உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / இது உங்கள் இடம் /  ஜனநாயகத்திற்கு பெருமை!

 ஜனநாயகத்திற்கு பெருமை!

கே.அருண், புவனகிரியில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: இந்தியர்கள் ஒவ்வொருவருக்கும் இந்நாட்டில் என்ன அதிகாரம் உள்ளது என்பதை, நம் அரசியல் அமைப்புச் சட்டத்தில், மிக நேர்த்தியாகவே வரையறை செய்யப்பட்டுள்ளன. அவ்வகையில், ஜனாதிபதி மற்றும் கவர்னருக்கு என்ன அதிகாரம் உள்ளது என்பதை தெளிவாகவே வகுத்துள்ளது. இருப்பினும், அவ்வப்போது மாநில அரசு சட்டசபையில் இயற்றி அனுப்பும் சில மசோதாக்களின் மீது எந்தவொரு முடிவும் எடுக்காமல், கவர்னர்கள் காலதாமதம் செய்யும் போது, மாநில அரசுக்கும், கவர்னருக்கும் முட்டல் மோதல் ஏற்படுவது வழக்கம். அவ்வகையில், சட்டசபையில் இயற்றிய, 10 மசோதாக்களுக்கு அனுமதி வழங்காமல், கவர்னர் ரவி காலதாமதம் செய்து வருவதாக கூறி, உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது, தமிழக அரசு. இவ்வழக்கில் இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வு, ஏப்., 8ல் இந்திய அரசியலமைப்பு சட்டம் 142ன் கீழ், தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி, அந்த மசோதாக்களுக்கு அனுமதி அளித்தது. அத்துடன், 'மாநில அரசுகள் அனுப்பும் மசோதாக்கள் மீது கவர்னர் ஒரு மாதத்திற்குள்ளும், ஜனாதிபதி மூன்று மாதங்களுக்குள்ளும் முடிவெடுக்க வேண்டும்' என்றும் காலக்கெடு விதித்தது. இத்தீர்ப்பு, நாடு முழுதும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அரசியல் அமைப்புச் சட்டம் ஜனாதிபதி, கவர்னருக்கு கொடுக்கப்பட்ட அதிகாரத்தில் நீதிமன்றம் தலையிடுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுகுறித்து ஜனாதிபதி திரவுபதி முர்மு, உச்ச நீதிமன்றத்திற்கு, 14 கேள்விகளை எழுப்பினார். அக்கேள்விகளுக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி உட்பட ஐவர் அடங்கிய அரசியல் சாசன அமர்வு பதில் அளிக்கையில், 'ஜனாதிபதி மற்றும் கவர்னர்களுக்கு காலக்கெடு விதிக்க நீதிமன்றத்திற்கு அதிகாரம் இல்லை' என்றும், 'இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் 200வது பிரிவின் கீழ், கவர்னரின் ஒப்புதல் இல்லாமல், சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட சட்டத்தை நடைமுறைக்கு கொண்டு வர முடியாது' என்று கூறி, 'கவர்னரின் சட்டம் இயற்றும் பணியை வேறு எந்த அரசியலமைப்பு அதிகாரமும் மாற்றம் செய்ய முடியாது' என்று கூறிவிட்டது. மேலும், 'உச்ச நீதிமன்றம் தன் சிறப்பு அதிகாரம் என்று, பிரிவு 143 ன் கீழ் ஆய்வு செய்ய எந்த அதிகாரமும் இல்லை' என்று கூறி, இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வு, 10 மசோதாக்களுக்கு கொடுத்த அனுமதி உத்தரவை ரத்து செய்துள்ளது. அதேபோன்று, கவர்னர் மற்றும் ஜனாதிபதி எடுக்கும் முடிவுகள், சட்டமாக மாறுவதற்கு முன், நீதிமன்றம் விசாரணைக்கு உட்பட்டது அல்ல என்று உறுதியாக கூறிவிட்டது. எப்படி பார்த்தாலும், இத்தீர்ப்பு, ஜனாதிபதி மற்றும் கவர்னருக்கு தான் அதிக அதிகாரம் உள்ளதாக நினைக்க வைக்கிறது. மேலும், சட்டசபையில் நிறைவேற்றி அனுப்பும் மசோதாவுக்கு ஒப்புதல் வழங்காமல் கால தாமதம் செய்தால், அந்தச் செயல்பாட்டை நீதிமன்ற ஆய்வுக்கு உட்படுத்தி, தேவைப்பட்டால் கவர்னர்களுக்கு குறிப்பிட்ட விஷயத்தில் மட்டும் வரையறுக்கப்பட்ட அளவில் உத்தரவு பிறப்பிக்க முடியும். ஆனாலும், அனைத்து வழக்குகளிலும் நீதிமன்றம் அப்படி உத்தரவுகளைப் பிறப்பிக்க முடியாது என்றும் கூறியுள்ளது. இத்தீர்ப்பின் வாயிலாக நாம் அறிவது என்னவென்றால், ஜனாதிபதி மற்றும் கவர்னருக்கு நீதிமன்றம் பரிந்துரை மட்டுமே செய்ய முடியும். இதனால், கவர்னர் மற்றும் ஜனாதிபதிக்கு தான் அதிக அதிகாரம் என்பதையும் உறுதி செய்கிறது. எது எப்படி இருந்தாலும், சட்டசபையில் இயற்றும் மசோதாக்கள் நியாயமானதாக இருந்தால், கால தாமதம் செய்யாமல், கவர்னர் அதற்கு ஒப்புதல் அளிக்க வேண்டும். நீ பெரியவனா, நான் பெரியவனா என்ற மோதலில் ஈடுபடாமல், ஒருவருக்கு உள்ள அதிகாரத்தில் மற்றவர் தலையிடாமல், வரம்பு மீறாமல் செயல்படுவது தான் அரசியலமைப்புச் சட்டத்திற்கும், ஜனநாயகத்திற்கும் பெருமை சேர்க்கும்! lll நாட்டுக்கு நல்லதல்ல! அ.அன்பழகன், நாகர்கோவிலில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் குறித்து, 'இந்திய குடிமகன் ஒவ்வொருவரும் , தாங்கள் இந்நாட்டின் குடிமகன்தான் என நிரூபிக்க வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டுள்ளனர்' என்று குமுறியுள்ளார், முதல்வர் ஸ்டாலின். அதில் என்ன தவறு இருக்கிறது? மக்கள்தொகை கணக்கெடுப்பு, வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பில், தான் ஓர் இந்திய குடிமகன் தான் என்பதை உறுதிப்படுத்த வேண்டியது ஒவ்வொருவரின் கடமை அல்லவா? இதில் தயக்கமும், பயமும் எதற்கு? நாம் என்ன வங்கதேசத்திலிருந்து வந்துள்ளோமா அல்லது பாகிஸ்தான், மியான்மரில் இருந்து வந்துள்ளோமா... பயப்பட? எந்த மதத்தை சேர்ந்தவராக இருந்தாலும், தாங்கள் இந்தியர் எனும் போது, அதை உறுதிபடுத்துவதில் என்ன தயக்கம்? 'தேர்தல் கமிஷன் வாயிலாக, மத்திய அரசு இப்படி ஒரு சுமையை எல்லார் மீதும் திணித்துள்ளது' என்று மோடி அரசை வசைப்பாடி, முதலைக்கண்ணீர் வடிக்கிறார், முதல்வர். அப்படியெனில், இறந்தவர்களின் ஓட்டுகளையும், இடமாறி சென்றவர்களின் ஓட்டுகளையும், இரட்டை ஓட்டுரிமை வைத்திருப்போரையும் எப்படி இனம் கண்டு, அதை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கி, நேர்மையான தேர்தல் நடக்க ஒத்துழைக்கப் போகிறார் முதல்வர்? சட்டசபை எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி கூறியது போல், 21 ஆண்டுகளுக்குப் பின் நடக்கும் எஸ்.ஐ.ஆர்., பணியை பயங்கரவாத செயலைப்போல சித்தரித்து பயமுறுத்துவதேன்? இரட்டைப் பதிவு, இறந்தவர் பட்டியல், அத்துமீறி குடியேறிய அயல் நாட்டவர்களை கண்டறிவது தானே எஸ்.ஐ.ஆரின் நோக்கம். நேர்மையான தேர்தலுக்கு இது அவசியமல்லவா? 'எஸ்.ஐ.ஆர்., படிவத்தை பார்த்தாலே தலை சுற்றுகிறது' என்கிறார் முதல்வர். எதற்கு தலை சுற்ற வேண்டும்... அதுதான், எஸ்.ஐ.ஆர்., படிவத்தை எப்படி பூர்த்தி செய்வது என்பது குறித்து நாளிதழ்களிலும், தொலைக்காட்சிகளிலும், சமூக வலைதளங்களிலும் எளிமையாக சொல்லித் தருகின்றனரே... அதைப் பார்த்தாலே, எளிதாக பூர்த்தி செய்து விடலாமே! நான்கூட, தினமலர் நாளிதழ் பார்த்துதான் படிவத்தை பூர்த்தி செய்தேன். அப்படியும், 2005 வாக்காளர் பட்டியலில் என் பெயர் இருக்கிறதா என்பதை உறுதிபடுத்த, தொகுதி பொறுப்பாளரிடம் போன் செய்து கேட்டபோது, அவர் என் பெயர் இருப்பதை உறுதி செய்து, அப்பட்டியலை வாட்ஸாப் வாயிலாக அனுப்பினார். ஓரிரு நிமிடங்களில் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து முடித்து விட்டேன். தேர்தல் முறையாக நடக்க, அரசியல் கட்சிகள்தான் பூரண ஒத்துழைப்பு தர வேண்டும். அதை விடுத்து, தேர்தல் கமிஷனை ஏதோ ஓர் அரசியல் கட்சிபோல் உருவகப்படுத்தி, அதனுடன் மோதுவது நாட்டுக்கு நல்லதல்ல! lll


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

D.Ambujavalli
நவ 29, 2025 06:48

நூறு ஆண்டுகளுக்கு முன் இறந்தவர்கள் போட்டுவந்த ஓட்டுகளும், காலையில் ராமன், மாலையில் கோவிந்தன் என்று ரெட்டை ஓட்டுப்போட்டவர்களும், ஒரே வீட்டில் 300 ஓட்டுகள் உள்ள மர்மமும் வெளிப்பாட்டுவிட்டால் எத்தனை வாக்குகள் குறைந்துவிடும் பாவம் பதற்றமயம், பயமும் தான் சேர்ந்து bp ஏறிப்போய் தலை சுற்றுமாயிருக்கும்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை