உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / இது உங்கள் இடம் /  உச்ச நீதிமன்றம் பரிசீலிக்குமா?

 உச்ச நீதிமன்றம் பரிசீலிக்குமா?

எஸ்.சுப்பையா, சென்னையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: தேர்தல்களில் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்வது என்பது நீண்டகாலமாகவே பல மாநிங்களிலும் நடந்து கொண்டுதான் இருக்கிறது.ஆரம்பத்தில், ஐந்து ரூபாய் என்று இருந்த அன்பளிப்பு, விலைவாசியைப் போல தேர்தல்தோறும் உயர்ந்து, தற்போது, 2026 தமிழக சட்டசபை தேர்தலை முன்னிட்டு, 5,000 ரூபாயாக உயர்ந்துள்ளது. துவக்கத்தில், வேட்பாளர்கள் தங்கள் சொந்த கைக்காசை கொடுத்துக் கொண்டிருந்தனர். தற்போது அந்நிலை மாறி, அரசு கஜானாவிலிருந்தே அள்ளிக் கொடுக்கும்அளவுக்கு, பணப் பட்டுவாடா பரிணாம வளர்ச்சி அடைந்துள்ளது. இந்நிலையில், இலவச வினியோகங்கள் குறித்து, 'நிதிப் பற்றாக்குறையால் தவித்தாலும், தேர்தல் வெற்றியை மனதில் வைத்து, இலவசங்களை மாநில அரசுகள் வழங்குகின்றன. உணவு, பேருந்து பயணம், சைக்கிள், ஸ்கூட்டர், லேப்டாப் என அனைத்தும் இலவசமாக கிடைத்து விட்டால், மக்கள் எதற்காக வேலைக்கு செல்ல வேண்டும்? 'இலவச திட்டங்களுக்கு செலவழிக்கும் பணத்தில் பள்ளி - கல்லுாரிகள் கட்டலாம்; தரமான சாலைகளை அமைத்தால், அனைவரும் பயன்பெறுவரே... தமிழகத்தில் மட்டுமல்ல; நாடு முழுதும் தேர்தல் கால இலவசம் அதிகரித்து வருகிறது' என்று வருத்தப்பட்டு கூறியுள்ளார், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த். இலவச திட்டங்களுக்கு உச்ச நீதிமன்றம் கடிவாளம் போட வேண்டுமாயின், தேர்தல் தேதி அறிவிப்பதற்கு முன், தேர்தல்களில் இலவசம் என்ற வார்த்தையே இடம் பெறக் கூடாது என்று தீர்ப்பளிக்க வேண்டும். இலவசங்களை கொடுத்தே தீருவோம் என்று கட்சிகள் அடம் பிடித்தால், அவர்கள் தங்கள் கட்சி நிதியில் இருந்து தான் கொடுக்க வேண்டுமே தவிர, மக்கள் வரிப்பணத்தில் இருந்து கொடுக்கக் கூடாது. அப்படி கொடுத்தது உறுதி செய்யப்பட்டால், அக்கட்சியின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும் என்று உத்தரவிட வேண்டும். மேலும், ஆளும் மாநில கட்சிகளுக்கு இந்திய ரிசர்வ் வங்கி காலவரையறையற்ற நீண்ட காலக்கடனை வழங்கக் கூடாது. ஆட்சியில் இருக்கும் போது எந்தக் கட்சி கடன் வாங்குகிறதோ, அக்கட்சி, ஆட்சியை விட்டு போவதற்குள், கடனை நிலுவை இல்லாமல் செலுத்த வேண்டும். இந்த இரு நிபந்தனைகளை உச்ச நீதிமன்றம் தீர்ப்பாக வழங்கினால் போதும்; தேர்தல் காலங்களில் வீசப்படும் இலவச துாண்டில்களின் முள் முறிந்து விடும். அரசியலில் முட்டாள்களும், ஊழல்வாதிகளும் அப்புறப்படுத்தப்பட்டு, நேர்மையாளர்கள், சமூக அக்கறையும், பொது நல சேவை உள்ளவர்கள் மட்டுமே கோலோச்சத் துவங்குவர். உச்ச நீதிமன்றம் பரிசீலிக்குமா?

காங்.,கை கலைத்து விடலாமே!

அ.ரவீந்திரன், குஞ்சன்விளை, கன்னியாகுமரி மாவட்டத்திலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: தமிழகத்தில் இருந்து காங்கிரஸ் கட்சியை துாக்கியெறிந்து, அதன் அடிச்சுவடைக் கூட அழித்துக் கொண்டிருக்கும் கட்சி, தி.மு.க., இந்த உண்மை புரிந்தும், எங்கே அதிகாரம் கையை விட்டு போய்விடுமோ என்ற கவலையில், தமிழக காங்., தலைவர் செல்வப்பெருந்தகை போன்ற சில காங்கிரசார், தி.மு.க., தலைமைக்கு ஜால்ரா அடிக்கின்றனர். மத்தியில் காங்., ஆட்சியில் இருந்தபோது, கூட்டணி கட்சி என்ற ஒரே காரணத்திற்காக ஆட்சியில் பங்கு கேட்டதுடன், வருமானம் கொழிக்கும் துறையாக பார்த்து வாங்கியது, தி.மு.க., கூட்டணி என்ற பெயரில் மத்தியில் ஆட்சியில் பங்கு பெற்றபோது, தி.மு.க.,விற்கு நெஞ்சு இனித்தது; அதே கூட்டணி கட்சிக்கு மாநிலத்தில் பங்கு தர வேண்டும் என்றால், நெஞ்சு எரிகிறது. இதில், '21ம் நுாற்றாண்டின் காமராஜர் ஸ்டாலின்' என்று கொஞ்சமும் வாய் கூசாமல் பேசுகிறார், காங்., மூத்த தலைவர் மணிசங்கர் ஐயர். காமராஜர் ஆட்சியில் வீதிக்கு இரண்டு டாஸ்மாக் கடைகள் இருந்தன; வகுப்பறையில் பெண் பிள்ளைகள் மது அருந்தி மல்லாந்து கிடந்தனர்; தட்டிக் கேட்கும் ஆசிரியர்களை போதை மாணவர்கள் கத்தியால் குத்தினர்; கஞ்சாவை புகைத்துக் கொண்டு தெருவில் திரிவோரால் பச்சிளம் குழந்தைகள் முதல் பல் போன பாட்டிகள் வரை பாலியல் பலாத்காரத்திற்கு ஆளாகினர்; அரசியல்வாதிகள் கனிம வளங்களை கொள்ளை அடித்து கொழுத்தனர்; அதிகாரிகள் ஊழல் பெருச்சாளிகளாய் வலம் வந்தனர். அதனால், காமராஜரோடு ஸ்டாலினை ஒப்பிட்டு பேசுகிறார், மணிசங்கர். காமராஜர் தன் சொந்தக் கட்சிக்கு கிங் மேக்கராக இருந்தார்; வழிநடத்தினார்; பெருந்தன்மையான குணத்தால் பிரதமர் பதவியை மறுத்தார். ஆனால், ஸ்டாலினோ, ஆட்சி, அதிகாரத்தில் பங்கு என்பது எங்கள் அதிகாரத்திலேயே இல்லை என்று கூறி, காங்., கட்சியை தன் காலடியில் வைத்திருப்பவர். அவர், 'இண்டி' கூட்டணிக்கு தலைமை ஏற்று பிரதமர் ஆக வேண்டும் என்றால், காங்., கட்சி நாட்டிற்கு எதற்கு? அதை கலைத்துவிட்டு போக வேண்டியது தானே!

ரயில்வே கவனம் செலுத்துமா?

கற்பகம் ஸ்ரீதர், கல்லிடைக்குறிச்சி, திருநெல்வேலி மாவட்டத்தில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: அனைத்து ரயில் களிலும் பயணியர் தங்கள் அடையாள அட்டையை காண்பிப்பதை கட்டாயமாக்கியுள்ளது, ரயில்வே துறை. இது வரவேற்கத்தக்கதே! டிக்கெட் பரிசோதகர்கள் இதை சரிவர செயல்படுத்த வேண்டும். ஏனெனில், சில ரயில்களில் டிக்கெட் பரிசோதகர்கள் வருவதே கிடையாது; வந்தாலும் பெயரையும், இருக்கை எண்ணையும் கேட்டு, அவருடைய சார்ட்டை சரிபார்த்து சென்று விடுகின்றனரே தவிர, பயணியரின் அடையாள அட்டையை பார்த்து, பயணிப்பவர் இவர்தான் என்பதை உறுதி செய்வதில்லை. இதனால், ரயில்களில் திருட்டு, ரவுடியிசம், பாலியல் அத்துமீறல்கள் அரங்கேறும் வாய்ப்பு ஏற்படுகிறது. மேலும் இரண்டாம் வகுப்பு, மூன்றாம் வகுப்பு, 'ஏசி' கோச்சுகளின் கதவுகளை, டிக்கெட் பரிசோதகர்கள் முழுமையாக அடைப்பதில்லை. இதனால், சாதாரண பயண டிக்கெட் எடுத்துள்ளவர்கள் ரிசர்வ் கோச்சில் ஏறி அங்குள்ள பயணியருக்கு தொல்லை கொடுக்கின்றனர். எனவே, ரயில்வே நிர்வாகம் இதையும் சீர்செய்ய வேண்டும்!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

D.Ambujavalli
மார் 02, 2026 06:43

அரசு நிதியில் இலவசம் கொடுப்பதற்கும், உரிமைப்பான முன்பணம், கோடை நிவாரணம்' என்று பெயர் வைத்து சமாளிக்கும் சமர்த்து இருக்கையில் கைக்காசை செலவழிக்க ஆளும் பெருந்தலைகளுக்குப் பைத்தியமா?


முக்கிய வீடியோ