| ADDED : ஆக 14, 2024 11:00 PM
ஆகஸ்ட் 15, 1892தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகில் உள்ள திருப்புறம்பியத்தில், வைத்தியலிங்க பண்டாரத்தார் - மீனாட்சியம்மை தம்பதியின் மகனாக, 1892ல் இதே நாளில் பிறந்தவர் சதாசிவ பண்டாரத்தார். இவர், பள்ளிப் படிப்பை முடித்து, பின்னத்துார் நாராயணசாமி அய்யர், வலம்புரி பாலசுப்பிரமணிய பிள்ளை உள்ளிட்டோரிடம் தமிழ் இலக்கண, இலக்கியங்களை கற்றார். கும்பகோணம் ஒன்றிய அலுவலகத்தில் பணியாற்றிய இவர், பின், கும்பகோணம், பாணாதுறை உயர்நிலைப்பள்ளிகளில் தமிழ் ஆசிரியராக பணியாற்றினார்.'செந்தமிழ்' மாத இதழில், தமிழியல் ஆய்வுக் கட்டுரைகளை எழுதினார். வரலாற்று ஆய்வுகளை செய்து, 'முதலாம் குலோத்துங்க சோழன்' எனும் நுாலை எழுதினார். அடுத்து, சிதம்பரம் அண்ணாமலை பல்கலை தமிழாராய்ச்சி துறை விரைவுரையாளராக சேர்ந்து, தமிழகம் முழுதும் அலைந்து, கல்வெட்டு, செப்பேடுகளை ஆய்வு செய்தார்.'பிற்கால சோழர் சரித்திரம்' எனும் மிகப்பெரிய ஆய்வு நுாலை எழுதினார். தன் 67வது வயதில், 1960, பிப்ரவரி 1ல் மறைந்தார். சோழர்களின் வரலாற்றை தமிழில் எழுதிய, 'முதல் தமிழ் சரித்திர ஆய்வாளர்' பிறந்த தினம் இன்று!