உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / இது உங்கள் இடம் / விஜய் சீர்துாக்கி பார்ப்பாரா?

விஜய் சீர்துாக்கி பார்ப்பாரா?

எஸ்.நாராயணன், சென்னையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: தமிழக வெற்றிக் கழக கட்சி தலைவர் நடிகர் விஜய், தான் நடித்த சர்கார் திரைப் படத்தில், தன் ஒரு ஓட்டை மையமாக கொண்டு, மறுதேர்தல் நடத்த வைத்து, ஆட்சி மாற்றத்திற்கு காரணமாக இருப்பார். அது கதை! சர்கார் படத்தைப் போன்று, நிஜத்திலும் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்துவார் என்று நம்பி, நடிகர் விஜய் பின்னால் லட்சக்கணக்கான ரசிகர்களும், பொது மக்களும் திரண்டு வருகின்றனர். இந்நிலையில் தான், கரூரில் த.வெ.க., பிரசார கூட்ட நெரிசலில் சிக்கி, 41 பேர் உயிரிழந்த சம்பவத்திற்கு பின், கட்சியை கலைத்து விடலாமா என்ற எண்ணத்தில் விஜய் இருப்பதாகவும், தனித்து போட்டியிடப் போவதாகவும், காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைக்கலாமா என்ற எண்ணத்தில் இருப்பதாகவும் வேறுபட்ட பல செய்திகள் வருகின்றன. காங்., கட்சியுடன் கூட்டணி வைத்தாலும், தனித்து போட்டியிட்டாலும் அது விஜயின் அரசியல் வாழ்க்கைக்கு அவரே வைத்துக் கொள்ளும் ஆப்பு என்றே சொல்லலாம்! ஒருவர், தான் செய்யவிருக்கும் செயலின்வலிமை, தன் வலிமை, அதை எதிர்க்கும் எதிரியின் வலிமை, துணை வருவோரின் வலிமை என இவற்றை எல்லாம் சீர்துாக்கிப் பார்த்து, ஒரு செயலை செய்ய வேண்டும் என்கிறது, திருக்குறள். விஜய்க்கு அரசியல் அனுபவமோ, எதிர்க்கட்சியை கையாளும் சூட் சுமமோ இல்லை. கட்சியை வழிநடத்த வேண்டிய பொதுச்செயலர் ஆனந்த், அரசியலில் இருந்தவர் தான் என்றாலும், அவரது செயல்பாடுகள் எதுவுமே விஜயின் அரசியலை அடுத்த நிலைக்கு எடுத்துச் செல்வதாக தெரிய வில்லை. த.வெ.க.,வின் அடுத்தக் கட்ட தலைவர்களும் அரசியலின் அரிச் சுவடி அறியாதவர்களாகத் தான் இருக்கின்றனர். இந்நிலையில், தனித்து போட்டி என்ற எண்ணம், விஜயின் அரசியல் கனவுக்கு மூடுவிழா காண வைத்து விடும். தமிழக அரசியலில் பழம் தின்று கொட்டை போட்ட, தி.மு.க., - அ.தி.மு.க., போன்ற கட்சிகளே தனித்து தேர்தலை சந்திக்க தயாரில்லை. இங்கு கூட்டணி இல்லாமல் எவரும் ஆட்சிப் பீடத்தில் அமர்ந்து விட முடியாது. 2016ல் நடந்த சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க., தனித்து போட்டியிட்டதாக கூறப்பட்டாலும், சுயேச்சை கட்சிகள், சிறு கட்சிகளுடன் இணைந்து தான் தேர்தலை அக்கட்சி சந்தித்தது. தமிழக அரசியலில் மட்டுமல்ல, இந்திய அரசியலிலும் கூட்டணி வைத்து தான், அரசியல் கட்சிகள் அரியணை ஏறியிருக்கின்றன; ஏறியுள்ளன. அதேநேரம், காங்., கட்சியுடன் கூட்டணி வைப்பதால், த.வெ.க.,வுக்கு எந்த பலனும் கிடைக்கப் போவதில்லை. தமிழகத்தை பொறுத்தவரை காங்., கட்சிக்கு பெரிதாக ஓட்டு வங்கி இல்லை. தி.மு.க., தயவு இல்லையென்றால், அக்கட்சியால் கவுன்சிலர் தேர்தலில் கூட ஜெயிக்க முடியாது. எனவே, காங்.,குடன் கூட்டணி வைப்பதும், தனித்து களம் காண்பதும் ஒன்று தான்! ஆகவே, தன் வலிமையையும், எதிர்க்கட்சியின் வலிமையையும், கூட்டணி வைக்கப் போகும் கட்சியின் வலிமையையும் சீர்துாக்கிப் பார்த்து முடிவு எடுப்பது, விஜயின் அரசியல் எதிர்காலத்திற்கு நல்லது!  கூப்பாடு போடுவது ஏன்? ஆர்.கந்தவேல், சென்னை யில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: தமிழக தேர்தல் வெற்றியை பொறுத்தவரை, தி.மு.க., தொடர்ந்து இரு முறை சட்டசபை தேர்தலில் வென்றதாக சரித்திரம் இல்லை; அ.தி.மு.க., மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. இந்நிலையில், சில மாதங்களுக்கு முன்வரை, 'மீண்டும் ஆட்சியை பிடிப்போம்; 234 தொகுதிகளில் வெல்வோம்' என்று மார்தட்டிக் கொண்டிருந்த தி.மு.க., தற்போது, தேர்தலில் தோற்றால் அதற்கான காரணங்களை சொல்ல, வழிவகைகளை ஆராய்ந்து கொண்டிருக்கிறது. அதன் வெளிப்பாடு தான், தற்போது, தி.மு.க., தேர்தல் கமிஷனை குற்றஞ்சாட்டுவது! சென்னை அறிவாலயத்தில் நடந்த தி.மு.க., கூட்டணி கட்சிகளின் ஆலோசனை கூட்டத்தில், 'தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் அனைத்தும் சர்ச்சைக்குரியதாக மட்டுமல்ல, சந்தேகத்துக்குரியதாகவும் இருக்கின்றன. முறையான, வெளிப்படையான, உண்மையான தேர்தல் நடத்துவது தான் தேர்தல் ஆணையத்தின் ஒரே பணி. 'ஆனால், சமீபகாலமாகதங்களுக்கு விருப்பமான உத்தரவுகள் வாயிலாக, சந்தேகத்துக்குரிய தேர்தலை, தேர்தல் ஆணையம் நடத்தி வருகிறது...' என்று கூறி, வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியை எதிர்த்து, தீர்மானம் நிறைவேற்றியுள்ளது, தி.மு.க., கடந்த 2021ல் நடந்த தமிழக சட்டசபை தேர்தலில், மத்திய பா.ஜ., அரசு தனக்கு விருப்பமான உத்தரவுகளை பிறப்பித்து, அதை தேர்தல் கமிஷன் கடைப்பிடித்திருந்தால், தி.மு.க., ஆட்சிக்கு வந்திருக்க முடியுமா? குறை சொல்வதற்கும் ஒரு நியாயம் வேண்டாமா? இறந்தவர், முகவரி மாறி சென்றோர் மற்றும் இரட்டை ஓட்டுரிமை வைத்திருப்போர் பெயர்களை பட்டியலில் இ ருந்து நீக்குவதைத் தான், சிறப்பு தீவிர திருத்தத்தில், தேர்தல் கமிஷன் செய்ய உள்ளது. மேலே குறிப்பிட்டு உள்ள மூன்று கேட்டகிரி வாக்காளர்களின் பெயர்களை நீக்குவதால், தி.மு.க.,விற்கும், அதன் கூட்டணி கட்சிகளுக்கும் என்ன பாதிப்பு வந்து விடப் போகிறது? தேர்தல் தோறும் இறுதி வாக்காளர் பட்டியலின் பிரதிகளை, பதிவு செய்யப்பட்டுள்ள ஒவ்வொரு அரசியல் கட்சிக்கும் தேர்தல் கமிஷன் வழங்குகிறது. அப்பட்டியலில் குறைகள் இருப்பின், அதை சுட்டிக்காட்டி, நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து, தேர்தலை நிறுத்தும் வசதியும் இருக்கிறதே... அப்புறம் ஏன் கூப்பாடு போட வேண்டும்? இறந்தோர், முகவரி மாறி சென்றோர், இரட்டை ஓட்டுரிமை வைத்திருப்போர், பாகிஸ்தான், வங்கதேசம் மற்றும் மியான்மர் போன்ற நாடுகளில் இருந்து சட்ட விரோதமாக வந்து தமிழகத்தில் வசிப்போரின் பெயர்களை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்க கூடாது என்றால், வேறு எவர்களது பெயரை நீக்க வேண்டும்? கடந்த பார்லிமென்ட் தேர்தலில், கோவை மாவட்டத்தில் பா.ஜ., ஓட்டுகள் திடீர் மாயமானது போல், பா.ஜ., மற்றும் அதன் கூட்டணி கட்சிகளுக்கு ஓட்டளிப்போரின் பெயர்களை நீக்குவது தான், தி.மு.க.,வும், அதன் கூட்டணி கட்சிகளும் எதிர்பார்க்கும் வெளிப்படை தன்மையா? 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

ஜெய்ஹிந்த்புரம்
நவ 04, 2025 22:04

கூட்டணி வைக்கப் போகும் கட்சியின் வலிமையையும் சீர்துாக்கிப் பார்த்து முடிவு எடுப்பது, விஜயின் அரசியல் எதிர்காலத்திற்கு நல்லது


சமீபத்திய செய்தி