உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / இது உங்கள் இடம் / சிதம்பரத்தை பாராட்டலாம்!

சிதம்பரத்தை பாராட்டலாம்!

என்.வைகை வளவன், மதுரையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'பல கட்சிகள் இணைந்து உருவான, 'இண்டியா' கூட்டணி, தற்போது வளர்ச்சி அடையாமல் பலவீனமாக இருக்கிறது. ஆனால், பா.ஜ., பலமான கட்சியாக உருவெடுத்து விட்டது' என்ற உண்மையை வெளிப்படையாக ஒத்துக் கொண்டுள்ளார், காங்கிரசை சேர்ந்த முன்னாள் நிதி அமைச்சர் சிதம்பரம். அதுசரி... நவக்கிரகங்கள் மாதிரி தலைவர்கள் செயல்பட்டால் இண்டியா கூட்டணி எப்படி வளர்ச்சி அடையும்?முன்னாள் பிரதமர் இந்திராவிற்கு எதிராக, ஜெயப்பிரகாஷ் நாராயணன் உருவாக்கிய ஜனதா கட்சி, ஆட்சிக்கு வந்தாலும், சிறிது நாட்களில் கலைந்து போனதற்கு காரணம் என்ன?அதிகார போட்டி!அதேபோன்று தான் இண்டியா கூட்டணி தலைவர்கள் உள்ளனர். ஆளாளுக்கு துணை பிரதமர் கனவில் மிதந்து கொண்டிருந்தனரே தவிர, ஒற்றுமையாக தேர்தலை எதிர்கொள்ளவில்லை. ஒரு மாநிலத்தில் கூட்டணியாகவும், மற்ற மாநிலங்களில் எதிரும் புதிருமாக செயல்பட்டால், எங்கே வெற்றி பெறுவது, ஆட்சியை பிடிப்பது?இந்த லட்சணத்தில் தங்களது கொள்கை கூட்டணி என்று கதை வேறு சொல்கின்றனர். அரசியல்வாதிகளின் கொள்கை என்னவென்று மக்களுக்கு தெரியாதா? ஒரு காலத்தில் இந்தியாவின் பெரும்பாலான மாநிலங்களில் ஆட்சி நடத்திய காங்., கட்சி, இப்போது தன் செல்வாக்கை இழந்து, மாநில கட்சிகளுடன் கூட்டணி வைப்பதன் வாயிலாகவே தேர்தலில் வெற்றி பெற முடிகிறது! அதேநேரம், கூட்டணி ஆட்சியாக இருந்தாலும், ஒற்றை தலைமையின் கீழ் கம்பீரமாக இருக்கிறது, பா.ஜ., கட்சி!சமீபத்தில் பாகிஸ்தான் பயங்கரவாதிகளுக்கு எதிராக நடத்திய, 'ஆப்பரேஷன் சிந்துார்' பிரதமர் மோடியின் செல்வாக்கை அதிகரித்திருப்பதை எவரும் மறுக்க முடியாது. இதைத்தான் சுட்டிக் காட்டியுள்ளார், சிதம்பரம். ஆனாலும், இண்டியா கூட்டணியின் இன்றைய பரிதாப நிலையை ஒளிவு மறைவின்றி எடுத்துக் கூறியதற்காக, சிதம்பரத்தை பாராட்டலாம்!

தட்டிக்கேட்க வேண்டியவர்கள் தடுமாறுவது ஏன்?

கோ.பாண்டியன், செங்கல் பட்டிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: தென் மாவட்டத்திலுள்ள ஓர் அரசு மருத்துவமனை அருகில், டாஸ்மாக் கடையை மாற்றுவதற்கு எதிராக, வழக்கு தாக்கல் செய்ய அனுமதிக்க வேண்டும் என்று, வழக்கறிஞர் ஒருவர் மதுரை உயர் நீதிமன்ற கிளையில் முறையிட்டார்.'டாஸ்மாக் கடையை மருத்துவமனை அருகில் மாற்றுவதற்கு பிறப்பிக்கப்பட்ட அறிவிப்பு எதுவும் இருந்தால் தாக்கல் செய்யுங்கள்' என்பதோடு நீதிபதிகள் நிறுத்தியிருந்தால் பரவாயில்லை; அதை விடுத்து, 'இதனால் உங்களுக்கு என்ன பிரச்னை, டாஸ்மாக் கடைகளுக்கு ஆறு மாதங்களுக்கு எவரும் மது வாங்க செல்லாதீர்கள். வீடுகள் தோறும் விழிப்புணர்வு பிரசாரத்தில் ஈடுபடுங்கள்' என்று கருத்து தெரிவித்துள்ளனர். பள்ளி, கல்லுாரி வளாகங்கள், வழிபாட்டு தலங்கள், மருத்துவமனைகள், தேசிய நெடுஞ்சாலை ஓரம் மற்றும் மக்கள் கூடும் இடங்களுக்கு அருகில் மதுக்கடைகளை திறக்க கூடாது என்பது ஏற்கனவே நடைமுறையில் உள்ளது. இதை கருத்தில் கொண்டு தான் வழக்கறிஞர், வழக்கு தொடர அனுமதி கேட்டார். அத்துடன், மக்களின் பாதுகாப்பை கருத்தில் வைத்து, எந்தெந்த இடங்களில் டாஸ்மாக் கடைகள் திறக்கக் கூடாது என்று அரசே அதற்கு வழி வகுத்துள்ளது. அதை மீற முயற்சிப்பதால் தானே வழக்கறிஞர் நீதிமன்றத்தை நாடியுள்ளார்?விதிமுறையை வகுத்த அரசு, அதை மீறும்போது, அதை தட்டிக் கேட்க வேண்டிய நீதிமன்றம், 'டாஸ்மாக் கடை பக்கம் மக்களை செல்லவிடாமல் தடுங்கள்' என்கிறது. இங்கு, அரசு தான் பட்டித்தொட்டி எங்கும் மதுக்கடைகளை நடத்தி வருகிறது. அத்துடன், ஒருவரை மது அருந்தக் கூடாது என்று தடுக்க, எவருக்கும் உரிமை இல்லை. அப்படி இருக்கும்போது, எதன் அடிப்படையில், 'மக்கள் நினைத்தால் டாஸ்மாக் பக்கம் எவரையும் செல்லவிடாமல் தடுக்க முடியும்' என்கின்றனர் நீதிபதிகள்?மதுக்கடைகளை ஒழிப்பது எப்படி என்று வீடுகள் தோறும் விழிப்புணர்வு பிரசாரத்தில் ஈடுபட வேண்டுமாம்... இது அரசின் வேலையா, மக்களின் வேலையா?அரசு செய்யும் தவறு களை தட்டிக் கேட்க வேண்டியவர்களே, இப்படி தடுமாறினால் நீதியை யார்தான் நிலைநாட்டுவர்?

பாகிஸ்தான் கொட்டத்தை அடக்கும் சிந்து நதி!

சுப்ர.அனந்தராமன், சென்னை யில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'பஹல்காம் தாக்குதலில் ஈடுபட்ட, 'தி ரெஸிஸ்டன்ஸ் பிரண்ட்' க்கு தடை விதிக்கவேண்டும்' என்று, ஐ.நா.,சபையில் இந்தியா முறையிட்டுள்ளது. ஏற்கனவே, லஷ்கர்- - இ - -தொய்பா உட்பட பல பயங்கரவாத அமைப்புகளுக்கு ஐ.நா., தடை விதித்துள்ளது. இதனால், பயங்கரவாத செயல்கள் நின்று விட்டனவா என்ன? வேறு வேறு பெயர்களில் இந்த அமைப்புகள் செயல்பட்டுக் கொண்டுதான் உள்ளன. தற்போதைய சூழ்நிலையில், எந்தவித நியாய உணர்வும், நடுநிலையும், அதிகார பலமும் இல்லாத ஓர் அமைப்பு தான் ஐ.நா., அமெரிக்கா அளிக்கும் பெரும் நிதி இல்லாவிட்டால், இச்சபையை இழுத்து மூடிவிடுவர். சுதந்திரத்திற்கு பின் பலமுறை, இந்தியா - பாகிஸ்தான் போர் நடந்துள்ளது. ஒவ்வொரு முறையும் பாகிஸ்தான் தோற்று, அமெரிக்கா அல்லது ரஷ்யாவின் தலையீடு காரணமாக போர் நிறுத்தம் செய்யப்பட்டு உள்ளது. வங்கதேச விடுதலைப் போரில், இந்திய ராணுவம் வெற்றி பெற்று, கிழக்கு பாகிஸ்தான் என்ற பகுதி வங்கதேசம் என்ற புதிய நாடாக அறிவிக்கப்பட்டது. ஆனால் தற்போது, பாகிஸ்தான் ஆதரவு நாடாக வங்கதேசம் மாறியிருப்பதுடன், அங்குள்ள சிறுபான்மையினரான ஹிந்துக்கள் தாக்கப்படுகின்றனர். காரணம், பாகிஸ்தான்! 'இஸ்லாமியர் அல்லாதவர்களை கொலை செய்வதில் பாவம் இல்லை' என்ற மூர்க்கத்தனமான கோட்பாடுதான், பாகிஸ்தானின் இத்தகைய பயங்கரவாத செயல்களுக்கு மூலகாரணம்!நம் நாட்டின் மீது படையெடுத்த முகம்மது கோரி, செங்கிஸ்கான், அவுரங்கசீப், கஜனி முகம்மது, மாலிக் காபூர் முதல், தற்போதைய பாகிஸ்தான் ராணுவ தளபதி ஆசிம் முனீர் வரை அக்கொள்கை, இடைவிடாமல் இன்று வரை தொடர்கிறது. கசப்பான இந்த உண்மையை போலி மதச்சார்பின்மை பேசுவோர், வெளிப்படையாக ஒப்புக் கொள்வதில்லை. எனவே, 'தி ரெஸிஸ்டன்ஸ் பிரண்ட்' எனும் பயங்கரவாத அமைப்பை தடைசெய்ய ஐ.நா.,விடம் கோருவதை விட, 'பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை முழுதுமாக நம்மிடம் ஒப்படைக்க வேண்டும்; இல்லையேல் சிந்து நதிநீர் நிரந்தரமாக நிறுத்தப்படும்' என்று அறிவிக்க வேண்டும் மத்திய அரசு. கத்தியின்றி, ரத்தமின்றி பாகிஸ்தான் கொட்டத்தை அடக்க இதுவே சிறந்த வழி!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

Anantharaman Srinivasan
மே 20, 2025 19:36

டாஸ்மாக் அரசுக்கு Support ஆக பேசும் நீதிபதிகள் பின்புலம் இதனால் வெட்ட வெளிச்சமாய் தெரிந்து விட்டது.


Anantharaman Srinivasan
மே 20, 2025 19:30

இண்டியா கூட்டணியின் இன்றைய பரிதாப நிலைக்கு காரணம், ஒரு மாநிலத்தின் முதலமைச்சராகயிருப்பதற்கே தகுதியற்ற நபர்களெல்லாம் தேர்தல் முடிவு வருவதற்கு முன்பே பிரதமர் கனவில் மிதந்தது தான். அதை சிதம்பரம் சொல்லாமல் விட்டு விட்டார்.


மூர்க்கன்
மே 20, 2025 11:50

அய்யா சுப்பிர அனந்தராமன், இஸ்லாமியர் அல்லாதவர்களை கொலை செய்வதில் பாவம் இல்லை என்ற மூர்க்கத்தனமான கோட்பாடுதான்?? இப்படி ஒரு கோட்பாடு எங்கே இருக்கிறது? ஆதாரம் தரவில்லையெனில் சேதாராமைய்யா உமக்கு??


மூர்க்கன்
மே 20, 2025 11:45

ஒய் என்.வைகை வளவன் சத்தமா சொல்லாதியும்?? சிந்தூர்ல செல்வாக்காயிப்ட்டலா ??? தேசத்துரோக வழக்கு பாஞ்சிர போவுது???


D.Ambujavalli
மே 20, 2025 04:00

நீதிமன்றமும் ஆளும் கட்சிப்பக்கம் சாய்ந்துவிடுகிறது என்றால், மக்களின் போக்கிடம் எது? இவர்கள் தடை செய்யப்பட இடங்களில் மதுக்கடைகள் திறப்பார்களாம் மக்கள் சுயக்கட்டுப்பாடு, சமூக அந்தஸ்து என்று விலகிச் செல்ல வேண்டுமாம் அன்றைய நாளைப்போல கடையை மூட மக்கள் போராட வேண்டுமாம் இது தனிமனிதப் பிரச்னை இல்லை என்பதை அறியவில்லையா?


புதிய வீடியோ