உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / இது உங்கள் இடம் / கனவில் திளைக்கும் அரசியல்வாதிகள்!

கனவில் திளைக்கும் அரசியல்வாதிகள்!

என்.ஏ.நாகசுந்தரம், குஞ்சன்விளை, குமரி மாவட்டத்திலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: அப்துல்கலாம், 'கனவு காணுங்கள்!' என்று சொன்னது தான் சொன்னார்... தமிழகத்தில் அரசியல் கட்சி துவங்கியோர்,துவங்குவோர் என, எல்லாரும் முதல்வர் கனவு காண ஆரம்பித்து விட்டனர்; மாடல் சட்டசபையும் நடத்தி பார்க்கின்றனர். அந்த வரிசையில், வி.சி., கட்சியை சேர்ந்ததிருமாவளவனுக்கும், தமிழக முதல்வராகும்ஆசை, மனதில் தறிகெட்டு ஓடுகிறது.இதுவரை வெளிப்படுத்தாத திருமாவின் கனவு, கட்சியின் துணைப் பொதுச்செயலர், ஆதவ் அர்ஜுனா வருகைக்கு பின், பகிரங்கமாக வெளிப்பட்டு வருகிறது. ஆனால், சிலந்தி வலையில் சிக்கிய பூச்சி போல், தி.மு.க.,வின் விடியல் கூட்டணியில்அல்லவா சிக்கி தவிக்கிறார், திருமா... இது புரியாமல், வி.சி., கட்சியினர், கிடைக்கும் மேடைகளில் எல்லாம், 'திருமாவளவன் தமிழக முதல்வராக வேண்டும்' என, வீர உரை நிகழ்த்தி வருகின்றனர்! திருமாவளவனும், அதற்கு ஒத்து ஊதுவதுபோல், 'எனக்கும் முதல்வர் கனவு உண்டு;காலம் காலமாக ஆதிக்க சக்திகளுக்கு அடிமைகளாக இருக்கும் மக்களை, ஆட்சி அதிகார பீடத்தில் அமரும் வகையில் மாற்ற வேண்டும்...' என்கிறார்.அவரின் இந்த ஆசை, புலியைப் பார்த்து, பூனை சூடு போட்ட கதையாக முடியப் போகிறது. தங்களுக்கு எதிராக திருமா களம் இறங்குவதை, தி.மு.க., ஒருபோதும் விரும்பாது. அதனால் தான், தி.மு.க.,வை விட்டு, திருமாவை வெளியே கொண்டு வருவதில், வி.சி., கட்சியினர் குறியாக உள்ளனர்.ஆனால், திருமாவளவனோ, ஆற்றில் ஒரு கால்; சேற்றில் ஒரு கால் என்று, முடிவு எடுக்க முடியாமல் தவிக்கிறார். தி.மு.க., - அ.தி.மு.க.,வை தாண்டி பிற கட்சிகள் தமிழகத்தில் ஆட்சியை பிடிப்பது,கற்பனைக்கு நன்றாக இருக்கும்; நிஜத்தில், அது, கடினமான காரியம் என்பதை, வி.சி., போன்ற கட்சிகள் உணர வேண்டும்!

நாமே கெடுக்கிறோம், நாமே தவிக்கிறோம்!

வி.எஸ்.ராமு, செம்பட்டி,திண்டுக்கல் மாவட்டத்திலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: திருநெல்வேலி, தாமிரபரணி ஆற்றில், கழிவுநீர் கலக்கும் பகுதிகளை, உயர் நீதிமன்ற நீதிபதிகள் ஆய்வுசெய்து,அதிகாரிகளை கண்டித்துஉள்ளனர். நீதிபதிகளே களத்தில் இறங்கி ஆய்வு செய்வது ஒரு ஆரோக்கியமான நிகழ்வு. ஆட்சியாளர்கள்,அதிகாரிகள் செய்ய வேண்டிய பணிகளை, ஆய்வுகளை நீதிபதிகள் களத்தில் இறங்கிச் செய்து கொண்டிருக்க முடியாது.தமிழகத்தில் தாமிரபரணிமட்டுமல்ல; கிராமங்களில் பருவ மழைக்காலத்தில் மழை பெய்து, கண்மாய் மறுகால் போகும் நீர்வழிப்பாதை முதற்கொண்டு, அனைத்துநீர்வழித் தடங்களிலும் அப்பகுதி சாயக்கழிவு, சாக்கடை நீர் கலக்கிறது; குப்பை கழிவுகள் கொட்டப்படுகின்றன.விவசாயத்திற்கு தண்ணீர் இல்லை; தண்ணீர் பங்கிடுவதில் சிக்கல் உள்ளது; குடிக்க தண்ணீர் இல்லை என, காலிக்குடங்களுடன்பொதுமக்களும், விவசாயிகளும் சாலை மறியலில்ஈடுபடுகின்றனர். அதே வேளையில் அப்பகுதியில்உள்ள நீர்நிலைகளை, கண்போல பாதுகாக்கத் தவறி விடுகின்றனர்.நீர்வழிப் பாதையில் குப்பை கொட்டுவதை தடுக்க, கடுமையான நடவடிக்கை எடுத்து அபராதம் விதிப்பதை, உள்ளாட்சி நிர்வாகம், துடிப்புடன் செய்தாக வேண்டும். நீர்நிலைகளில் குப்பை கொட்டுவது, கோவிலுக்குள்குப்பை கொட்டுவதற்கு சமம். நீர்நிலைகளே, நாட்டின் இதயமாகவும், ரத்த நாளங்களாகவும் உள்ளன.கிராமப் பகுதிகளில், இறைச்சிக் கழிவுகளை ஆங்காங்கே கொட்டுவதால்,தெருநாய் தொல்லை அதிகரித்து, மக்களுக்கு ஆபத்தைஏற்படுத்தி வருகிறது.கிராமப் பகுதிகளில் உள்ள நர்சிங் ஹோம், கிளினிக், மருத்துவமனை ஆகியவற்றின் கழிவுகளை,அவற்றைப் பராமரிப்போர்,ஆங்காங்கே கொட்டி விடுகின்றனர். இதை, அப்பகுதியில் உள்ள சுகாதார ஆய்வாளர்கள், உள்ளாட்சிநிர்வாகத்தினர் கண்டு கொள்வதில்லை. இதனால்நோய் பரவல் அதிகரிக்கிறது;இதை கட்டுப்படுத்த வேண்டும். கிராமங்களில் சிறு ஓடைமுதற்கொண்டு மாநிலம் முழுதும் உள்ள நீர்வழிப்பாதையில் எங்கெல்லாம்கழிவுநீர் கலக்கிறது, குப்பைகொட்டப்படுகிறது, ஆக்கிரமிப்பு உள்ளதுஎன்பது குறித்து, முழுமையாக சர்வே செய்ய வேண்டும். கூட்டுக்குடிநீர் திட்டங்கள் மட்டுமின்றி, உள்ளூர் நீர்நிலைகளையும் மதித்து, அதன் மூலமாகவும் குடிநீர் பெற, உள்ளாட்சி நிர்வாகம் தொடர்ந்து ஆர்வம் காட்ட வேண்டும்.நீர்நிலைகளை, நீர்வழிப்பாதைகளை துாய்மையாகவைத்திருந்தால்தான், நிலத்தடி நீர் சுகாதாரமாக கிடைக்கும்.சுயநலப்போக்கு, சோம்பேறித்தனம், சுரண்டல், இயந்திர வாழ்க்கை காரணமாக, நல்ல நீர்நிலைகளைக் கெடுத்தபின், குடிநீருக்காக கூட்டம் கூட்டமாக அலையலாமா? 

சு ரணையே இல்லாமல் மாறி விட்டோமே?

வே.கணபதி, கடையநல்லுார்,நெல்லை மாவட்டத்திலிருந்துஅனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: சென்னை முதல் தமிழக குக்கிராமங்கள் வரை,அரசு நிகழ்ச்சிகள் பல நடக்கின்றன. இதில் அமைச்சர்கள், உள்ளாட்சிபிரதிநிதிகள், கலெக்டர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள், அரசின் சாதனையை, பொதுமக்களுக்கு விளக்குகின்றனர்; நலத்திட்ட உதவிகள் வழங்குகின்றனர்.இதுபோன்ற நிகழ்ச்சிகள்நடக்கும்போது, மேடைகளில் அமர்ந்திருக்கும் அமைச்சர் உள்ளிட்ட மக்கள்பிரதிநிதிகள், மேடைமுன் அமர்ந்திருக்கும் முக்கியஸ்தர்களுக்கு மட்டும், ஸ்நாக்ஸ், காபி வழங்கப்படு கிறது. அவர்களும், பொதுஇடம் என்றுகூட பாராமல்,அருகில் உள்ளவர்களிடம் பேசியவாறே, ஸ்நாக்ஸ்களை ரசித்து சாப்பிட்டு மகிழ்கின்றனர்.தென்காசி புத்தகத் திருவிழா துவக்க நிகழ்ச்சியில், அமைச்சர், எம்.பி.,- எம்.எல்.ஏ.,க்கள், கலெக்டர் என மேடையில்உள்ளவர்களுக்கும், மேடைக்குக் கீழே முதல் வரிசையில் அமர்ந்திருந்த முக்கியமானவர்களுக்கும்ஸ்நாக்ஸ் வழங்கப்பட்டது.புத்தகத் திருவிழாவில், பெற்றோருடன் ஏராளமானகுழந்தைகளும் வந்திருந்தனர். எனக்கு முன்னே, இரண்டாம் வரிசையில்அமர்ந்திருந்த ஒரு குழந்தை,தனக்கும் ஸ்நாக்ஸ் கிடைக்கும்என, ஆர்வத்துடன் காத்திருந்தது. ஆனால், முதல் வரிசையுடன் நின்று விட்டது ஸ்நாக்ஸ்.சற்று நேரம் காத்திருந்த குழந்தை, தன் தாயை நச்சரிக்கத் துவங்கியது. எனக்கு அதற்குமேல் அந்த குழந்தையின் முகத்தை பார்க்க தைரியமில்லாமல்,அரங்கத்தில் இருந்து வெளியேறி விட்டேன்.ஒரு பொது இடம் என்றுகூட பாராமல், எவ்வாறு இவர்களால் இப்படி நடந்துகொள்ள முடிகிறது என்று வியப்பாக இருந்தது.உலகிற்கே நாகரிகம் கற்பித்தவன் தமிழன் என்று,எப்படி இவர்களால் பீற்றிக்கொள்ள முடிகிறது?விழாவில் கலந்துகொள்ளும் முக்கியஸ்தர்களுக்கு சிற்றுண்டி, காபி வழங்குவது மிகவும் நியாயம்தான். ஆனால், அதற்கு இடம், பொருள் கிடையாதா? தனியாக ஒருஇடம் ஒதுக்கி, அங்கு வைத்து வழங்கக் கூடாதா?நாம் ஏன், சுரணையே இல்லாமல் மாறி விட்டோம்?


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை