உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / இது உங்கள் இடம் / உடனடி தண்டனை வேண்டும்!

உடனடி தண்டனை வேண்டும்!

பொ.ஜெயராஜ், பாம்பனார், இடுக்கி மாவட்டம், கேரளாவில் இருந்து அனுப்பிய, ‘இ – மெயில்’ கடிதம்: தனியார் பள்ளி களுக்கு அங்கீகாரம் வழங்க, 100 கோடி ரூபாய் லஞ்சம் வசூலித்ததாக, தி.மு.க., ஆட்சியில் பள்ளி கல்வித்துறை அமைச்சராக இருந்த மகேஷ் மீது, வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது. அவ்வழக்கு தொடர்பாக, தற்போது அவரை கைது செய்துள்ளது, த.வெ.க., அரசு. ஒரு குற்றவாளி தப்பித்தால் கூட பரவாயில்லை; ஒரு நிரபராதி தண்டனை பெற்று விடக் கூடாது என்கிறது, நம் சட்டம். ஆனால், ஏழைகள் தவறு செய்தால், உடனே தண்டனை கிடைக்கிறது. அரசியல்வாதிகள், பணபலம் மிக்கவர்கள் தவறு செய்தால், அது தொடர்பான வழக்கைக் கூட பதிவு செய்ய முடிவதில்லை. இதற்கு, மிகச் சிறந்த உதாரணம், கிரானைட் தொழிலதிபர் வீரமணியை கூறலாம்! கடந்த தி.மு.க., ஆட்சிக் காலத்தில் புகார் கொடுக்கப்பட்ட போதும், அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை, அன்றைய அரசு. அப்படியே, அபூர்வமாக ஒரு சிலர் மீது வழக்கு பதியப்பட்டாலும், அவர்கள் தங்கள் பணபலம், அதிகார பலம் மற்றும் சட்டத்தில் உள்ள ஓட்டைகளை பயன்படுத்தி, வாய்தா மேல் வாய்தா வாங்கியே, பல ஆண்டுகளுக்கு வழக்கை இழுத்தடித்து, கடைசியில், தண்டனையில் இருந்தே தப்பி விடுகின்றனர். அதேபோன்று, மக்கள் பிரதிகள் மீதான வழக்குகளை விசாரிக்க, தனி நீதிமன்றம் இருந்த போதிலும், அதனால், பெரிதாக பலன் கிடைத்ததாக தெரியவில்லை. பல முன்னாள் அமைச்சர்கள் மீது ஊழல் வழக்குகள் இருந்தும், அவர்களுக்கு உடனடியாக தண்டனை கிடைக்காததால், அவர்கள் மீண்டும், மீண்டும் தேர்தலில் போட்டியிட்டு, அமைச்சர், எம்.பி.,– எம்.எல்.ஏ.,க்களாக அதிகாரத்தில் அமர்ந்து, மீண்டும் ஊழல் செய்கின்றனர். அதனால், மக்கள் பிரதிநிதிகள் மீதான வழக்குகளை விரைந்து முடித்து, அவர்களுக்கான தண்டனையை வழங்க வேண்டும். அப்போது தான், அரசியல்வாதிகள் தவறு செய்ய பயப்படுவர்; ஊழலும் குறையும். எனவே, த.வெ.க., அரசு, அன்பில் மகேஷை கைது செய்ததுடன் நின்று விடாமல், விரைவில், தண்டனை பெற்றுத்தரவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்! lll


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Anantharaman Srinivasan
அக் 30, 2026 18:56

மகேஷ் மனசாட்சியை ஒதுக்கி வைத்துவிட்டு கௌரவம் பார்க்காமல் தவெக வில் சேர்ந்து விட்டால் விஜயபாஸ்கர் கள் போல் வெற்றிக்கழகத்தில் மாவட்ட செயலாளராகி விடலாம்.


Lakshminarasimhan
அக் 30, 2026 07:47

அன்பில் மகேஷ் நாளையே த வெ க வில் இணைந்து அமைச்சர் பதவி பெற்று இந்த வழக்கில் இருந்து விடுதலை ஆகிடுவார் இதுவும் ஏறத்தாழ குட்கா விஜயபாஸ்கர் கேஸ் போல தான் போகும்