அ.தி.மு.க.,வில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் செய்தித் தொடர்பாளர் மருது அழகுராஜ் அறிக்கை: 'பா.ஜ.,வுடன்
ஒட்டுமில்லை உறவுமில்லை' என பிரகடனம் செய்து, தொண்டர்களையும்,
நிர்வாகிகளையும் உசுப்பிவிட்ட பழனிசாமி, அமித் ஷாவிடம் இருந்து வந்த ஒரே
ஒரு அழைப்பிலான சந்திப்பிலேயே, பா.ஜ., கூட்டணிக்கு ஒப்புக் கொண்டதுடன்,
கூட்டணி ஆட்சிக்கும் ஒப்புக் கொண்டுள்ளார். இது கூட்டணியா அல்லது
பழனிசாமியை வைத்து அ.தி.மு.க., மீது நடத்தப்பட்டிருக்கும் அரசியல் சிறை
பிடிப்பா என்ற ஐயம், அ.தி.மு.க., தொண்டர்களிடம் மட்டுமல்ல, சாதாரண
பொதுமக்களிடமும் எழுந்துள்ளது.இவரை தான் அங்க இருந்து வெளியேத்திட்டாங்களே... அங்க என்ன நடந்தா இவருக்கு என்ன? தமிழக காங்., கலை பிரிவு தலைவர் கே.சந்திரசேகரன் அறிக்கை: 'நடிகர் சிவாஜி கணேசன், தன் இளம்வயதில் குடும்பத்துடன் வாழ்ந்தது, திருச்சி சங்கிலியாண்டபுரத்தில் தான் என்பதால், திருச்சியில் அவருடைய சிலை அமைய இருக்கும் இடத்திலுள்ள பூங்காவிற்கு சிவாஜி பெயர் சூட்டப்படும்' என, முதல்வர் அறிவித்திருப்பது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. முதல்வரின் திருக்கரங்களால் பூங்கா திறக்கப்படும் நாளை ஆவலுடன் எதிர்நோக்கிக் காத்திருக்கிறோம். காங்., கட்சியில் பல ஆண்டுகள் பயணித்த சிவாஜி கணேசனுக்கு, அந்த கட்சி எந்த பதில் மரியாதையும் செஞ்சது மாதிரி தெரியலையே!மா.கம்யூ., கட்சியின் மாநில செயலர் சண்முகம் அறிக்கை: தமிழக அரசுக்கும், மக்களுக்கும் எதிராக தொடர்ந்து செயல்பட்டு வரும் கவர்னர் ரவி, உச்ச நீதிமன்ற தீர்ப்பை அவமதிக்கும் விதத்தில், துணைவேந்தர்கள் மாநாடுக்கு அழைப்பு விடுத்து, புதிதாக ஒரு சர்ச்சையை உருவாக்கியுள்ளார். இந்த மாநாட்டில் பல்கலை துணைவேந்தர்கள் யாரும் பங்கேற்காமல், புறக்கணிக்க வேண்டும்.துணைவேந்தரை நியமிக்கும் அதிகாரம் தான் முதல்வருக்கு மாறியிருக்கே தவிர, பல்கலைகளின் வேந்தராக கவர்னர்தானே நீடிக்கிறார்... அவருக்கு மாநாடு நடத்த அதிகாரம் இல்லன்னு சொன்னா எப்படி?ஹிந்து தமிழர் கட்சி தலைவர் ராம ரவிகுமார் அறிக்கை: 'மரணத்தின் விளிம்பில் கூட, எங்கள் முதல்வர் 'வாழ்க தமிழ்' என்றுதான் கூறுவாரே தவிர, மாற்றானிடம் மண்டியிட மாட்டார்' என, அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளார். தெலுங்கு வருடப் பிறப்புக்கு வாழ்த்து சொன்ன முதல்வர் ஸ்டாலின், சித்திரை 1 தமிழ் புத்தாண்டுக்கு ஏன் வாழ்த்து சொல்லவில்லை; தமிழ் மாடல் என்று சொல்லாமல், திராவிட மாடல் என்று சொல்வது ஏன்?இந்த மாதிரி பல ஏன்களுக்கு அவங்களிடம் பதில்கள் இருக்காது... கேள்வி கேட்கிறவங்க தொண்டை தண்ணீர்தான் வற்றிப்போகும்!