உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / பேச்சு, பேட்டி, அறிக்கை / பேச்சு, பேட்டி, அறிக்கை

பேச்சு, பேட்டி, அறிக்கை

நீலகிரி தொகுதி தி.மு.க., - எம்.பி., ஆ.ராஜா பேட்டி: நாட்டின் அரசியலமைப்பு அடிப்படை கூறுகளான ஜனநாயகம், மதசார்பின்மை, சமத்துவத்தை பா.ஜ., அழித்து வருகிறது. ஒவ்வொரு மாநிலத்தின் மொழி, பண்பாடு ஆகியவற்றை சிதைத்து, 'ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே மதம், ஒரே தேர்தல்' என்ற முன்னெடுப்பை எடுத்து வருகிறது. அதை தடுத்து நிறுத்தக்கூடிய ஆற்றலை முதல்வர் ஸ்டாலின் மட்டுமே பெற்றுள்ளார். தமிழகத்தில் பாசிச ஆட்சியை காலுான்றாமல் தடுக்க, தமிழக மக்கள் அனைவரும் ஓரணியில் முதல்வர் பின் திரள வேண்டும்.'ஒரே கட்சி, ஒரே குடும்பம், அந்த குடும்பத்தினருக்கு மட்டுமே தலைமை பதவி' என்ற சித்தாந்தம் மட்டும் சரியா? மா.கம்யூ., கட்சியின் அரசியல்தலைமை குழு உறுப்பினர்- கே.பாலகிருஷ்ணன் அறிக்கை: சமூக நல்லிணக்கத்திற்கான பங்களிப்பிற்காகவும், தமிழகத்தின் வளர்ச்சிக்கு ஆற்றிய பணிகளை அங்கீகரிக்கும் வகையிலும், பேராசிரியர் காதர் மொகிதீனுக்கு, 2025ம் ஆண்டிற்கான தமிழ்நாடு அரசின், 'தகைசால் தமிழர்' விருது வழங்கப்பட்டிருப்பது மகிழ்ச்சி தருகிறது. 15 ஆண்டு கள் திருச்சி ஜமால் முகமது கல்லுாரியின் வரலாற்று துறை பேராசிரியராக செயல்பட்ட அவர், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தேசிய தலைவராகவும், மணிச்சுடர் இதழின் ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.தி.மு.க., கூட்டணியில் காலம் காலமாக நீடிப்பதால் தான் விருது கொடுத்துட்டாங்கன்னு யாரும் நினைச்சுடக் கூடாதுன்னு, இப்படி விளக்கம் தர்றாரோ?தமிழக காங்., சொத்து பாதுகாப்பு மற்றும் மீட்புக்குழு தலைவர் தங்கபாலு பேட்டி: நாடு முழுதும், 'இண்டியா' கூட்டணி சிறப்பாக செயல்படுகிறது. தமிழகத்தில், தி.மு.க., தலைவர் ஸ்டாலின் தலைமையில் வெற்றி கூட்டணியாக செயல்பட்டு வருகிறது. ராகுல் தலைமையை ஏற்று, லோக்சபாவில் அனைத்து எதிர்க்கட்சிகளும் ஓரணியில் உள்ளன. இந்தியாவின் அடுத்த பிரதமராக ராகுல் வருவார். 'ராகுல் பிரதமர் ஆவார்'னு இவர் சொல்றதை, சோனியாவும், ராகுலுமே நம்புவாங்களா என்பது சந்தேகம் தான்!தமிழக வீட்டுவசதி துறை அமைச்சர் முத்துசாமி பேட்டி: மத்திய அரசின் நிதி ஒதுக்கீடு, திட்டங்கள் என அனைத்திலும் தமிழகம் பாதிக்கப்படுகிறது. கல்வி நிதி மறுக்கப்படுகிறது. லோக்சபா தொகுதிகள் குறைக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. 'ஓரணியில் தமிழ்நாடு' என்பது தி.மு.க., உறுப்பினர் சேர்க்கைக்கானதல்ல. மத்திய அரசால் தமிழகத்திற்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகளை மக்களிடம் எடுத்து சொல்கிறோம். இதை எல்லாம் எடுத்து சொன்னதும், மக்கள் விழுந்தடித்துக் கொண்டு தி.மு.க.,வில் சேர்ந்துடு றாங்களா என்ன?


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ