உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / இது உங்கள் இடம் /  திறமைக்கே முன்னுரிமை!

 திறமைக்கே முன்னுரிமை!

சொ.காளிதாசன், பண்ருட்டியில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'நீதிபதிகள் நியமனம் என்பது முன்னேறிய வகுப்பினருக்கானது மட்டும் அல்ல; பட்டியலினத்தவர், பிற்படுத்தபட்ட வகுப்பினர் என அனைத்து தரப்பினருக்கும் பிரதிநிதித்துவம் தர வேண்டும்' என்று ராஜ்ய சபாவில் பேசியுள்ளார், தி.மு.க., - எம்.பி., வில்சன். மூத்த வழக்கறிஞராக இருந்தும், நீதிபதிகள் நியமனத்தில் ஜாதிய இடஒதுக்கீடு இல்லை என்பது தெரிந்தும் துாண்டில் வீசியுள்ளார், வில்சன். நீதிபதிகள் நியமனத்திற்கு தகுதியும், திறமையும் தான் தேவையே தவிர, ஜாதி அல்ல. நம் நாட்டில் தற்போது ஜாதி புகமுடியாத இடம் நீதித் துறை மட்டுமே! ஜாதி பிரதிநிதித்துவம் உள்ள பார்லிமென்ட், சட்டசபைகளில் என்ன நிகழ்கிறது? அன்றாடம் கூச்சல், குழப்பம், வெளிநடப்பு என, அரசு அலுவல்களில் தடை ஏற்பட்டு, சபை ஒத்தி வைக்கப்படும் அவல நிலையே உள்ளது. திறமைக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுக்கும் இடங்களில் கூட, இடஒதுக்கீடு கேட்டு மல்லுக்கட்டும் வில்சனை போன்றவர்கள், தாங்கள் சார்ந்த கட்சிகளில் அதை வலியுறுத்த மறுப்பது ஏன்? சமூகநீதி என வாய்ச் சவடால் விடும் திராவிட கட்சிகள் தங்கள் வழக்கறிஞர்கள் பிரிவில் பட்டியலினத்தவர், பிற்படுத்தபட்ட வகுப்பினருக்கு எத்தனை சதவீதம் ஒதுக்கியுள்ளனர்? தங்கள் ஆட்சியில் எத்தனை சதவீதம் பேரை அமைச்சர்களாக்கி உள்ளனர்? ஏன் அவர்களுக்கு தகுதி, திறமை இல்லையா? காமராஜர் அமைச்சரவையில் பட்டியலினத்தை சேர்ந்த கக்கன் உள்துறை உட்பட, எட்டு முக்கிய துறைகளின் அமைச்சராக இருந்துள்ளாரே... இதற்கு அவரின் ஜாதியா காரணமாக இருந்தது? தகுதியும், திறமையும் இருந்ததால் தானே இத்தனை துறைகளையும் அவரால் சிறப்பாக நிர்வாகம் செய்ய முடிந்தது! எனவே, நீதிபதியாக விரும்பும் எஸ்.சி., - எஸ்.டி., - பி.சி., - ஓ.பி.சி., என எந்த பிரிவினராக இருந்தாலும், அவர்கள் தங்கள் தொழிலுக்கான திறமையை வளர்த்துக் கொண்டு, அதற்காக முயற்சிக்க வேண்டுமே தவிர, எல்லாவற்றிலும் குறுக்கு வழியில் பலனடைய நினைக்க கூடாது! lll தமிழக மக்கள் கண்குளிர கண்டு களிக்கலாம்! எல்.முருகராஜ், சென்னையில் இருந்து எழுதுகிறார்: தமிழக காங்கிரசார் பொதுவாக பிற கட்சியினருடன் அடிதடிக்கு செல்வதில்லை. காரணம், அவர்களுக்குள் அடித்துக் கொள்ளவே நேரம் போதாது! தற்போது, காங்.,கின் ஏகபோக, 'மானஸ்தராக' உருவெடுத்துள்ளார், அக்கட்சியின் எம்.பி., மாணிக்கம் தாகூர். 'எத்தனை நாளைக்குத்தான், தி.மு.க.,விற்கு அடிமையாகவே இருப்பது... எங்களுக்கும் ஆட்சி அதிகாரம் வேண்டும்' என்று அவர் கொடி பிடிக்கவே, தமிழக காங்., களம் சூடுபிடிக்கத் துவங்கியுள்ளது. விளைவு, 'ஆட்சி அதிகாரம்' கேட்டு முழங்கும் துடிப்பான தொண்டர்கள் ஒருபுறம் என்றால், 'இப்படியே பேசிக் கொண்டிருந்தால் உள்ளதும் போய் விடுமோ' என அஞ்சுவோர் மறுபுறம் என, காங்., இரண்டாக பிளவுபட்டுள்ளது. இந்த இரு தரப்புக்கும் இடையே பஞ்சாயத்து செய்து வைக்க, சமீபத்தில் அக்கட்சியின் அகில இந்திய பொதுச்செயலர் வேணுகோபால் வந்திருந்தார். இவரது தலைமையில், சென்னை முகப்பேரில் ஒரு கூட்டமும், அதைத் தொடர்ந்து பாதயாத்திரையும் நடந்தது. கூட்டம் துவங்கியது தான் தாமதம்... ஆளாளுக்கு வேட்டியை மடித்துக் கட்டி, ஒருமையில் பேசி, மல்லுக்கட்டத் துவங்கி விட்டனர். நிலைமை கைமீறிப் போவதை உணர்ந்த தலைவர்கள், அவசர அவசரமாக மேடையில் இருந்து இறங்கி, பாதயாத்திரையைத் துவங்கினர். ஆனாலும், தொண்டர்கள் விடுவதாக இல்லை. இரு கோஷ்டியினரும் தங்கள் பலத்தைக் காட்ட, தலைவர்களுக்கு முன்பே முட்டி மோதிக் கொண்டதில், பலருக்குச் சட்டை கிழிந்து கந்தலானது. இதில், தொலை நோக்குப் பார்வையோடு, முன் எச்சரிக்கையாக மாற்றுச் சட்டை கொண்டு வந்தவர்கள், காரிலேயே சட்டையை மாற்றி, கெத்தாக பாதயாத்திரை சென்றனர். சட்டை கொண்டு வராதவர்களோ, தோளில் இருந்த துண்டைப் போட்டு கிழிசலை மறைத்தபடி சென்றனர். இதில் துண்டு அணியாதவர்கள் தான் பாவம்... கிழிந்த சட்டையுடனேயே, பாதயாத்திரையை நிறைவு செய்து, 'தியாகி'களைப் போல் காட்சியளித்தனர். அதுசரி... சண்டையில் கிழியாத சட்டை உண்டா, சத்தியமூர்த்தி பவனில் காங்கிரசார் போடாத குஸ்தி தான் உண்டா? நுாற்றாண்டு கண்ட ஒரு தேசிய கட்சியின் தொண்டர்கள், அக்கட்சி தலைவர்கள் முன்பே, இப்படி குஸ்தி போடுவதை காணும் போது, தமிழகத்தில் காங்., தேய்ந்து வருவதன் காரணமும் புரிபடுகிறது. எது எப்படியோ, தேர்தல் தேதி அறிவிக்கும் வரை, இதுபோன்ற பல பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளை, தமிழக மக்கள் கண்குளிர கண்டு களிக்கலாம்! lll பூனை இல்லாத வீட்டில் கொட்டமடிக்கும் எலிகள்! கோ. பாண்டியன், செங்கல்பட்டில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'இண்டி' கூட்டணியை ஒருங்கிணைக்க சிறந்த மனிதர், தமிழக முதல்வர் ஸ்டாலின் தான். கடந்த ஓராண்டாக கூட்டாட்சியை வலுப்படுத்த தேவையானவற்றை மட்டுமே பேசுகிறார்; இதன் வாயிலாக, இண்டி கூட்டணிக்கு தலைமை தாங்க ஸ்டாலின் தான் சரியான நபர்' என்று பேசியுள்ளார், காங்கிரஸ் மூத்த தலைவர் மணிசங்கர் ஐய்யர். இந்நிலையில், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் ஊடக ஆலோசகர் சஞ்சய் பாரு கட்டுரை ஒன்றில், 'வலிமை வாய்ந்த தலைவரான நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜ.,வை வீழ்த்த ராகுல் - மல்லிகார்ஜுன கார்கே தலைமையிலான, இண்டி கூட்டணி எந்த வகையிலும் உதவவில்லை. 'அதேநேரம், இக்கூட்டணிக்கு மே.வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தலைமை ஏற்றால், பா.ஜ.,வின் பெண்கள் ஓட்டு வங்கியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். இதன்வாயிலாக, முன்னாள் பிரதமர் இந்திராவிற்கு பின், ஒரு பெண் பிரதமராக வர முடியும்' என்று குறிப்பிட்டுள்ளார். மோடியை ஜெயிக்க வேண்டும் என்றால், அவரை விட பரிசுத்தமானவர் ஒருவர் அரசியலுக்கு வந்தால் தான் வெற்றியடைய முடியும். அப்படியான ஒருவர் இண்டி கூட்டணியில் இருக்கிறாரா? 'பூனை இல்லாத வீட்டில் எலிகள் கொட்டமடிக்கும்' என்பது போல், தற்போது காங்., கட்சியில் வலிமையான தலைவர்கள் இல்லாததால், இண்டி கூட்டணிக்கு தலைமை வகிக்க, எவர் எவரையோ அழைக்க வேண்டிய சூழ்நிலை, காங்கிரசாருக்கு வந்துள்ளது. தமிழகத்தில் தோழமை கட்சிகளை வைத்து, கூட்டணி ஆட்சி அமைக்க மனமில்லாத ஸ்டாலினை, இண்டி கூட்டணியை ஒருங்கிணைக்க சிறந்த மனிதர் என்று மணி சங்கர் பேசியிருப்பது, அவரது அரசியல் தெளிவின்மையை காட்டுகிறது! lll


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை