உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / பேச்சு, பேட்டி, அறிக்கை / பேச்சு, பேட்டி, அறிக்கை

பேச்சு, பேட்டி, அறிக்கை

ஹிந்து தமிழர் கட்சி தலைவர் ராம.ரவிகுமார் அறிக்கை: படிப்பகம் அருகே குடிப்பகம் திறந்து, வருங்கால மாணவர் சமுதாயத்தை, போதை சமுதாயமாக, தி.மு.க., அரசு மாற்றுகிறதோ என்ற சந்தேகம் எழுகிறது. மாணவ - மாணவியர் அப்பா என்று அழைப்பதை மகிழ்ச்சியாக நினைக்கும் முதல்வர் ஸ்டாலின், போதையின் பாதையில் செல்லும் மாணவர் சமுதாயத்தை தடுக்க என்ன திட்டம் வைத்திருக்கிறார்? முதல்வர், பொறுப்புணர்ந்து செயல்படுவார் என நம்புகிறேன். தேர்தல் வாக்குறுதியாக, பூரண மதுவிலக்கை முதல்வர் அறிவிப்பார் என நம்பினால், இவர் ஏமாந்து போயிடுவார்! தமிழக பா.ஜ., துணை தலைவர் நாராயணன் திருப்பதி அறிக்கை: 'பரீட்சைக்கு பயந்து, ஓராண்டுக்கு முன்பாகவே படிப்பவர்கள் அல்ல நாங்கள். அன்றைய பரீட்சைக்கு அன்று தான் படிப்போம். ஆனால், பழனிசாமி இப்போதே கிளம்பி விட்டார்' என, வி.சி., தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார். 'பிட்' அடித்தும், விடைத்தாளை, 'சேஸ்' செய்தும் தேர்வெழுதும் திராவிட மாடல்கள், பரீட்சை அன்று படித்தால் என்ன, படிக்காவிட்டால் தான் என்ன... பயந்து படிப்பவர்கள் தான் ஜனநாயகவாதிகள். யார் என்ன தான் படிச்சாலும், பரீட்சை பேப்பரை திருத்தப் போற வாக்காளர்கள், என்ன மார்க் போடுவாங்கன்னு யாருக்கு தெரியும்? த.மா.கா., தலைவர் ஜி.கே.வாசன் அறிக்கை: தமிழகத்தில் பட்டாசு ஆலை தொழிலும், தொழிலாளர்களின் நலனும் முக்கியத்துவம் வாய்ந்தது. அப்படி இருந்தும், அவ்வப்போது பட்டாசு ஆலைகளில் வெடி விபத்துகள் ஏற்பட்டு உயிர் சேதமும், காயமடைவதும் வழக்கமாகி விட்டது. இதற்கெல்லாம் பொறுப்பு, பட்டாசு ஆலைகளின் உரிமையாளர்கள் மட்டுமல்ல; கண்டும் காணாமல் இருக்கும் தமிழக அரசும் தான். பட்டாசு ஆலைகளை தொடர்ந்து கண்காணித்து, ஆலை மற்றும் தொழிலாளர்களின் பாதுகாப்பை அரசு உறுதி செய்ய வேண்டும். அது சரி... விதிகளை மீறும் பட்டாசு ஆலைகள் முறையாக, 'கட்டிங்' தருமா என்பதை தான் அதிகாரிகள் உன்னிப்பா கண்காணிப்பாங்க! அனைத்து மக்கள் அரசியல் கட்சி தலைவர் ராஜேஸ்வரி பிரியா அறிக்கை: கும்மிடிப்பூண்டி அருகே, 10 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளி கைது செய்யப்படாதது, காவல் துறையின் மிக மோசமான செயல்பாட்டை வெளிப்படுத்துகிறது. திருப்புவனம் கோவில் காவலாளி அஜித்குமார் கொலைக்கு காரணமான, 10 சவரன் நகை திருட்டு புகாருக்கு கொடுத்த முக்கியத்துவத்தை, 10 வயது சிறுமிக்கு கொடுக்காதது, தமிழகத்தின் அவல நிலையை எடுத்துரைக்கிறது. திருப்புவனம் சம்பவத்தை, கும்மிடிப்பூண்டி சம்பவம் மறக்க அடிச்சிடுச்சே... அடுத்து, இதை விட பெரிய பிரச்னை வந்ததும், இதுவும் மறந்து போயிடும்!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை