பேச்சு, பேட்டி, அறிக்கை
உழவர் உழைப்பாளர் கட்சி தலைவர் செல்லமுத்து பேட்டி: வறட்சி, தண்ணீர் பற்றாக்குறை, பூச்சி தாக்குதல், விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்காதது என, விவசாயிகள் பல்வேறு சவால்களை சந்தித்து வருகின்றனர். தமிழக அரசு, கடந்த சட்டசபை தேர்தலுக்கு முன், 83 தேர்தல் வாக்குறுதிகளை விவசாயிகளுக்கு அளித்தது. ஆனால், இதுவரை எந்த ஒரு வாக்குறுதியையும் நிறைவேற்றித் தரவில்லை. மீதமுள்ள கால கட்டங்களை கருத்தில் கொண்டு, விவசாயிகளுக்கு அளித்த தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற தி.மு.க., அரசு முன்வர வேண்டும். நாலு வருஷமா நிறைவேற்றாத வாக்குறுதிகளை, இன்னும் ஒரு வருஷத்துல நிறைவேற்றிடுவாங்கன்னு எப்படி நம்புறாரு?தமிழக பா.ஜ., செய்தித் தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் அறிக்கை: அறநிலையத் துறை நிர்வாக சீர்கேடுகளை களைந்து, ஊழல்களை தடுத்து, முன்மாதிரி அமைச்சராக இருக்கும் தகுதி, சேகர்பாபுக்கு இல்லை என்பதை அனைவரும் அறிவோம். தமிழக பா.ஜ., தலைவரை இகழ்ந்து பேசி, அமைச்சராக நீடித்து விடலாம் என்ற இரண்டாம்தர நாடக அரசியலை சேகர்பாபு செய்வதை, தி.மு.க.,வினரே புரிந்து கொண்டுள்ளனர்.என்னமோ, தமிழக அரசின் மற்ற துறைகளில் எல்லாம் நிர்வாக சீர்கேடும், ஊழல்களும் இல்லாம துாய்மையான நிர்வாகம் நடக்கிற மாதிரி பேசுறாரே!அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் உதயகுமார் பேச்சு: ஆட்சியாளர்கள் மக்கள் நலனை மறந்து, அவர்களுடைய வாரிசு அரசியலில் தான் கவனம் செலுத்துகின்றனர். மின்கட்டணம், சொத்து வரி உயர்த்தப்பட்டுள்ளது. பாலியல் வன்கொடுமை நடக்காத நாளே இல்லை. சட்டம் - ஒழுங்கு சீரழிந்து, நாடே சுடுகாடாக மாறி உள்ளது. ஜெயலலிதா ஆட்சியில் சொர்க்க பூமியாக இருந்த நாடு, இன்று நரக பூமியாக மாறி விட்டது. ஜெ.,க்கு அப்புறம் நான்காண்டு நடந்த பழனிசாமி ஆட்சியில், நாடு சொர்க்க பூமியாக இல்லைன்னு சொல்றாரா?முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் ஆதரவாளர் மருது அழகுராஜ் அறிக்கை: 'கூட்டணிக்காக, அ.தி.மு.க., என்றுமே தவம் கிடந்ததாக சரித்திரம் கிடையாது' என, பழனிசாமி கூறியுள்ளார். வாஸ்தவம் தான். லோக்சபா தேர்தலில், 13 தொகுதிகளில் மூன்றாம் இடத்துக்குப் போனதாகவும், ஏழு தொகுதிகளில் டிபாசிட் இழந்ததாகவும், ஆண்டிப்பட்டியில் ஒரு ஓட்டுச்சாவடியில், ஒரு ஓட்டு வாங்கியதாகவும் சரித்திரம் கிடையாது. இவ்வளவு ஏன்... 10 தேர்தலில் தொடர்ந்து தோற்றதாகவும் சரித்திரம் கிடையாது.அது மட்டுமா... பதவிக்காக, முன்னாள் முதல்வர்கள் இருவர் பங்காளி சண்டை நடத்தும் சரித்திரமும் கிடையாதே!