இதே நாளில் அன்று
நவம்பர் 6, 1926 தஞ்சை மாவட்டம், திருவிடைமருதுாரில், ராமசாமி அய்யர் - பிரகதாம்பாள் தம்பதியின் மகனாக, 1926ல் இதே நாளில் பிறந்தவர் டி.ஆர்.மகாலிங்கம் எனும் மாலி.இவர், தன் தாய்மாமா கோபால அய்யரிடம் கர்நாடக இசையைகற்றார். தன் 5வது வயதில், புல்லாங்குழல் வாசிக்க துவங்கி, விரைவில் அனைத்து ராகங்களையும் வாசிக்கும் வல்லமை பெற்றார். தன் 7வது வயதில், மயிலாப்பூரில் நடந்த இசை திருவிழாவில், முதல் கச்சேரியை நிகழ்த்தினார்.அதைக் கேட்ட இசை ஜாம்பவான்களான பரூர் சுந்தரம் அய்யரும், முசிறி சுப்ரமணிய அய்யரும், இவருக்கு சால்வை அணிவித்து பாராட்டினர். இவரது புல்லாங்குழல் கச்சேரிகளில்,புகழ் பெற்ற பக்கவாத்திய கலைஞர்களான புதுக்கோட்டை தட்சிணாமூர்த்தி பிள்ளை, உமையாள்புரம் கோதண்டராம அய்யர், பழனி சுப்பிரமணிய பிள்ளை, வேலுார் ராமபத்ரன்,கும்பகோணம் ராஜமாணிக்கம் பிள்ளை உள்ளிட்டோர் பங்கேற்று வாசித்தனர்.இவர், 1986, மே 31ல் தன் 60வது வயதில் மறைந்தார். இவருக்கு அதே ஆண்டு மத்திய அரசு, 'பத்ம பூஷன்' விருது வழங்கியது. தன் பிரமாதமான திறமையால், கச்சேரிகளில் புல்லாங்குழலை பிரதானமாக்கிய, மாலி பிறந்த தினம் இன்று!