உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / இது உங்கள் இடம் / பகலில் கூட வரக்கூடாத கனவு!

பகலில் கூட வரக்கூடாத கனவு!

எஸ்.உதயம் ராம், சென்னையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: தான் நடித்த படங்களில் கட்சி சார்ந்த கருத்துகளை பேசி, அதை மக்களிடையே அழுத்தமாக சேர்த்தவர் எம்.ஜி.ஆர்., தன் ரசிகர்களை கட்சி உறுப்பினர்களாகவும், உடன் இருந்தவர்களை தோழமை கட்சியில் பொறுப்பாளர்களாகவும் மாற்றிய அரசியல் சாதுர்யம், அவரைத் தவிர வேறு எவரிடமும் இருந்ததில்லை. அவருக்குப் பின், சினிமாவில் அரசியல்வாதிகளை தட்டிக் கேட்பவராக, அதிகார வர்க்கத்தை எதிர்ப்பவராக நடித்ததோடு மட்டுமல்லாமல், எம்.ஜி.ஆரைப் போன்றே, தர்ம காரியங்களில் ஈடுபட்டு மக்களோடு மக்களாக பழகியதால் தான், விஜயகாந்த் கட்சி துவங்கிய சில ஆண்டுகளிலேயே அ.தி.மு.க., கூட்டணி வாயிலாக, 27 இடங்களைப் பெற முடிந்தது. அதன்பின், வெவ்வேறு காரணங்களால் அவர் சறுக்கி விட்டார்; கட்சியும் பெரிதாக வளர முடியவில்லை. இவ்வரிசையில் நடிகர் விஜய், தான் நடித்த ஒரு சில படங்களில் மட்டுமே அரசியல் பேசி, தலைவராக தன்னை வரித்துக் கொண்டு, அரசியல் பிரவேசம் செய்திருக்கிறார். கூட்டம் கூடுகிறது, மக்கள் குவிகின்றனர்... குறிப்பாக, இளைய சமுதாயத்தினர் திரண்டு வருகின்றனர் என்பதெல்லாம் உண்மைதான். ஆனால், அவை எல்லாம் ஓட்டுகளாக மாறுமா? அரசியலுக்கு வந்த இரண்டு ஆண்டுகளில், மத்திய - மாநில அரசுகளை எதிர்த்து ஏற்ற இறக்கங்களோடு பேசுவதும், அறிக்கை விடுவதும், அதன்பின் அமைதியாவதும் மட்டுமே அவரது நடவடிக்கைகளாகத் தொடர்கின்றனவே தவிர, ஆட்சிக்கு வந்தால் என்ன மாற்றங்கள் செய்யப் போகிறார், எப்படி அரசியல் செயல்பாடுகள் இருக்கும் என்பது குறித்து இன்றுவரை ஒருமுறை கூட அவர் தெரிவிக்கவில்லை. மக்களின் பிரச்னைகளுக்குக் குரல் கொடுக்கவும் இல்லை; நேரடியாக எவ்விதப் போராட்டத்திலும் பங்கேற்கவும் இல்லை. ஆனால், முதல்வராக தன்னை முன்னிறுத்துவதும், கூட்டணிக்கு தானே தலைவர் என்று அறிக்கை விடுவதும், தி.மு.க., - த.வெ.க.,விற்கும் இடையே தான் போட்டி என்றும் பிதற்றுகிறார். தமிழக அரசியலில் எப்போதுமே இரு முனைப்போட்டி தான்! கடந்த 1967க்கு முன் காங்கிரஸ் - தி.மு.க., என்றிருந்த நிலை, கடந்த 50 ஆண்டுகளாக தி.மு.க., - அ.தி.மு.க.,வுக்கு இடையே தான் போட்டி என்பது நேற்று பிறந்த குழந்தைக்கு கூட தெரியும்! இந்த இரு கழகங்களையும் மீறி, விஜய் தனித்து நின்று ஆட்சி அமைக்கும் அளவுக்கு வெற்றி பெறுவார் என்பதெல்லாம் பகலில் கூட வரக்கூடாத கனவு! அப்படியே கூட்டணி அமைத்து ஆட்சியை பிடிக்கலாம் என்றால் கூட, தி.மு.க.,வையும் பா.ஜ.,வையும் எதிரி என்று அறிவித்த பின், அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணிக்குள் விஜய் எப்படி வர முடியும்? அப்படியே வந்தாலும் உடைந்து போன பா.ம.க., உடைந்து கொண்டிருக்கும் அ.தி.மு.க., உடைய வாய்ப்புள்ள பா.ஜ., தெளிவில்லாத தே.மு.தி.க., இவர்களோடு இணைந்து எப்படி தன் அடையாளத்தைத் தக்க வைப்பார்? திரைப்படத்தில் வருவது போன்று ஒரே காட்சியில், ஒரே அடியில் எதிரியை வீழ்த்தி விட முடியுமா? எனவே, களம் மாறும்போது காட்சிகள் மாறலாம்... அப்போது, விஜய் மாறும் சக்தியா இல்லை மாற்றும் சக்தியா என்பதும், அவரது கட்சி வெற்றிக் கழகமா இல்லை வெற்றுக் கழகமா என்பதும் தெரிய வரும்!  துரோகி அல்ல; தியாகி! ஜெ.பொன்மணி, செங் கோட்டையில் இருந்து அனுப் பிய, 'இ - மெயில்' கடிதம்: 'நன்றி மறப்பது நன்றன்று என்று அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி பேசுவது சாத்தான் வேதம் ஓதுவது போல் உள்ளது. அவருக்கு துரோகத்தை தவிர வேறு எதுவும் தெரியாது...' என்று கூறியுள்ளார், அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலர் தினகரன். சில ஆண்டுகளுக்கு முன்வரை, பதவிக்காக வயது வித்தியாசம் இல்லாமல் தலைவர்களும், அமைச்சர்களும் ஜெயலலிதாவின் காலில் விழுந்தனர். ஜெயலலிதா முன் நேராக கூட நிற்க மாட்டார்கள். கூன் விழுந்தவர்கள் போல் வளைந்து, குனிந்து நிற்பர். அந்தளவிற்கு காலில் விழும் கலாசாரம் அ.தி.மு.க.,வில் அதிகமாக இருந்தது! அவர்களின் செயல் கண்டு எள்ளி நகையாடிவர்களும், அவமானத்தால் தலை குனிந்த தமிழர்களும் அதிகம்! ஜெயலலிதாவின் மறைவிற்கு பின், அந்த அசிங்கமான கலாசாரமும் மறைந்து விடும் என்று நினைத்தால், சின்னம்மா என்று ஒருவர் வந்தார்; உடனே, அவர் காலிலும் எல்லாரும் விழ ஆரம்பித்து விட்டனர். அதிலும், முதல்வர் பதவிக்காக பழனிசாமி தவழ்ந்து சென்று சசிகலாவின் காலில் விழுந்த காட்சி உலகப் புகழ் பெற்றது. 'ஆமாம்; தவழ்ந்து தான் முதல்வர் பதவிக்கு வந்தேன்...' என்று பழனிசாமியே பெருமையாக அதை ஒப்புக் கொண்டார் என்பது வேறு விஷயம். இருந்த போதிலும், தனக்கு முதல்வர் பதவி கிடைக்க காரணமாக இருந்த சசிகலாவையே கட்சியை விட்டு நீக்கிய பழனிசாமியின் செயலை சசிகலா, தினகரன் போன்றோர் நம்பிக்கை துரோகம் என்கின்றனர். எப்படி நம்பிக்கை துரோகம் ஆகும்? அ.தி.மு.க., என்பது சசிகலா, தினகரன் கட்டி எழுப்பிய கழகமா? பழனிசாமி நம்பிக்கை துரோகம் செய்து விட? குறுக்கு வழியில் ஆட்சியைப் பிடிக்க பார்த்தனர்; அவர்கள் பாணியில் சென்று, அ.தி.மு.க.,வை மீட்டெடுத் தவர் பழனிசாமி. அவர் அப்படி செய்திருக்காவிட்டால், அ.தி.மு.க.,வின் பொதுச் செயலர் ஆகியிருப்பார், சசிகலா. அதன் பின் பழனிசாமி, பன்னீர்செல்வம் உட்பட கட்சியின் பெருந்தலைகள் எல்லாம் இன்றும் சசிகலாவின் காலில் விழுந்தும், அவருக்கு அடிமையாக வளைந்தும் வாழ வேண்டிய அவல நிலை தொடர்ந்திருக்கும். அதற்கு முற்றுப் புள்ளி வைத்து, அ.தி.மு.க.,வினரின் மானம் காத்தவர் பழனிசாமி. அதுமட்டுமா... வெறும் வீடியோ கேஸட் விற்பனையாளராக இருந்த சசிகலா, ஜெயலலிதாவின் தோழியான பின் மிகப்பெரிய கோடீஸ்வரி ஆகிவிட்டார். பண மதிப்பிழப்பு செய்யப்பட்ட காலகட்டத்தில் கூட பணமாக, 450 கோடி ரூபாய் கொடுத்து சர்க்கரை ஆலை வாங்கும் அளவிற்கு சசிகலாவிடம் பணம் குவிந்து கிடந்திருக்கிறது என்றால், அவர் ஜெயலலிதாவின் பெயரைச் சொல்லி எவ்வளவு கொள்ளையடித்திருப்பார்! அப்படிப்பட்ட சசிகலா, அ.தி.மு.க.,வின் பொதுச்செயலர் ஆகியிருந்தால் அம்பானி, அதானியுடன் போட்டிபோடும் அளவிற்கு வளர்ந்திருப்பார். அதைத் தடுத்தவர் பழனிசாமி! அவ்வகையில், சசிகலாவின் வளர்ச்சியை தடுத்த பழனிசாமி, தினகரனுக்கு துரோகியாக, நன்றி மறந்தவராக தெரிந்தாலும், மக்கள் மத்தியில் துரோகி பட்டத்தை சுமந்த தியாகியாகத் தான் தெரிகிறார்! 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை