இதே நாளில் அன்று
அக்டோபர் 6, 1928கேரள மாநிலம், திருப்புணித்துறையில்ஏ.நாராயண அய்யர் - அம்மணி அம்மாள் தம்பதியின் மகனாக, 1928ல் இதே நாளில் பிறந்தவர் டி.என்.கிருஷ்ணன்.இவர், தந்தையிடம் கர்நாடக இசையின் துவக்க நிலைகளை கற்றார். பின், ஆலப்புழா கே.பார்த்தசாரதி, அரியக்குடி ராமானுஜ அய்யங்கார் ஆகியோரிடம் நேரடி மாணவராக சேர்ந்து வயலின் கற்றார். தன், 11வது வயதில், முதல் மேடை கச்சேரியை அரங்கேற்றினார்.தன், 14 வயதில் சென்னைக்கு வந்தவர், அரியக்குடி ராமானுஜ அய்யங்காருக்கு பக்கவாத்தியம் வாசித்தார். தொடர்ந்து, முசிறி சுப்பிரமணிய அய்யர், ஆலத்துார் சகோதரர்கள், செம்பை வைத்தியநாத பாகவதர், மகாராஜபுரம் விஸ்வநாத அய்யர் உள்ளிட்டோருக்கும் பக்கவாத்தியம் வாசித்தார்.சென்னை இசை கல்லுாரியில் இசை பேராசிரியராகவும், டில்லி பல்கலையின் இசை, கலைகள் பள்ளி முதல்வராகவும் பணியாற்றினார்.பல நாடுகளில் கச்சேரி நிகழ்த்திய இவர், சங்கீத நாடக அகாடமியின் உறுப்பினராக நியமிக்கப்பட்டார்.'பத்மஸ்ரீ, சங்கீத நாடக அகாடமி, சங்கீத கலாநிதி, பத்ம பூஷன்' உள்ளிட்ட உயரிய விருதுகளை பெற்ற இவர், 2020 நவ., 2ல் தன், 92வது வயதில் காலமானார்.'சங்கீத கலாசிகாமணி' பிறந்த தினம் இன்று!