| ADDED : ஜூலை 31, 2024 09:47 PM
ஆகஸ்ட் 1, 1899பழைய டில்லியில், காஷ்மீர் பண்டிட் குடும்பத்தின் ராஜ்பாட்டி - ஜவஹர் முல் அடல் கவுல் தம்பதியின் மகளாக, 1899ல், இதே நாளில் பிறந்தவர் கமலா கவுல். இவர், தன் வீட்டிலேயே கல்வி கற்றார். தன் 16வது வயதில், ஜவஹர்லால் நேருவை மணந்தார். நேரு, சுதந்திர போராட்டத்தில் மும்முரமாக இருந்ததால், இவரும் காந்தியின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு, அவரது ஆசிரமத்தில் சேர்ந்து பணி செய்தார்.அங்கு, காந்தியின் மனைவி கஸ்துாரிபாய், ஜெயபிரகாஷ் நாராயணனின் மனைவி பிரபாவதி தேவி உள்ளிட்டோருடன் இணைந்து, விடுதலை போராட்டத்துக்கான மகளிர் போராளிகளை உருவாக்கினார். நேரு கைது செய்யப்பட்ட போது, அவரது சார்பாக மக்களிடம் இவர் பேசியதால், கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். தன் வீடான, 'ஸ்வராஜ் பவனின்' ஒரு பகுதியை மருத்துவமனையாக்கி, காயம் படும் தியாகிகளுக்கு சிகிச்சை அளித்தார். அப்போது, காசநோய் பாதிப்புக்கு உள்ளானார். சிகிச்சைக்காக, ஸ்விட்சர்லாந்து சென்ற இவர், 1936, பிப்ரவரி 28ல் தன் 37வது வயதில் காலமானார். நாட்டின் முதல் பெண் பிரதமர் இந்திராவைஈன்ற கமலா நேரு பிறந்த தினம் இன்று!