இதே நாளில் அன்று
மே 15, 1953 ஆந்திர மாநிலம், குச்சிப்புடி கிராமத்தில், நாடக நடிகர் நாகேஸ்வர ராவின் மகளாக, 1953ல் இதே நாளில் பிறந்தவர் சத்தியவதி எனும் சத்யப்பிரியா.இவர், சிறுவயதில் சம்பத்குமார் என்பவரிடம் நடன பயிற்சி பெற்றார். விஜயநகர ராஜா கல்லுாரியில் பி.ஏ., படித்தார்; அப்போது, நாடகங்களில் நடித்து பரிசு பெற்றார். ஆந்திரா பல்கலையில் எம்.ஏ., படித்தபோது, பக்த துருவா என்ற ஹிந்தி படத்தில் வில்லியாக அறிமுகமானார்.தமிழில், மஞ்சள் முகமே வருக படத்தில் விஜயகுமார் ஜோடியாக அறிமுகமானார். சிவாஜி கணேசன் நடித்த, தீபம் படத்தில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்து புகழ் பெற்றார். கன்னட தயாரிப்பாளர் முகுந்தனை மணந்து நடிப்பில் இருந்து விலகிய இவர், பார்த்திபனின், புதிய பாதை படத்தில் மீண்டும் நடித்தார்.தொடர்ந்து, பணக்காரன், சின்னக்கவுண்டர், ரோஜா, பாட்ஷா, சூர்யவம்சம், படையப்பா உள்ளிட்ட படங்களில் அம்மா மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்தார். 'பகல் கனவுகள், கோலங்கள், பாரதி, நம்ம குடும்பம், மகாலட்சுமி' உள்ளிட்ட தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்து புகழ் பெற்றார்.இவரது 72வது பிறந்த தினம் இன்று!