உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / இது உங்கள் இடம் / வேண்டாம் அரசியல் நாடகம்!

வேண்டாம் அரசியல் நாடகம்!

கே.ரங்கராஜன், சென்னையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: பஹல்காம் துப்பாக்கி சூடு சம்பவத்தில் நாடே பெரும் சோகத்தில் ஆழ்ந்துள்ளது. ஆனால், வி.சி., கட்சி தலைவர் திருமாவளவன், 'உளவுத்துறை என்ன செய்து கொண்டிருந்தது? உள்துறை அமைச்சர் உடனே பதவி விலக வேண்டும்' என்று எரியும் நெருப்பில், எண்ணெய் ஊற்றி கொண்டிருக்கிறார்.கோவை கோட்டை ஈஸ்வரன் கோவில் அருகே குண்டு வெடித்தபோது, தமிழக உளவுத்துறை என்ன செய்து கொண்டிருந்தது? தமிழக அரசை கேள்வி கேட்டாரா திருமாவளவன்? 'மெத்ஆம்பெட்டமைன்' என்ற போதை வஸ்துவை, ஜாபர் சாதிக் கடத்தி வந்தபோது, தி.மு.க., நிர்வாகி என்பதால், அதுகுறித்து கேள்வி கேட்க திருமாவுக்கு நடுக்கமாக இருந்ததா? சென்னை மற்றும் தென்தமிழகத்தில் பயங்கரவாத இயக்கங்களை சேர்ந்த சிலரை என்.ஐ.ஏ., கையும் களவுமாக பிடித்ததே... அவர்கள் பயங்கரவாத வேலைகள் செய்யும் வரை தமிழக உளவுத்துறை என்ன செய்து கொண்டிருந்தது? கடந்த 2023ல் விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே எக்கியார் குப்பதில் 14 பேர், செங்கல்பட்டு மாவட்டம் பெருக்கரணை, பேரம்பாக்கத்தில் எட்டு பேர் என, 22 பேர் கள்ளச்சாராயம் குடித்து இறந்த போதும்; 2024ல் கள்ளக்குறிச்சியில், 68 பேர் உயிரிழந்தபோதும், தமிழக முதல்வர் பதவி விலக வேண்டும் என்று, திருமாவளவன் ஏன் குரல் கொடுக்கவில்லை?தன் அரசியல் வியாபாரம் படுத்துவிடுமே என்ற பயத்தாலா? சீட்டுக்காக தி.மு.க.,விற்கு சாமரம் வீசுங்கள்; ஓட்டுக்காக சிறுபான்மையினருக்கு காவடி துாக்குங்கள். ஆனால், நாட்டுப்பற்றை காட்ட வேண்டிய நேரத்தில், உங்கள் அரசியல் நாடகத்தை அரங்கேற்றாதீர்கள்... சகிக்கவில்லை!

தோல்வி பயத்தில் விமர்சிக்கும் தி.மு.க.,!

அ.சேகர், கடலுாரிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: ஊழல் மற்றும் ஜாதி, மதத்திற்கு எதிரானவர்கள் என்று கூறும் அரசியல் கட்சிகள், தேர்தல் வந்துவிட்டால், கொள்கை களை ஓரங்கட்டி, கூட்டணி அமைத்து போட்டி போடுவது வழக்கம். மேலும், இக்கட்சிகள் மாநிலத்திற்கு ஒரு கூட்டணி என்று போட்டியிடுவதும் உண்டு. உதாரணமாக, தமிழகத்தில் காங்கிரஸ் கட்சிக்கு ஓட்டு கேட்கும் கம்யூனிஸ்ட் கட்சிகள், கேரளாவில் அதற்கு எதிராக அரசியல் செய்கின்றன. ஆம் ஆத்மி கூட, பார்லிமென்ட் தேர்தலில், 'இண்டியா' கூட்டணி என்ற பெயரில், காங்., கட்சிக்கு சார்பாகவும், அதே, டில்லி சட்டசபை தேர்தலில், காங்.,கிற்கு எதிராகவும் போட்டியிட்டது. கடந்த 1967ல் தமிழகத்தில் காங்., கட்சியை வீழ்த்த, தன் முதல் எதிரி என்று கூறிய கம்யூ., கட்சியுடன் ராஜாஜியும், அவரை, 'குல்லுக பட்டர்' என்று கூறி கேலி பேசிய தி.மு.க.,வும், பாகிஸ்தான் பிரிவினை கேட்ட காயிதே முகம்மது இஸ்மாயிலும் ஒரணியாக நின்று, போட்டியிட்டு வெற்றி பெற்றனர். அதன் தொடர்ச்சியாக, 1971ல் காமராஜர் மற்றும் ராஜாஜியை வீழ்த்த, ஹிந்தி ஆதரவு இந்திராவுடன் கூட்டணி வைத்து வெற்றி பெற்றது, தி.மு.க., 'எமர்ஜென்சி' காலத்தில், மிசா சட்டத்தில் அடிபட்ட தி.மு.க., அதனை மறந்து காங்., கட்சிக்கு, 114 இடங்களை தந்து, தான், 112 இடங்களில் மட்டுமே போட்டியிட்டது. கூட்டணி அரசியல் என்பது, 1967லிருந்து இப்போது வரை தொடர்கிறது.மத்தியில் தொடர்ந்து பல ஆண்டுகளாக கூட்டணி ஆட்சிகள் நடந்து வந்துள்ளன. அது போன்று தமிழகத்தில் நடைபெறாததற்கு காரணம், இரு திராவிடக் கட்சிகளின் ஆளுமைமிக்க தலைவர்களாக இருந்த கருணாநிதி, எம்.ஜி.ஆர்., மற்றும் ஜெயலலிதா! திராவிடக் கட்சிகளை தவிர்த்து, அனைத்து அரசியல் கட்சிகளும் தனித்துப் போட்டியிட்டால், பல தொகுதிகளில், டிபாசிட் இழப்பர். இதை அறிந்தே, தங்கள் முதல்வர் கனவை, பகல் கனவாக நினைத்து, கூட்டணிக்கு உடன்படு கின்றன. விஜயகாந்த் கட்சி ஆரம்பித்து, தனித்துப் போட்டியிட்டு, 10 சதவீத ஓட்டுகளை பெற்றாலும் அவரால் தொடர்ந்து தனித்துப் போட்டிப்போட முடியவில்லை. கூட்டணிக்கு தாவினார். கடந்த 2016 முதல் தனித்துப் போட்டியிட்டு வரும் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், இன்னும் எத்தனை தேர்தல்களுக்கு தாக்குப்பிடிப்பார் என்று தெரியவில்லை. தமிழகத்தின் கூட்டணி வரலாறு இப்படி இருக்க, பா.ஜ.,விடம் கூட்டணி வைத்துள்ள அ.தி.மு.க.,வை கடுமையாக விமர்சிக்கின்றனர், தி.மு.க.வினர். கூட்டணி அரசியலுக்கு பிள்ளையார் சுழி போட்ட வர்கள் தாங்கள் என்பதும், இதுவரை தனித்து நின்று ஒரு தேர்தலைக் கூட சந்திக்காத கட்சி என்ற பெருமையும் உடைய தி.மு.க., எதிர்க்கட்சியான அ.தி.மு.க., வின் கூட்டணி குறித்து விமர்சிப்பது, அதன் தோல்வி பயத்தையே காட்டுகிறது!

களங்கம் அற்றதா நீதி?

ப.ராஜேந்திரன், சென்னை யில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'ராஜ்யசபா தலைவர் ஜக்தீப் தன்கர் நீதித்துறைக்கு எதிரான கருத்துகளை கூறுவது அரசியல் அமைப்புக்கு முரணானது. நீதித்துறையை அரசு தாக்கக் கூடாது; அதன் சுதந்திரம் நாட்டின் ஜனநாயகத்திற்கு அடிப்படையானது' என்று கூறியுள்ளார், மூத்த வழக்கறிஞரும், ராஜ்யசபா எம்.பி.,யுமான கபில்சிபல். ஆனால், ஜனநாயக அரசின் உரிமைகளை கூட நீதிமன்றம் தன் கையில் எடுத்துக் கொள்ள முயல்வது, அரசியல் அமைப்புக்கு முரணானது அல்லவா?துணை ஜனாதிபதி தன்கர் கருத்து குறித்து, 'எந்த தனிநபரும், எத்தகைய உயர் பொறுப்பில் இருப்பவரானாலும், அவர் சட்டத்திற்கு கட்டுப்பட்டுதான் நடக்க வேண்டும். இதைத்தான் உச்ச நீதிமன்றம் சுட்டிக் காட்டியுள்ளது' என்று கூறியுள்ளார், முதல்வர் ஸ்டாலின்.நீதிபதியின் முன், 'அமைச்சர் பதவியில் தொடர மாட்டேன்' என்று கூறி, ஜாமினில் வெளிவந்த செந்தில் பாலாஜிக்கு, 'தியாகி' பட்டம் கொடுத்து, அமைச்சர் பதவி அளித்து சிறப்பு செய்ததும் கூட சட்டத்திற்கு உட்பட்ட செயல் தானோ?பொன்முடியின் ஆபாச பேச்சு வழக்கில், உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்த பின்பும், அடுத்தகட்ட நடவடிக்கைகளுக்கு அனுமதி அளிக்காமல் இருந்ததும், சட்டத்திற்கு கட்டுப்பட்டுத்தானா? டில்லியில் உச்ச நீதிமன்ற நீதிபதியின் வீட்டிலிருந்து கட்டுக்கட்டாக பணம் கைப்பற்றப்பட்டதாக செய்திகள் வந்ததே... நீதிபதி குற்றம் செய்யாதவர் என்றால், அவரை ஏன் இடமாற்றம் செய்ய வேண்டும்?இதிலிருந்து நீதித்துறை எப்படி செயலாற்றுகிறது என்பது, மக்களுக்கு வெட்ட வெளிச்சமாகி விட்டதே... இதற்கு, கபில்சிபில் என்ன சொல்லப் போகிறார்? 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Dharmavaan
ஏப் 29, 2025 10:15

நாட்டில் குற்றம் அதிகரிக்க காரணமே நீதி மன்றங்கள்தாம். பிறர் மனித உரிமையை மதிக்காதவனுக்கு தான் மனித உரிமைக்கு அருகதை அற்றவன்


சமீபத்திய செய்தி