உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / இது உங்கள் இடம் /  விருது மோகம் விட்டபாடில்லை!

 விருது மோகம் விட்டபாடில்லை!

வெ.சீனிவாசன், திருச்சியில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: பிரதமர் மோடி சமீபத்தில் கோவை வந்திருந்த போது, அவரிடம் இயற்கை வேளாண் முறையை பிரபலமாக்கிய நம்மாழ்வாருக்கு, பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்று விவசாயிகள் சார்பில் கோ ரிக்கை வைக்கப்பட்டது. நல்ல விஷயம் தான்! மக்களுக்கு சேவை செய்தவர், செய்வோருக்கு விருதுகள் வழங்கி கவுரவிக்க வேண்டியது அரசின் கடமை தான். அதேநேரம், இந்த விருது அரசியல் ஆக்கப்படுவது தான், அதன்மீதான மரியாதையை கேள்விக்குறியாக்குகிறது. கடந்த நான்கரை ஆண்டுகளில், திராவிட மாடல் அரசு, 'தகைசால் தமிழர்' விருதை, தி.க.தலைவர் வீரமணி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி தலைவர் காதர் மொய்தீன், கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் சங்கரய்யா, காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தன் என்று தன் கூட்டணி கட்சியினருக்கு கொடுத்து, விருதின் மகிமையையே, கேலிக்குரியதாக்கிவிட்டது. இதில், மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டுமாம்... அக்கட்சியினர் அவ்வப்போது வேண்டுகோள் விடுத்து வருகின்றனர். அதேபோன்று, அ.தி.மு.க.,வினரும் ஜெயலலிதாவுக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்று கூறி வருகின்றனர். இப்படித்தான் காங்கிரஸ் ஆட்சியில் முன்னாள் பிரதமர்கள் நேரு, மற்றும் இந்திரா தங்களுக்கு தாங்களே பாரத ரத்னா விருது கொடுத்து கவுரவப்படுத்திக்கொண்டனர். இந்த விருது மோகம் நம்மை மட்டுமல்ல, அமெரிக்க அதிபர் டிரம்பைக்கூட விட்டு வைக்கவில்லை, நோபல் பரிசை எப்படியாவது வாங்கிவிட வேண்டும் என்று துடியாய் துடிக்கிறார். எவ்வித அரசியல் தலையீடுகளின்றி, துறைசார்ந்த, பாரபட்சமற்ற நிபுணர்களின் பரிந்துரையின் அடிப்படையில் விருதுகள் அளிக்கப்பட்டால்தான், அந்த விருதுக்கும், அதைப் பெறுவோருக்கும் மதிப்பும், மரியாதையும் இருக்கும். ஆனால், இங்கு சேவைக்காக விருது என்பதை விட, அரசுக்கு ஜால்ரா தட்டுவோருக்கு அல்லவா விருதுகள் கிடைக்கின்றன! அதுசரி... விருது மோகம் யாரை விட்டது! lll தி.மு.க.,வின் பகுத்தறிவு! ஆர்.சேஷாத்திரி, சென்னை யிலிருந்து எழுதுகிறார்: மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி, தன் கடைசி காலத்தில் எப்போதும் மஞ்சள் நிற துண்டையே போர்த்தி இருந்தார். மறந்தும், அவர் கட்சி கொடியின் வண்ணங்களான கறுப்பு துண்டும் போடவில்லை; சிவப்பு துண்டும் போடவில்லை. மாறாக, மஞ்சள் துண்டை போர்த்திக் கொண்டு இருந்தார். அதுகுறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி எழும்பிய போது, 'மருத்துவர் மஞ்சள் துண்டை போடக் கூறினார்' என்று கூறி பேச்சை முடித்து விட்டார். மஞ்சள் துண்டுக்கும், மருத்துவத்திற்கும் என்ன தொடர்போ... அதை பகுத்தறிவாளர்களின் பேரன்கள் தான் கூற வேண்டும்! இதேபோன்று, கருணாநிதி கறுப்பு துண்டு அணிந்த காலத்தில், அவருடைய கட்சியை சேர்ந்த பார்லிமென்ட் உறுப்பினரும், தி.மு.க., மூத்த தலைவர்களில் ஒருவரான நாஞ்சில் மனோகரன், தி.மு.க.,விலிருந்து தாவி வந்து அ.தி.மு.க.,வில் வாசம் செய்த போது, எப்போதும் கையில் ஒரு சந்தன கைத்தடியை வைத்து இருப்பார். ஜோதிடமோ, உளவியல் காரணமோ... எதற்கு கையில் சந்தன கைத்தடியுடன் இருக்கிறார் என்று அவரும் சொன்னதில்லை; மற்றவர்களும் அதை பெரிதுபடுத்தியதில்லை. ஆனால், கருணாநிதி மட்டும், 'இதுவா பகுத்தறிவு' என்று கேட்டும், 'மந்திரக்கோல் மைனர்' என்றும், நாஞ்சில் மனோகரனை கேலி செய்தார். இப்போது, கருணாநிதியின் மகன் முதல்வர் ஸ்டாலினை பாருங்கள்... அவர் கையில் ஒரு சந்தன கைத்தடி! கருணாநிதி மஞ்சள் துண்டு அணிந்தது போல், சில அரசியல் தலைவர்கள் கருங்காலி மாலை போட்டுக் கொள்வது போல், ஸ்டாலின் கையிலும் சந்தன கைத்தடி! இதையும் கூட, ஏதாவது பகுத்தறிவு மருத்துவரின் அறிவுரையின்படி வைத்துக் கொண்டுள்ளார் போலும்! என்னே... தி.மு.க.,வின் பகுத்தறிவு... நாத்திகவாதிகள் இவர்களிடம் பிச்சை வாங்க வேண்டும்! lll மனக்கணக்கு போடலாமா? வி.எஸ்.ராமச்சந்திரன், செம்பட்டி, திண்டுக்கல் மாவட்டத்தில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தால், தமிழகத்தில் ஒரு கோடி பேர் ஓட்டுரிமையை இழப்பர். முன்பு, மக்கள் தங்களுக்கான ஆட்சியாளர்களை தேர்வு செய்தனர். தற்போது, ஆட்சியில் இருப்பவர்கள் தங்களுக்கான வாக்காளர்களை தேர்வு செய்கின்றனர்' என்று கூறியு ள்ளார், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர், சீமான். இறந்தவர் பெயரை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்காமல் இருப்பது, ஒருவர் பெயரே பல இடங்களில் இடம்பெறுவது, ஒருவரே வேறு வேறு தொகுதிகளில் ஓட்டுரிமை பெற்றிருப்பது என, வாக்காளர் பட்டியலில் ஏகப்பட்ட குளறுபடிகள்! இதில், கோடிக்கணக்கானவர்களின் வாக்காளர் அடையாள அட்டையில், அவர்கள் முகம் அடையாளம் காண முடியாத வகையில், பழைய புகைப்படமே இடம் பெற்றுள்ளது. கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேல் வாக்காளர் பட்டியல் வடிகட்டப்படாமல் இருப்பதால், அதில் ஏராளமான குப்பைகள் சேர்ந்து விட்டன. இப்போது அக்குப்பைகளை அகற்ற முடிவு செய்து, தேர்தல் கமிஷன் நடவடிக்கை எடுக்கும்போது, சில அரசியல் கட்சிகள் பெருமளவு ஓட்டு இழப்பு ஏற்படப் போவதாக கொந்தளிக்கின்றனர். எதையும் அவ்வப்போது பராமரித்து சரி பார்ப்பது என்பது காலத்தின் கட்டாயம்! தொடர்ந்து, 20 ஆண்டுகளுக்கும் மேல் வாக்காளர் பட்டியலில் உள்ள குப்பைகள் அகற்றப்படாமல் இருப்பதற்கும், அக்குப்பைகள் சேர்ந்ததற்கும் அரசியல் கட்சிகளே காரணம். ஜனநாயகத்தை காக்க, நேர்மையான தேர்தல் நடைபெற, அக்குப்பைகளை அகற்ற நினைக்கிறது, தேர்தல் ஆணையம். அப்படி அகற்றினால், தாங்கள் பெற்று வந்த ஓட்டுகளை இழக்க வேண்டுமே என்று கருதி, வாக்காளர் பட்டியல் திருத்தத்தில் காக்காய் குளியல் மட்டும் போதும் என்கின்றன, எதிர்க்கட்சிகள். தேர்தல் கமிஷனோ, அழுக்கு தீர முழுமையாக சோப்பு போட்டு குளிக்க வேண்டும் என்கிறது. முழுமையாக குளிப்பது தானே ஆரோக்கியம்! இரண்டு இடங்களில் ஓட்டுரிமை வைத்திருப்பது, இரண்டு இடங்களில் ரேஷன் கார்டு வைத்திருப்பது என்பது பரவலாக நாம் அறிந்ததே! அது நீக்கப்படும்போது அரசுக்கு நிதி இழப்பு குறையும். சரியானவர்களுக்கு சரியான இடத்தில் ஓட்டுரிமை இல்லை என்ற நிலை வரும்போது, ஆதங்கப்படலாம், எதிர்க்கலாம், போராடலாம், ஏன் நீதிமன்றத்தைக் கூட நாடலாம். ஆனால், தேர்வு வைக்கும் முன்பே, எத்தனை பேர் பெயிலாவர் என்று மனக்கணக்கு போட்டு, தேர்வையே எதிர்ப்பது வடிகட்டிய முட்டாள் தனம் அல்லவா? lll


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !