மேலும் செய்திகள்
இரட்டை குழல் துப்பாக்கி!
20-Apr-2026
ஆர். என்.மல்லிகை மன்னன், மதுரையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: சட்டசபை தேர்தலுக்கு முன், தான் செல்லும் இடம் எல்லாம், தி.மு.க., 200 தொகுதிகளுக்கு மேல் வெல்லும் என்று கூறிக் கொண்டிருந்தார், தி.மு.க., தலைவர் ஸ்டாலின். ஆனால், அதற்கு நேர்மாறாக அவரது சொந்த தொகுதியிலேயே தோற்றுப் போனார். தி.மு.க., - அ.தி.மு.க., போன்று இலவச பொருட்களையும் பணத்தையும் வாரி இறைக்காமல், தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் மாபெரும் வெற்றி பெற்றுள்ளார். 'புதிதாக ஆரம்பித்த கட்சி, கொள்கை இல்லை, கட்டமைப்பு இல்லை; நடிகர் என்ற நட்சத்திர வெளிச்சத்துக்காக, 10 சதவீத ஓட்டுகள் பெறுவாரே தவிர, ஆட்சி அமைப்பது எல்லாம் கனவில் கூட நடக்காது' என்று பல்வேறு அரசியல் தலைவர்களும், விமர்சகர்களும் கூறிக் கொண்டிருந்த நிலையில், அனைத்து ஊகங்களையும் அடித்து உடைத்து, எம்.ஜி.ஆர்., - ஜெயலலிதா, என்.டி.ராமராவ் போன்று மிகப் பெரிய சாதனை படைத்து விட்டார், விஜய். ஆனாலும், ஆட்சி அமைக்கத் தேவையான பெரும்பான்மை இல்லாததால், தவிக்கிறார். மனம் தளராதீர்கள் விஜய்... அனுபவஸ்தர்கள் உங்களை நெருங்க விடாமல் செய்யும் புல்லுருவிகளைக் களைந்தாலே போதும்; இதுபோன்ற பல பிரச்னைகள் களையப்பட்டு உங்கள் அரசியல் எதிர்காலம் சிறக்கும்! lll இழந்த செல்வாக்கை காங்., மீட்குமா? எஸ்.எ.ஸ்ரீனிவாச சர்மா, ஹைதராபாதில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: தி.மு.க.,வுடனான கூட்டணியை முறித்து, தமிழக வெற்றிக் கழகத்துடன் இணைந்துள்ள காங்கிரஸ், 'விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை' என்பது போல், பா.ஜ., மற்றும் ஆர்.எஸ்.எஸ்., சக்திகளை தமிழகத்திற்குள் நுழையவிடாமல் தடுக்கும் நோக்கிலேயே, த.வெ.க.,வை ஆதரிப்பதாக கூறியுள்ளது. கிட்டத்தட்ட 50 ஆண்டுகளுக்கும் மேலாக தி.மு.க.,வுடன் கூட்டணியில் இருந்த காங்., இதுவரை மாநில அரசில் எந்த அதிகாரத்தையும் பெறாமல், கட்சியின் இருப்பை தக்க வைக்க மட்டுமே கூட்டணியில் அங்கம் வகித்தது. தேவைக்கு மட்டும் பயன்படும் ஊறுகாய் போல் காங்கிரசை தி.மு.க., நடத்தி வந்த போதும், முதுகெலும்பு இல்லாமல் அக்கட்சிக்கு அடிமையாகவே இருந்தது. தேச விரோத சக்திகளை தி.மு.க., ஊக்குவித்த போதும், மொழியை ஒரு கருவியாகப் பயன்படுத்தி, பிரிவினை தீயை பற்றவைத்த போதும், மவுனமாக இருந்த காங்., இன்று, அதிகார பசிக்காக த.வெ.க.,விற்கு தாவியுள்ள நிலையில், தங்களை கொள்கையாளர்கள் போன்று காட்டிக் கொள்ள, பா.ஜ.,வை விமர்சிக்கிறது. அரசியலை தாண்டி மாநிலத்தின் வளர்ச்சியே தனக்கு முக்கியம் என்று கூறியுள்ளார், த.வெ.க., தலைவர் விஜய். மாநிலத்தின் வளர்ச்சி பணிகளுக்கு முழு ஆதரவளிப்பதாக பிரதமரும் கூறியுள்ளார் என்பதை, காங்., நினைவில் கொள்ள வேண்டும். மோடியை எதிர்க்க வேண்டும் என்பதற்காகவே, காங்., இத்தனை ஆண்டுகளாக தி.மு.க.,வை ஆதரித்து வந்தது; துரதிர்ஷ்டவசமாக, மோடி மீதான வெறுப்புணர்வானது, தேச விரோத சக்திகளை அரவணைக்கும் நிலைக்கு காங்கிரசை தள்ளிவிட்டது. ஆர்.எஸ்.எஸ்., மற்றும் பா.ஜ.,வின் மீது பழி சுமத்துவதை மட்டுமே கொள்கையாக வைக் காமல், இனியாவது மக்களுக்கான அரசியலை காங்., கையில் எடுக்க வேண்டும்; அப்போது தான் இழந்த செல்வாக்கை மீட்க முடியும்! lll சுய பரிசோதனை செய்யுங்கள் உதயநிதி! கோ.பாண்டியன், செங்கல்பட்டில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'தேர்தலில் தி.மு.க., பார்க்காத வெற்றியோ, தோல்வியோ கிடையாது. கட்சிக்கு எப்போதுமே சுய பரிசோதனை தேவை' என்று கூறியுள்ளார், அக்கட்சி எம்.எல்.ஏ., உதயநிதி. மேலும், 'சட்டசபை எதிர்க்கட்சி தலைவராக என்னை தேர்வு செய்வது குறித்து, கட்சி தலைவர் முடிவு செய்வார்; எங்கள், எம்.எல்.ஏ.,க்கள் என்ன முடிவு எடுக்கின்றனரோ, அதன்படி செயல்படுவேன்' என்றும் கூறியுள்ளார். கடந்த 20 - 30 ஆண்டுகளாக தி.மு.க.,வில் இருக்கும் தொண்டர்கள், இன்னும், 'போஸ்டர்' ஒட்டிக் கொண்டும், கொடி பிடித்தபடியும் இருக்க, திரைப்படத்தில் ஏழையாக இருந்த ஒருவன், ஒரு பாடலில், பெரும் பணக்காரராக மாறுவது போல், கட்சியில் நுழைந்த குறுகிய காலத்தில், இளைஞரணி தலைவர், எம்.எல்.ஏ., விளையாட்டு துறை அமைச்சர், துணை முதல்வர் என்று உச்சத்தை எட்டியவர், உதயநிதி. ஆட்சி அதிகாரத்தில் இருக்கிறோம் என்ற அகந்தையில், சனாதன தர்மத்தை டெங்கு, மலேரியா போல ஒழிக்க வேண்டும் என்று பேசியவர்; ரெட் ஜெயின்ட் மூவிஸ் பட நிறுவனம் மட்டும் தான், திரையுலகில் இருக்க வேண்டும்; அதன் வாயிலாக பல ஆயிரம் கோடி ரூபாய் சம்பாதிக்க வேண்டும் என்பதற்காக, பல பட நிறுவனங்களை நசுக்கியவரும் இந்த உதயநிதி தான். இவ்வளவு தவறுகளையும், உதயநிதியும், அவரது குடும்பத்தினரும் செய்துவிட்டு, 'தி.மு.க., சுய பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்' என்று கூறுகிறார். கட்சியின் மூத்த தலைவர்கள் முதல், அடிமட்ட தொண்டர்கள் வரை, அனைவரையும் தங்களது குடும்பத்தின் கொத்தடிமைகளாக மாற்றி வைத்துள்ள நிலையில், சட்டசபை எதிர்க்கட்சி தலைவராக தன்னை தேர்வு செய்வது குறித்து, கட்சி தலைவர் முடிவு செய்வார். எம்.எல்.ஏ.,க்கள் என்ன முடிவு எடுக்கின்றனரோ அதன்படி செயல்படுவேன் என்று உதயநிதி கூறுவது எவ்வளவு கேலிக் கூத்து! தி.மு.க., தலைவரும், முன்னாள் முதல்வருமான ஸ்டாலினுக்கு மக்கள் தந்திருக்கும் தீர்ப்பை பார்த்த பிறகும் கூட, மக்களை இன்னமும் முட்டாள்களாகவே நினைத்துக் கொண்டு பேசுகிறார், உதயநிதி. உதயநிதி அவர்களே... உங்கள் குடும்பத்தை தாண்டி, தி.மு.க.,வில் எவராவது ஒருவர் தன்னிச்சையாக முடிவு எடுத்து விட முடியுமா? எனவே, சுய பரிசோதனை செய்து கொள்ள வேண்டியது, தி.மு.க., அல்ல; நீங்களும், உங்கள் குடும்பத்தினரும் தான்! lll வெற்றிக்கு காரணம்! முனைவர் செ.அ.ராகுல் கோல்டன், உதவிப் பேராசிரியர், சென்னையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: நடிகர் விஜய்க்கு கிடைத்துள்ள இந்த வெற்றி, பல எதிர்ப்புகளுக்கு கிடைத்த பதில்! ஒருபுறம், கரூர் சம்பவம், ஜனநாயகன் திரைப்படத்தைச் சுற்றிய சர்ச்சைகள் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கை குறித்த வதந்திகள் என, பல திசைகளில் ஒரே நேரத்தில் விஜய்க்கு அழுத்தம் கொடுக்கப் பட்டது. பொதுவாகவே, அதிகமாக தாக்கப்படும் நபர், அதிகமாக கவனிக்கப்படுவார்; அதிகமாக கவனிக்கப்படும் நபர், ஒரு கட்டத்தில் ஆதரவையும் பெறுகிறார். இந்த உளவியல் கணக்கை தி.மு.க., மறந்து விட்டது. அதனால் தான், 'ஆள்பவர்களே ஆள வேண்டுமா... புதிதாக ஒருவர் அரசியலுக்கு வந்தால், இவ்வளவு தடைகள் விதிப்பார்களா?' என்ற பொதுமக்களின் கோபம் தேர்தலில் எதிரொலித்துள்ளது. அவரை தடுக்க முயன்ற ஒவ்வொரு செயலுக்கும், மக்கள் மனதில் உருவான மிகப் பெரிய எதிர் விளைவு தான் விஜய்க்கு கிடைத்துள்ள இந்த வெற்றி! lll
20-Apr-2026