மேலும் செய்திகள்
மாணவர்கள் வாழ்வில் விளையாடலாமா?
21-Sep-2025
அ.யாழினிபர்வதம், சென்னையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: மேற்கு வங்கம், துர்காபூரில் உள்ள ஒரு தனியார் கல்லுாரியில் தங்கிப் படிக்கும் ஒடிசா மாணவி, தன் ஆண் நண்பருடன் இரவு உணவுக்காக வெளியே சென்று திரும்பும்போது, ஒரு கும்பலால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார். இக்கொடூர குற்றத்தை செய்தவர்களை தண்டிக்க வேண்டிய மே.வங்க முதல்வர் மம்தா பானர்ஜியோ, 'மாணவியர் இரவு நேரத்தில் வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும். ஒவ்வொருவருக்கும் போலீஸ் பாதுகாப்பு வழங்க முடியாது...' என்று, அலட்சியமாக கூறியுள்ளார். அந்த மாணவியின் வயதை கடந்து வந்தவர் தானே மம்தா... பெண்கள் இரவு நேரத்தில் வெளியே செல்லக் கூடாது என்று, இரவு, 7:00 மணியானதும் வீட்டிற்குள் சென்று கதவைப் பூட்டிக் கொண்டு வாழ்ந்திருந்தால், 21 வயதில் மம்தா பானர்ஜி மகளிர் காங்கிரஸ் கட்சி பொதுச்செயலராக ஆகி இருப்பாரா? அரசியலில் நேரம் காலம் பாராமல் உழைத்ததால் தானே, 29 வயதில் எம்.பி.,யானார். இதோ, மூன்றாவது முறையாக முதல்வர் நாற்காலியில் அமர்ந்துள்ளார். அப்படி இருக்கும்போது, இரவு நேரத்தில் பெண்கள் வெளியில் செல்லக் கூடாது என்றால், காவல் துறை எதற்கு இருக்கிறது? ஆண்களுக்கு இணையாக பெண்களும் இரவு நேர பணிகளை செய்து கொண்டிருக்கும் இக்காலத்தில், நேர வரையறை விதிப்பது எந்த வகையில் சரி? பெண்கள் இரவு நேரத்தில் வெளியில் செல்வதால் பாலியல் குற்றங்கள் நிகழ்கின்றன என்றால், பகலில் ஏற்படும் குற்றங்களுக்கு என்ன தீர்வு வைத்துள்ளார் மம்தா? மருத்துவக் கல்லுாரி நிர்வாகம் வெளியிட்ட அறிக்கை, அம்மாணவி இரவு, 8:00 மணிக்கு சாப்பிட சென்றதாக சொல்கிறது. அது ஒன்றும் நடுநிசி இல்லையே! 'ஒரு பெண் நகைகள் அணிந்து நள்ளிரவில் தனியாக வெளியே சென்று, பாதுகாப்பாக திரும்பும் நாளே உண்மையான சுதந்திர நாள்' என்றார், மகாத்மா காந்தி. அத்தகைய பரிபூரண சுதந்திரம், ஒரு பெண்ணின் ஆட்சியிலேயே கிடைக்கவில்லை என்றால், பெண்ணுக்கு அதிகாரம் கொடுத்து என்ன பலன்? ஆண்களுக்கு இணையாக ஊழல் செய்வதும், 10 குண்டர்களை வைத்து, சர்வாதிகார ஆட்சி நடத்தவும் தான் மம்தா போன்ற பெண்கள் ஆட்சி அதிகாரத்திற்கு வருகின்றனர் என்றால், அந்த அராஜகத்தை ஆண்களே நடத்திக் கொள்ளட்டுமே... பெண்கள் எதற்கு அரசியலுக்கு வரவேண்டும்? ************ பணமிருந்தால் கனவு காணுங்கள்! வி.எஸ்.ராமச்சந்திரன், செம்பட்டி, திண்டுக்கல்லிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: மாநிலம் முழுதும், 1,450 கிராம ஊராட்சி செயலர் பணியிடங்களை நிரப்ப அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. மாவட்ட வாரியாக காலி பணியிடங்கள் குறித்த பட்டியலும் வெளியாகி, பலரையும் குஷிப்படுத்தி உள்ளது. குஷிக்கு காரணம், இப்பணியிடங்கள் போட்டி தேர்வுகள் வாயிலாக நிரப்பப்படுவது இல்லை. நேர்முகத் தேர்வு அடிப்படையில் நிரப்பப்படுகிறது. கிராம ஊராட்சி செயலர் பதவி என்பது, கிராம நிர்வாக அலுவலர் போன்று ஒரு சக்தி வாய்ந்த பணியிடம்! பஞ்சாயத்து தலைவர் மற்றும் வார்டு உறுப்பினர்களுக்கு பல்வேறு வழிகளிலும் உதவி செய்து, தோள் கொடுத்து வழிகாட்ட கூடியவர் தான் ஊராட்சி செயலர். அத்துடன், ஊராட்சிக்கு வரும் பல்வேறு நிதிகளை எப்படி செலவிடுவது, அதன் வாயிலாக தலைவர் மற்றும் உறுப்பினர்கள் எந்த வகையில் பயனடையலாம் என்பது குறித்து, தலைவருக்கும், உறுப்பினர்களுக்கும் வகுப்பு எடுப்பதே ஊராட்சி செயலர் தான். மேலும், ஊராட்சி தலைவர்களுக்கு நிகராக வலம் வருவதுடன், பதவியில் தலைவர் இல்லாத காலகட்டங்களில் இவர்கள் தான் அதிகார பலத்துடன் செயல்படுவர். இப்படிப்பட்ட பதவியை யார் தான் வேண்டாம் என்று சொல்வர்? எவ்வளவு விலை கொடுத்தாவது வளைக்கத்தானே செய்வர்! இப்படி, சக்தி வாய்ந்த பணியிடமாக கருதப்படுவதால், போட்டி போட்டு விண்ணப்பிப்பர். லட்சக்கணக்கில் விண்ணப்பங்கள் குவிந்துவிடும். மாவட்ட கலெக்டர் தலைமையில் நேர்காணல் குழு அமைக்கப்பட்டாலும், கடைசியில், அமைச்சர் தரப்பில் கொடுக்கப்படும் பட்டியலில் பெயர் உள்ளவர்கள் தான் பதவியை பெற முடியும். அதனால், பணமும் பலமாக விளையாடும். 'வேலைக்காக பணத்தை எவரிடமும் கொடுத்து ஏமாற வேண்டாம்' என்று, அரசு தரப்பில் இருந்து அழுத்தமாக அறிவிப்பும் வரும். அதையெல்லாம் உண்மை என்று நம்பி, அப்பாவியாக விண்ணப்பித்து, 'நேர்காணலில் சிறப்பாக பதில் தெரிவித்து விட்டோம்; இனி பைசா செலவில்லாமல் வேலை கிடைத்துவிடும்' என்று கனவு கண்டால், அது பகல் கனவாகி விடும். எங்கோ ஒருசில இடங்களில் வேண்டுமானால், பணம் கொடுக்காமல் சிலருக்கு பதவி கிடைக்கலாம். மீதமுள்ளோர் பெரும்பாலானவர்கள் பணம் கொடுத்தால் தான், பதவி கிடைக்கும். எனவே, ஊராட்சி செயலர் பதவிக்கு கனவு காணுங்கள்... கையில் கட்டு கட்டாக பணம் இருக்கும் பட்சத்தில்! *** தீர்வு கிடைக்குமா? என்.பாடலீஸ்வரன், சென்னையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: தமிழகத்தில் இருந்து வட மாநிலங்களுக்கு முன்பதிவு ரயில்கள் தான் இயக்கப்படுகின்றன. அவற்றில் முன்பதிவு இல்லாத பெட்டிகள் மூன்று அல்லது நான்கு வரை மட்டுமே இணைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், தீபாவளி போன்ற பண்டிகை நாட்களில் தங்கள் சொந்த ஊருக்கு செல்லும் வடமாநிலத் தொழிலாளர்கள், முன்பதிவு ரயில் பெட்டிகளை ஆக்கிரமித்து, பயணியருடன் சண்டையிடுவது தொடர்கதையாக உள்ளது. சமீபத்தில், திருப்பூர் வழியாக டில்லி செல்லும் ஒரு ரயிலில், இதுபோன்று ஒரு சம்பவம் நடந்தது. டிக்கெட் பரிசோதகர் மற்றும் ரயில்வே போலீசாரால் அவர்களை எதுவும் செய்ய முடியாத நிலையில், முன்பதிவு செய்த பயணியர் வேறு வழியின்றி சிரமமான பயணத்தை மேற்கொண்டதாக செய்தி வெளியாகி இருந்தது. இதுபோன்ற செய்திகள் அவ்வப்போது பத்திரிகை மற்றும் தொலைக்காட்சி வாயிலாக வந்தாலும், ரயில்வே நிர்வாகம் இதுவரை இதற்கு நிரந்தர தீர்வு எடுக்கவில்லை. இவ்விஷயத்தில் வடமாநில தொழிலாளர்களை குறைசொல்லி பயனில்லை. ஏனெனில், ஆண்டிற்கு ஒருமுறை தங்கள் சொந்த மாநிலத்திற்கு சென்று, குடும்பத்துடன் பண்டிகையை கொண்டாட நினைக்கின்றனர். அதேபோல், வடமாநில தொழிலாளர்கள் பொதுவாக முன்பதிவு செய்து பயணிப்பதை விட, கட்டணம் குறைவாக உள்ள பொது பெட்டியில்தான் அதிகமாக பயணிக்க விரும்புகின்றனர். எனவே, முன்பதிவு இல்லாத பெட்டிகளை கொண்ட, 'அந்தியோதயா' போன்ற ரயில்களை பண்டிகை நாட்களில் அதிக அளவில் இயக்க வேண்டும். அப்போதுதான் இப்பிரச்னைக்கு நிரந்தர தீர்வு கிடைக்கும். ரயில்வே நிர்வாகம் யோசிக்குமா?
21-Sep-2025