பிரஷர் அண்ணன்; சுகர் தம்பி!
உலக பக்கவாத தினத்தை முன்னிட்டு, மதுரை அரசு மருத்துவமனை மூளை நரம்பியல் துறை சார்பில், சிறப்பு கருத்தரங்கு நடந்தது. இதில், உதவி பேராசிரியர் ராமு பேசுகையில், 'குடும்பத்தில் யாருக்காவது பக்கவாதம் இருந்தால், நமக்கும் வர வாய்ப்புண்டு. வராமல் தடுக்க, சில விஷயங்களை மாற்றி அமைக்கலாம். சிகரெட், மது பழக்கத்தை கைவிட வேண்டும். குண்டாகி விட்டாலே, ரத்த அழுத்தம் எனும், 'பிரஷர்' அண்ணன் வந்துடுவார். அவர் தனியா வரமாட்டார்; கூடவே, 'சுகர்' தம்பியையும் கூட்டிட்டு வந்துடுவார். 'இந்த இரண்டு பேரும் சேர்ந்து, ரத்தக்குழாய்க்குள் கொழுப்பை படிய வைத்து, பக்கவாதத்திற்கு வழி வகுத்து விடுவர். இதை தவிர்க்க, நமக்கு நாமே செய்யக் கூடிய தீங்குகளில் இருந்து விடுபட வேண்டும்...' என்றார். இதை கேட்ட மருத்துவ மாணவர் ஒருவர், 'பிரஷர், சுகர் என்ற அண்ணன், தம்பிகளை நம்ம பக்கத்துல அண்ட விடக் கூடாதுப்பா...' என கூற, சக மாணவர்கள் ஆமோதித்தனர்.