரேஷ்மி, 41. தம்பதிக்கு ஒரு மகளும், மகனும் உள்ளனர். அவரது மகன் ஹரிஷ், 15; சூரப்பட்டு, வேலம்மாள் பள்ளி பத்தாம் வகுப்பு மாணவர்; குத்துச்சண்டை வீரராகவும் விளங்கினார். இந்த நிலையில், திருவேற்காடு அடுத்த அயனம்பாக்கம் பகுதியில் உள்ள வேலம்மாள் பள்ளியில், சி.பி.எஸ்.இ., பள்ளிகளுக்கு இடையிலான குத்துச்சண்டை போட்டி நடந்தது. போட்டியின் தொடக்கம் முதலே அசத்திய ஹரிஷ், இறுதி சுற்றுக்கு முன்னேறினார். கடந்த 12ம் தேதி இறுதிப்போட்டி நடக்க இருந்த இடத்தில், ஹரிஷ் திடீரென மயங்கி விழுந்தார். பள்ளி நிர்வாகம் அவரை மீட்டு, அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஹரிஷின் மூளையில் ரத்தக்கசிவு உள்ளது, உடனே, அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என கூறியுள்ளனர். அதன்படி, அறுவை சிகிச்சை செய்த நிலையில், நேற்று முன்தினம் மாலை ஹரிஷ் மூளைச்சாவு அடைந்தார். பின், இரவு 11:00 மணியளவில், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். ஹரிஷின் உடலை தானம் செய்ய, அவரது பெற்றோர் முடிவு செய்தனர். இதையடுத்து, மூளை சாவு அடைந்த ஹரிஷின் கண், இதயம், கணையம், கிட்னி, குடல் உள்ளிட்ட ஏழு உடல் உறுப்புகள் தானமாக அளிக்கப்பட்டது. இதையடுத்து, அவரது உடல் சொந்த ஊரான கேரள மாநிலம் கொல்லத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.