பேச்சு, பேட்டி, அறிக்கை
அ.தி.மு.க., மருத்துவ அணி மாநில இணை செயலரும், முன்னாள் எம்.எல்.ஏ.,வுமான டாக்டர் சரவணன் பேச்சு: இந்தியாவிலேயே உடல் உறுப்பு தானத்தில் சிறந்த மாநிலத்திற்கான விருது, பழனிசாமி தலைமையிலான, அ.தி.மு.க., ஆட்சியில் தமிழகத்துக்கு கிடைத்தது. பல்வேறு வெளிநாட்டினர் மருத்துவ சுற்றுலா வரும் மாநிலமாகவும் தமிழகம் திகழ்ந்தது. தமிழகத்துக்கு வந்த தொழிற்சாலைகள் எல்லாம் பக்கத்து மாநிலங்களுக்கு போன மாதிரி, வெளிநாட்டு நோயாளிகளும் பக்கத்து மாநிலங்களுக்கு போயிடுறாங்கன்னு சொல்றாரா?அரசு டாக்டர்களுக்கான சட்ட போராட்ட குழு தலைவர், டாக்டர் பெருமாள் பிள்ளை அறிக்கை: தமிழக சட்டசபையில் பேசிய மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் சுப்பிரமணியன், தமிழகத்தில் அதிகமான மருத்துவக் கல்லுாரிகள் இருப்பதால், கூடுதலாக மருத்துவக் கல்லுாரிகள் தர, மத்திய அரசு தயக்கம் காட்டுவதாக தெரிவித்துள்ளார். அதே நேரத்தில், இங்கு ஏற்கனவே இருக்கும் மருத்துவக் கல்லுாரிகளில் போதிய மருத்துவர்கள், செவிலியர்களை நியமிக்காதது மட்டுமன்றி, மருத்துவர்களுக்கு உரிய ஊதியத்தை கூட தர மறுக்கும் அரசு, புதிய மருத்துவக் கல்லுாரிகளுக்கு அனுமதி கேட்பது எந்த வகையில் நியாயம்?'அறுக்க தெரியாதவனுக்கு, 1,000 கதிர் அரிவாள்'னு கிராமங்கள்ல சொல்வாங்க... அந்த மாதிரி தான் இருக்கு, அரசை பார்த்து இவர் கேட்பதும்!தமிழக காங்., மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் பேட்டி: நாட்டின் அரசியலமைப்பு சீராக இருந்தால் தான், தேர்தல்கள் நேர்மையாகவும், சிறப்பாகவும் நடக்கும். தற்போது நாட்டிற்கு தேவையான விஷயம், அரசியலமைப்பை பாதுகாப்பது மட்டுமே. நம்ம அரசியலமைப்புக்கு இப்ப எந்த ஆபத்தும் இல்லை... பயங்கரவாதிகள் அச்சுறுத்தல் தான் அதிகமா இருக்கு... பிரதான எதிர்க்கட்சியாக, மத்திய அரசுக்கு ஆக்கப்பூர்வமான ஆலோசனைகளை வழங்கி, உறுதுணையா இருந்தாலே போதும்!இந்திய தேசிய அரசு போக்குவரத்து தொழிலாளர்கள் பேரவை மாநில தலைவர் வில்சன் அறிக்கை: அரசு பேருந்து ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்கள் எதிர்பாராத விபத்துகளால், உடல் உறுப்புகள் செயலிழந்து பாதிக்கப்படுகின்றனர். மாற்றுத்திறனாளிகளாக வாழும் அவர்களின் வாழ்வாதாரம் கருதி, பணிமனை அல்லது நேரக் காப்பாளர் நிலையங்களில் மாற்றுப் பணி வழங்க அரசு விதி உள்ளது. ஆனால், அரசு டாக்டர்கள் பரிசோதனை செய்து, மாற்றுத்திறனாளி நலத்துறை வழங்கும் சான்றிதழை போக்குவரத்துக் கழகங்கள் ஏற்பதில்லை.இந்த சலுகையை நிறைய பேர் தவறா பயன்படுத்துறாங்க என்ற புகார்கள் வர்றதே அதற்கு காரணம்!