உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / இது உங்கள் இடம் / முகவரி இல்லாதவரா பன்னீர்செல்வம்?

முகவரி இல்லாதவரா பன்னீர்செல்வம்?

என்.ராமகிருஷ்ணன், பழனியிலிருந்து எழுதுகிறார்: விரைவில் தனிக்கட்சி துவங்கஇருக்கும் முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம், மோடியை சந்திக்க முடியவில்லை என்றதும், 'சீச்சீ... இந்த பழம் புளிக்கும்' என்ற ரீதியில், 'எனக்கும் சுயமரியாதை இருக்கிறது' என்று வசனம் பேசியுள்ளார். அ.தி.மு.க.,வுடன் கூட்டணி வைத்த பின், பா.ஜ., இவரை சீண்டவில்லை. நடிகர் விஜயுடன் பேசிப் பார்த்தார்; அவர் பிடிகொடுக்கவில்லை. அதனால், 'சாட்சிக்காரன் காலில் விழுவதை விட, சண்டைக்காரன் காலில் விழுவதே மேல்' என்று, தி.மு.க.,விடம் மண்டியிட தயாராகி விட்டார். அ.தி.மு.க., தொண்டர்கள் வருத்தப்படுவரே கூட என்று நினைக்காமல், 'கருணாநிதிக்கு நினைவு இல்லம் கட்ட வேண்டும்' என்று சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் கூறியவுடன், முதலில் ஆதரித்து பேசியவர் தான் பன்னீர்செல்வம். அவரது மகனோ, தி.மு.க., ஆட்சியை வெகுவாக புகழ்ந்து தள்ளினார். ஜெயலலிதா இருக்கும்போது இப்படி பேசியிருக்க வேண்டியது தானே... அன்று தி.மு.க.,வினரை தீண்டத்தகாதவர்கள் போல் பார்த்து விட்டு, அவர் மறைந்த பின், நட்புக்கரம் நீட்டுவதற்கு பெயர் என்ன? சசிகலா, தினகரனால் விரட்டப்பட்ட உடன், அவர்களுக்கு எதிராக தர்மயுத்தம் துவங்கிய பன்னீர்செல்வம் பின், அவர்களுடன் ஒட்டி உறவாட எது துாண்டியது? பழனிசாமியிடம் இருந்து அ.தி.மு.க.,வை கைப்பற்ற எவ்வளவோ முயன்று பார்த்தார்; ஆனால், முடியவில்லை. ஒன்றிணைய அறிக்கை மேல் அறிக்கை விட்டு பார்த்தார்; ஒன்றும் நடக்கவில்லை. இவர் சுயமரியாதை உள்ளவராம்! இவரை நம்பிச் சென்ற தொண்டர்கள் தான் பாவம்! கழுதை தேய்ந்து கட்டெறும்பாக ஆன கதை போல், கடைசியில் விஜயை கூட முதல்வராக ஏற்றுக் கொள்ளும் மனநிலைக்கு வந்துவிட்டார். 2026 சட்டசபை தேர்தலுக்கு பின் முகவரி இல்லாதவராகி விடுவார் இந்த சுயமரியாதைக்காரர்!  உண்மையில் இந்தியர் தானா ராகுல்? கு.அருண், கடலுாரில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: உலகின் மூன்றாவது பெரிய பொருளாதார நாடாக முன்னேறிக் கொண்டிருக்கும் நம் நாட்டை பார்த்து, 'இந்திய பொருளாதாரம் செயல் இழந்து விட்டது' என்று கூறியுள்ளார், அமெரிக்க அதிபர் டிரம்ப். கடந்த 2014ல் மோடி பிரதமராக பொறுப்பேற்றது முதல் அனைத்து துறைகளிலும் நம் நாடு வளர்ச்சி பாதையில் பயணிக்க ஆரம்பித்துள்ளதன் வெளிப்பாடு தான், உலக அளவில் பொருளாதாரத்தில் 10வது இடத்தில் இருந்த இந்தியா, இன்று நான்காவது இடத்திற்கு முன்னேறியுள்ளது; விண்ணிலும், மண்ணிலும் பல சாதனைகளை படைத்து வருகிறது. அதிலும், 'ஆப்பரேஷன் சிந்துார்' வாயிலாக, அதி நவீன யுக்தியை கையாண்டு, பாகிஸ்தானை நான்கு நாட்களில், 'போரை நிறுத்துங்கள்' என்று கெஞ்ச வைத்தது நம் ராணுவம். மேலும், சில நாட்கள் போர் நீடித்து இருந்தால், ஒட்டுமொத்த பாகிஸ்தானையே சரணடைய வைத்திருக்கும்! உண்மை இப்படி இருக்க, தான் சொல்லியே இந்தியா போரை நிறுத்தியது என்று தொடர்ந்து கூறிவந்தார், டிரம்ப். அவரது புளுகை, பார்லிமென்ட் கூட்டத் தொடரில், பிரதமர் மோடி வெளிச்சம் போட்டுக் காட்டவே, தன் அண்ட புளுகு வெளிச்சத்திற்கு வந்ததால், பிரதமர் மோடியின் மீது டிரம்புக்கு மிகுந்த கோபம். அதனால் தான், நம் நாட்டு பொருள்களுக்கு, 25 சதவீதம் வரிவிதிப்பும், பாகிஸ்தானுக்கு அதிக சலுகைகளையும் வாரி வழங்கியுள்ளார். இந்நிலையில், காங்கிரஸ் எம்.பி., ராகுல், இந்தியாவின் பொருளாதாரம் இறந்து விட்டது என்று டிரம்ப் கூறியது, மகிழ்ச் சியை ஏற்படுத்தியுள்ளதாக கூறியுள்ளார். 'நீங்கள் உண்மையான இந்தியரா?' என்று உச்ச நீதிமன்றத்தால் கேள்வி எழுப்பப்பட்ட ராகுல் போன்றவர்களுக்கு வேண்டுமானால், 'இந்தியாவின் பொருளாதாரம் செத்து விட்டது' என்று டிரம்ப் கூறியது, மகிழ்ச்சியை தரலாம். ஆனால், உண்மையான ஒவ்வொரு இந்தியருக்கும் தெரியும்... நம் நாட்டின் வளர்ச்சி எத்தகையது என்பது!  வேலை செய்யலைஎன்றால் வீட்டுக்கு அனுப்புங்கள்! வி.ஜி.ஜெயராமன், சென்னையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: சென்னை திருமுல்லைவாயல் அன்னனுார் பகுதியில் என் மனைவி பெயரில் ஒரு சொத்து இருந்தது. அவரது மறைவுக்குப் பின், அச்சொத்து ஒரு விடுவிப்பு பத்திரம் வாயிலாக, என் மூத்த மகன் பெயருக்கு மாற்றப்பட்டது. என் இளைய மகனோ, 85 சதவீத உடல் ஊனமுற்றவர்; தன் அண்ணன் சார்பாக, 'பட்டா' பெயர் மாற்றத்திற்கு விண்ணப்பித்தார். நீண்ட காத்திருப்புக்குப் பின் எந்த முன்னேற்றமும் இல்லாததால், முதல்வர் சிறப்பு பிரிவில், ஒரு புகார் பதிவு செய்யப்பட்டது. அப்புகார் ஏற்கப்பட்டதாக குறுந்தகவலும் வந்தது. பின், ஆவடி தாலுகா அலுவலக ஆர்.ஐ.,யின் வேண்டுகோளின்படி, அனைத்து ஆவணங்களின் நகல்களும் சமர்ப்பிக்கப்பட்டன. அடுத்த ஒரு வாரத்திற்குள் சர்வேயர் ஒருவர் சொத்து இடத்தைப் பார்வையிட்டார். பின், ஆவணங்களை முறையாக சரிபார்த்த பின் பெயர் மாற்றம் செய்யப்படும் என்று, கடந்த ஜன., 9ம் தேதி ஒரு கடிதம் வந்தது. ஆனால், ஏழு மாதங்கள் கடந்தும் எந்த முன்னேற்றமும் இல்லை. இதனால், ஜூலை 15ல் திருவள்ளூர் கலெக்டர் மற்றும் வருவாய் செயலருக்கு மின்னஞ்சல் அனுப்பப்பட்டது. அதற்கும் இதுவரை எந்த பதிலும் இல்லை. இதற்கிடையில், 'உங்களுடன் ஸ்டாலின்' என்ற புதிய திட்டம் அறிவிக்கப்பட்டு, 'புகார்கள், 45 நாட்களுக்குள் தீர்க்கப்படும்' என்று உறுதியளித்துள்ளது, அரசு. இதன் பொருள் என்ன? அதிகாரிகள் தங்களுக்கான பணிகளைச் செய்யாமல் போனதால், இன்று புகார்களைத் தீர்க்க ஒரு சிறப்பு முயற்சி துவங்கப்பட்டுள்ளது என்பது தானே! பொதுமக்களின் வரிப் பணத்தில் சம்பளம் பெறும் அரசு அதிகாரிகள், தங்கள் பொறுப்புகளை சரிவர செய்யவில்லை என்றால், எதற்கு அவர்கள் பணியில் நீடிக்க வேண்டும்? அதிகாரிகள் செய்ய வேண்டிய பணியை ெசய்வ தற்காக அரசு அதற்காக ஒரு திட்டத்தையும் ஏன் அறிவிக்க வேண்டும்? இப்படி ஒரு பிரச்னைக்கு இரு வழிகளில் செலவு செய்தால், மாநிலம் எப்படி முன்னேறும்? அரசு ஊழியர்கள், அதிகாரிகள் தங்கள் பொறுப்புகளை சரிவர செய்யவில்லை என்றால், அவர்களை வீட்டுக்கு அனுப்பும் திட்டத்தை முதலில் கொண்டு வாருங்கள்! அப்போதுதான், வளர்ச்சிப் பணிக்கு செல்ல வேண்டிய பணம் விரயமாவது தடுக்கப்படும்! 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

Prabu
ஆக 12, 2025 18:15

அம்மா காலத்தில் இவர் இத்தகைய செயல் செய்ய துணிவாரா


Prabu
ஆக 12, 2025 18:13

ரெட்டைஇலைக்கு வெந்நீர் ஊற்றும் பன்னீர்


D.Ambujavalli
ஆக 12, 2025 17:20

இன்னும் அரசு ' செயல்முறை ' என்ன என்று புரிந்துகொள்ளவில்லை போலிருக்கிறது 'கையிலே காசு, வாயிலே தோசை' பட்டா மாற்றத்துக்கு tariff rate என்ன என்று கேட்டுக் கொடுத்தால்தான் கோப்பு நகரும் இல்லாவிடில் அதிகாரி ஓய்வில் சென்றபின் கோப்பே காணாமல் போய்விடும்


Anantharaman Srinivasan
ஆக 12, 2025 13:55

சென்னை வி.ஜி.ஜெயராமா.. நீங்க தமிழ்நாட்டின் திராவிட மாடலை இன்னும் புரிந்து கொள்ளவில்லை. லஞ்சம் கொடுத்தால் மனு பரீசிலிக்கப்பட்டு ஸ்டாலின் வீடு தேடிவருவார். இல்லையேல் நீங்கள் என்ன தான் முயற்சித்தாலும் உங்கள் மனுக்கள் தூசி தட்டப்படாது..


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை