கூவத்துார் விஷயங்கள் நடக்க வாய்ப்பு!
ஜெ.கோபால்சாமி, சென்னையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 2026 தமிழக சட்டசபைத் தேர்தல், வெளிப்படையில் நான்கு முனைப் போட்டியாகத் தோன்றினாலும், மெஜாரிட்டி யாருக்கு என்று தெரியாத சூழ்நிலையை ஏற்படுத்தி உள்ளது.முதலில், 2021 சட்டசபை தேர்தலில் தி.மு.க., கூட்டணி, 159 இடங்கள்; அ.தி.மு.க., கூட்டணி, 75 இடங்கள். இதைப் பார்த்தால் பெரிய வெற்றி போல தோன்றினாலும், உண்மையில் பல தொகுதிகள் மிகக் குறைந்த ஓட்டு வித்தியாசத்தில் தீர்மானிக்கப்பட்டன.கிட்டத்தட்ட, 70-க்கும் மேற்பட்ட தொகுதிகளில், 10,000-க்கு குறைவான வித்தியாசம்; அதில், 35 - 40 தொகுதிகளில் 5,000-க்கும் குறைவான வித்தியாசம். இந்த அமைப்பில் வெறும் 2 - 3 சதவீத ஓட்டு மாற்றமே, 40 - 50 இடங்களை கைமாறச் செய்யும்.தற்போதைய, 2026-ல் அந்த மாற்றத்தை உருவாக்கும் காரணிகள், ஒன்றுக்கொன்று சேர்கின்றன. வாக்காளர் பட்டியல் திருத்த நடவடிக்கையில், வாக்காளர் பட்டியலில் ஏற்பட்ட பெரிய அளவிலான நீக்கங்கள், ஆளுங்கட்சிக்கு எதிராக, அமைதியான பாதிப்பை ஏற்படுத்தும். அதற்கு மேலாக, விஜ யின் கட்சி, ஆளுங்கட்சி ஓட்டை அள்ளி விடும்.'அரசியல் எதிரி' என்ற தர்க்கப்படி, ஆட்சிக்கு எதிரான மனநிலை கொண்ட வாக்காளர்கள், நேரடியாக அ.தி.மு.க.,விற்கு செல்லாமல், விஜய் கட்சிக்கு ஓட்டு போட்டிருப்பர். இதனால், தி.மு.க., ஓட்டு தளத் தில், 3 - 4 சதவீதம் வரை இழப்பு ஏற்படும்.அ.தி.மு.க., கூட்டணியில் இந்த தாக்கம் குறைவு; விஜய், எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா மீது வெளிப்படுத்திய மரியாதை காரணமாக, அவர்களின் ஓட்டு தளத்தில் பெரிய சிதைவு இல்லை.சீமான் கட்சி 3 - 5 சதவீத ஓட்டு பெற்றாலும், குறைந்த வித்தியாசத் தொகுதிகளில் அதன் தாக்கம் கணிசமானது. இதனுடன் சேரும் அமைதியான, ஆட்சி மீதான எதிர்ப்பலை, கூட்டணிக்குள் உள்ள அதிருப்திகள்... குறிப்பாக காங்., திருமா, கம்யூ., கட்சிகளின் மனக் கசப்புகள், ஓட்டு மாற்றத்தை ஏற்படுத்தும் காரணிகளாகி விட்டன.அ.தி.மு.க.,வில் தேர்தலின் கடைசி வாரம் வரை இழுபறியாக இருந்த கூட்டணி, இறுதியில், 'இது தான் கூட்டணி' என்பதை மனதில் பதிய வைத்து விட்டது. மனக் கசப்புகள் இங்கே, பெரிதளவில் வெளியில் தெரியவில்லை.இந்த கணக்குகளை வைத்துப் பார்த்தால், 7 - 8 சதவீத இழுபறி ஏற்படும் என்று தெரிகிறது. ஓட்டு எண்ணிக்கை நடக்க நடக்க, 'கூவத்துார் விஷயங்கள்' நடக்க, நிறைய வாய்ப்பிருக்கிறது!தேச துரோக செயல் இது!
இரா.ஷண்முகசுந்தரம், விவசாய ஆராய்ச்சியாளர் மற்றும் சமூக ஆர்வலர், திருப்பூரில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: தமிழகத்தில், 4.70 கோடி மக்கள் ஓட்டு போட்டு உள்ளோம். இந்த ஓட்டுகளில் எத்தனை பேர், பணத்திற்காக ஓட்டு போட்டோம், எத்தனை பேர் பணத்தை துச்சமென மதித்து, சிறந்த நிர்வாகம் தேவை என்பதை கவனத்தில் கொண்டு ஓட்டு போட்டுள்ளோம்? ஏழைகள் மட்டுமல்ல; படித்தவர்கள், உயர்ந்த நிலைமையில் இருப்பவர்கள், வசதியான வாழ்க்கை வாழ்பவர்கள் கூட, 'ஓட்டுக்கு பணம் எங்கே?' என்ற எதிர்பார்ப்பில் ஓடியதாக, என் நண்பர் ஒருவர் சொன்னார். மனம் பதைபதைத்தது. தமிழக மக்களாகிய நம்மை, இப்படி கேவலமாக, கையேந்தும் நிலைக்குத் தள்ளியது திராவிட கட்சிகள் தானே! நம் மரியாதை அனைத்தும் ஏலத்திற்குப் போவதை நாம் இன்னும் பார்த்துக் கொண் டிருக்க வேண்டுமா? நடந்து முடிந்த கதை தான்; ஆனாலும், ஓட்டுக்கு காசு வாங்காமல் நிமிர்ந்து நின்ற தமிழர்களுக்கு ஒரு மனமார்ந்த சபாஷ் போடலாம்! கேவலமான பண அரசியலை எதிர்த்து பேசத் துணிந்த சில குரல்கள் இருக்கின்றன. சீமான் மற்றும் அண்ணாமலை போன்றவர்கள், ஓட்டுக்கு பணம் என்பதைக் கேட்டாலே, எரிச்சல் அடைந்தனர். அண்ணாமலை, 'எனக்குத் தெரியாமல் ஓட்டுக்கு பணம் கொடுத்தாலே தோலை உரித்து விடுவேன்' என்று பேசினார். ஆனால், ஓட்டுக்கு காசு வாங்கி தங்கள் உரிமையை விற்பவர்கள், ஒரு தவறை மட்டும் செய்கின்றனர் என்று நினைத்து விட வேண்டாம்... தமிழனின் மானத்தை விற்று விட்டனர்; நம் தமிழர்களின் பழமையான வீரத்தை இழிவுபடுத்துகின்றனர்; நம் பண்பாட்டையே சில்லரையாக மாற்றுகின்றனர். கிட்டத்தட்ட தேசத் துரோக செயல் தான் அது. மனம் பொறுக்கவில்லை, நடந்த தேர்தலில் புழங்கிய பணப் பட்டுவாடாவையும், தங்கம், வெள்ளி வினியோகத்தையும் பார்த்து. சிறப்பு தரிசனம் தவிர்க்கலாமே!
சரவணன் நடேசன், துறையூர், திருச்சி மாவட்டத்தில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: தமிழகத்தில், ஹிந்து அறநிலையத்துறையின் கீழ் பல நுாறு கோவில்கள் உள்ளன. அதன் மூலம் அரசுக்கு வருமானம் வருகிறது. ஒரு நிறுவனத்தின் வளர்ச்சிக்கு, அதன் வாடிக்கையாளர்கள் மிக முக்கிய பங்கு வகிக்கின்றனர் என்றால், கோவில்களின் புகழுக்கு, பராமரிப்புக்கு, பக்தர்கள் தான் முழுமுதற் காரணம். இத்தகைய பக்தர்கள், இலவச தரிசனம் அல்லது கட்டணத்துடன் கூடிய சிறப்பு தரிசனம் என்ற முறையில், இறைவனை வழிபட அனுமதிக்கப் படுகின்றனர். தரிசனத்திற்கான கட்டணம், கோவிலுக்கு தகுந்தாற்போல், 10 ரூபாய் முதல், 500 ரூபாய் வரை வசூலிக்கப்படுகிறது. இதன் மூலம், கோவிலுக்கு சாமி கும்பிட வரும் பக்தர்களை, ஏழை மற்றும் பணக்காரர் என்ற அடிப்படையில், கோவில் நிர்வாகத்தினரே வகைப்படுத்தி விடுகின்றனர். இலவச தரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்கு, கடவுள், நீண்ட தொலைவிலும்; பணம் கொடுத்து தரிசனம் செய்பவர்களுக்கு, கடவுள் மிக அருகிலும் காட்சியளிக்கிறார். மேலும், கோவிலுக்கு காரில் குடும்பத்துடன் வந்தால், அந்தக் காருக்கு நுழைவுக்கட்டணம் என்ற பெயரில் பணம் வாங்கப்படுகிறது. நுழைவுக் கட்டண முறையை ரத்து செய்ய வேண்டும். அண்டை மாநிலங்களில் உள்ள கோவில்களில், இதுபோன்று சிறப்பு தரிசனம் அல்லது கட்டண தரிசனம் என்ற பாகுபாடு இல்லை. மனிதர்கள் அனைவரும் சமம் என்ற அடிப்படையில், கோவிலுக்கு செல்லும் பக்தர்களுக்கு, ஒரே தரிசன வழியை ஏற்படுத்தி உள்ளனர். தமிழக அரசு எவ்வளவோ விஷயங்களுக்கு முக்கியத்துவம் அளித்து வரும் வேளையில், ஹிந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டின் கீழ் வரும் வழிபாட்டுத் தலங்களில் உள்ள கோவில்களில், சிறப்பு தரிசன கட்டண முறையை ரத்து செய்ய வேண்டும். இல்லையெனில், அனைத்து கோவில்களிலும் அதிகபட்சமாக, 10 ரூபாய் கட்டண தரிசனம் என்ற அளவில் நிர்ணயம் செய்ய வேண்டும். ஹிந்து கோவில்கள் தவிர, பிற மதத்தினர் வழிபடும், சர்ச், தர்கா போன்ற இடங்களில், இது போன்ற கட்டண தரிசன முறை, அறவே இல்லை. அடுத்து அமைய உள்ள அரசு, இதை கவனத்தில் கொள்ள வேண்டும்!