உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / இது உங்கள் இடம் / பொய்யெல்லாம் உண்மையாகி விடுமா?

பொய்யெல்லாம் உண்மையாகி விடுமா?

முனைவர் வி.மீனாட்சி பட்டாபிராமன், மதுரையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: தமிழக முதல்வர் சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில், 'தமிழகம் ஈ.வெ.ரா., உருவாக்கிய மண்; அண்ணாதுரை வளர்த்த மண், கருணாநிதி மீட்டெடுத்த மண்...' என்று அடுக்கு தொடரில் பேசியுள்ளார். முதல்வருக்கு தமிழின் தொன்மை தான் தெரியவில்லை என்றால், வரலாற்றையும் அறியவில்லையே! இது, ஈ.வெ.ரா., உருவாக்கிய மண் இல்லை முதல்வரே... சிவபெருமான் பிட்டுக்காக சுமந்த மண்; பெருமாள் வாமனனாக வந்து மாவலியிடம் மூன்றடி கேட்டுப் பெற்ற மண். ஆக, இந்த மண் பெருமானுக்கும், பெருமாளுக்கும் சொந்தமே தவிர, பெரியார் என்று அழைக்கப்படும் ஈ.வெ.ரா.,வுக்கு சொந்தமானது அல்ல. அதுசரி... அது என்ன ஈ.வெ.ரா., மண்? அவர் பிறப்பதற்கு முன் தமிழகம் என்ற நிலப்பரப்பே இல்லையா... கொலம்பஸ் அமெரிக்காவை கண்டுபிடித்ததாக சொன்னது போல், ஈ.வெ.ரா., தான் தமிழகத்தை கண்டுபிடித்தாரோ? சென்ற நுாற்றாண்டில் பிறந்த ராமசாமிநாயக்கருக்கு இந்த மண் சொந்தம் என்றால், அதற்குமுன் ஆழ்வார்களும், நாயன்மார்களும், எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவியது எங்கே... இந்திய பெருங்கடலிலா? அண்ணாதுரை வளர்த்தெடுத்த மண் என்றீர்கள்... அதற்கு முன் தமிழகம் என்ன சஹாரா பாலைவனம் போல் வறண்டு கிடந்ததா, அண்ணாதுரை வந்து அணைகளையும், கல்லணைகளையும் கட்டி, தமிழகத்தை வளர்த்தெடுக்க!அதேபோன்று, கருணாநிதி மீட்டெடுத்தார் என்கிறீர்கள்... தமிழகத்தை என்ன சேட்டு கடையிலா அடகு வைத்திருந்தனர்... கருணாநிதி மீட்டெடுக்க!முகலாயர்கள், ஆங்கிலேயர் இந்த மண்ணின் வளத்தை தான் கொள்ளை அடித்தனர். ஆனால், தமிழகத்தின் தொன்மையை, ஆன்மாவை, பண்பாட்டை, கலாசாரத்தை குழிதோண்டி புதைத்தவர்கள் ஈ.வெ.ரா.,வும், அவரின் அடிபொடிகளான திராவிட கும்பலும் தான்!ஆட்சி அதிகாரத்தில் இருப்பதால், பொய்யெல்லாம் உண்மையாகி விடாது முதல்வரே!

நினைவில் கொள்ளுங்கள்!

டி.ஈஸ்வரன், சென்னையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: ஹிந்து முன்னணி சார்பில், மதுரையில் சமீபத்தில் நடைபெற்ற முருக பக்தர்கள் மாநாட்டில், ஈ.வெ.ரா., மற்றும் அண்ணாதுரை குறித்து வீடியோ வெளியானதால், அ.தி.மு.க., உட்பட திராவிட கட்சிகள் கண்டன அறிக்கை வெளியிட்டு இருந்தன.தி.க.,விலிருந்து பிரிந்து தி.மு.க., என்ற கட்சியை ஆரம்பித்ததால், அண்ணா துரையின் தலைவரானார், ஈ.வெ.ரா.,அண்ணாதுரை ஆரம்பித்த தி.மு.க.,விலிருந்து விலகி, அண்ணா தி.மு.க., என்ற கட்சியை துவக்கியதால், எம்.ஜி.ஆரின் கொள்கை தலைவரானார் அண்ணாதுரை. இப்படி, இரு கட்சிகளும் ஒரே கொள்கை கொண்டவையாக இருந்தாலும், கடவுள் நம்பிக்கை விஷயத்தில் தனிக் கொள்கை கொண்டவராக திகழ்ந்தார், எம்.ஜி.ஆர்., கடந்த 1978-ல் அப்போதைய தமிழக முதல்வர் எம்.ஜி.ஆர்., தலைமையில், சென்னை அண்ணா மேம்பாலம் அருகில் ஈ.வெ.ரா., சிலை திறப்பு விழா நடைபெற்றது. அதில் பங்கேற்ற ஈ.வெ.ரா.,வின் துணைவி மணியம்மை பேசும்போது, 'அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகும் சட்டத்தை கொண்டுவர ஈ.வெ.ரா., விரும்பினார். அதை, எம்.ஜி.ஆர்., நிறைவேற்ற வேண்டும்' என்றார். அதற்கு, 'கடவுள் நம்பிக்கை இல்லாத ஈ.வெ.ரா., அனைத்து ஜாதியினரையும் அர்ச்சகர் ஆக்க விரும்பினார் என்பதை என்னால் நம்ப முடியவில்லை...' என்று கூறி, அவரது கோரிக்கையை நிராகரித்து விட்டார்.கடந்த 1985ல் அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், தமிழக சட்டசபை தேர்தலில் அமோக வெற்றி பெற்றார், எம்.ஜி.ஆர்., அவர் சென்னை திரும்பியவுடன் ஏதேனும் கோவிலுக்கு சென்று விட்டு, பதவி ஏற்றுக் கொள்ளலாம் என்று உறவினர்கள் ஆலோசனை கூற, அவர் மனைவி ஜானகியோ, 'கோவிலுக்கு வேண்டாம்; வாழும் தெய்வமாக இருக்கும் காஞ்சி பெரியவரை சந்தித்து ஆசி பெற்றால் போதும்...' என்றார். அதன்படி, காஞ்சி மஹாபெரியவரை சந்தித்து ஆசி பெற்ற பின், மூன்றாவது முறையாக முதல்வர் பதவி ஏற்றார், எம்.ஜி.ஆர்., பின், கோவை மருதமலை முருகன் கோவிலுக்கு சென்றார்; கொல்லுார் மூகாம்பிகை அம்மனுக்கு தங்க வாள் பரிசளித்தார். இப்படி அவரின் ஆன்மிக பயணத்தை சொல்லிக் கொண்டே போகலாம். அதேபோன்று தான் ஜெயலலிதா. தீவிர கடவுள் நம்பிக்கை உடையவராக இருந்தாலும், ஈ.வெ.ரா.,வையும், அண்ணாதுரையையும் கொள்கை தலைவர்களாக ஏற்றிருந்தார்.அதற்கு சிறு உதாரணம் கூறலாம்... கடந்த 1993-ல் தேர்தல் ஆணையர் டி.என்.சேஷன், தான் எழுதிய புத்தகத்தில் அண்ணாதுரையை விமர்சனம் செய்திருந்தார். அதை கண்டித்து, அவருக்கு எதிராக கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் நடத்தினார், அப்போது முதல்வராக இருந்த ஜெயலலிதா.இப்படி கட்சி தலைமைகளின் ஆன்மிக வழிகாட்டுதலின்படிதான் அ.தி.மு.க., தலைவர்கள் முருக பக்தர் மாநாட்டில் பங்கேற்றனர். ஆனால், ஹிந்து முன்னணியினர் அண்ணாதுரை, ஈ.வெ.ரா., படங்களை வெளியிட்டு, அ.தி.மு.க.,வினருக்கு தர்ம சங்கடத்தை உருவாக்கி விட்டனர். ஒருமுறை, 'துக்ளக்' பத்திரிகை ஆண்டு விழாவிற்கு, தமிழக முஸ்லிம் லீக் தலைவர் ஒருவரை அழைத்திருந்தார், அப்பத்திரிகை ஆசிரியர் சோ. அதைக் கண்ட வாசகர் ஒருவர், 'இவர் நம் கொள்கைக்கு எதிரானவர்; இவரை ஏன் விழாவிற்கு அழைத்தீர்கள்?' என்று கேட்டார். 'அவர் நான் அழைத்த சிறப்பு விருந்தினர். அவருக்கு சங்கடத்தை ஏற்படுத்தும் வகையில் எதுவும் நடப்பதை அனுமதிக்க முடியாது. யாரை அழைக்க வேண்டும், அழைக்க கூடாது என்று எனக்கு தெரியும். உன் அறிவுரை தேவையில்லை. நீ வெளியே போகலாம்...' என்றார் கோபத்துடன் சோ.அதுபோல், தங்கள் மாநாட்டிற்கு சிறப்பு விருந்தினராக அ.தி.மு.க.,வினரை அழைத்திருந்த நிலையில், அவர்களை சங்கடப்படுத்தும் விதமாக சர்சைக்குரிய படங்களை தவிர்த்து இருக்கலாம். அதை தவிர்க்க முடியாது எனும் நிலையில், அவர்களை அழைக்காமலாவது இருந்திருக்கலாம். இனி வரும் காலத்திலாவது இதை இரு கட்சிகளும் நினைவில் கொள்வது நல்லது!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

A rajamohan
ஜூலை 08, 2025 16:20

Utter nonsense by Dr.Meenakshi


CA.S.Karthigeyan
ஜூலை 07, 2025 20:50

முனைவர் மீனாட்சி அவர்களே, சிவனும், பெருமாளும் உருவாக்கிய மண் என்கிறீர்களே, அது இந்தியா மட்டுமா ? அல்லது அமெரிக்கா, ஆப்பிரிக்கா, ஜப்பான் உள்ளிட்ட உலகம் முழுவதுமா ?


மூர்க்கன்
ஜூலை 09, 2025 10:57

சூப்பர் மாமு??


மூர்க்கன்
ஜூலை 09, 2025 10:58

செம செம


Anantharaman Srinivasan
ஜூலை 06, 2025 00:36

முகலாயர்கள், ஆங்கிலேயர் இந்த மண்ணின் வளத்தை தான் கொள்ளை அடித்தனர். கருணாநிதியும் முதல்வராக அமர்ந்து தமிழக மண்வளத்தை கொள்ளையடித்து மூன்று தலைமுறைக்கு சொத்து சேர்ந்தார்.


D.Ambujavalli
ஜூலை 04, 2025 17:29

இன்னும் சில படிகள் முன்னேறி, ஆங்கில அரசின் அடிமைத்தளையிலிருந்து தமிழகத்தை தன்னந்தனியாக இருந்து ஈ வே ராமசாமிதான் மீட்டார் என்றுகூடக் கதைவிடுவார் எழுதிக்கொடுத்தவர் என்ன எழுதிக்கொடுத்தார் என்றுகூட பார்க்காமல் எழுத்துக்கூட்டிப் படிப்பவருக்கு இந்த அளவு வரலாறெல்லாம் தெரியமென்று எதிர்பார்க்கலாமா ?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை