பேச்சு, பேட்டி, அறிக்கை
த.மா.கா., தலைவர் வாசன் பேட்டி: தமிழக சட்டசபை தேர்தலுக்கான போட்டி முன்கூட்டியே துவங்கி விட்டது. தமிழக மக்கள் ஆட்சி மாற்றத்தை விரும்புகின்றனர். வாக்குறுதிகள் கொடுத்து மீண்டும் ஏமாற்றலாம் என்று தி.மு.க., திட்டமிடுகிறது. ஆனால், அது ஒருபோதும் நடக்காது. ஆட்சி மாற்றத்தை விரும்பும் யாராக இருந்தாலும், தேசிய ஜனநாயக கூட்டணியில் இணையலாம். ஒருமித்த கருத்துடைய கட்சிகளும் எங்களுடன் இணையும். இவரும் இப்படி சொல்லிட்டே தான் இருக்காரு... குட்டி கட்சிகள் கூட இவங்க அணிக்கு இன்னும் வந்தபாடில்லையே! தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் பேட்டி: முதல்வர் மற்றும் தி.மு.க.,வின் கூட்டணி கட்சி தலைவர்களை, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி ஒருமையில் பேசி வருகிறார். எழுதி கொடுப்பதை அப்படியே பேசக்கூடாது. அவருடைய தரம் அவ்வளவு தான். தமிழக அரசியல் வரலாற்றில், எந்த ஒரு அரசியல்வாதியும் இப்படி பேசியதில்லை. இதற்காக, பழனிசாமியை மக்கள் மன்னிக்க மாட்டார்கள். இவங்க கட்சியின் பேச்சாளர்கள் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி, சைதை சாதிக் போன்றவங்க பேசாததையா பழனிசாமி பேசிட்டாரு? கரூர் காங்., - எம்.பி., ஜோதிமணி அறிக்கை: எம்.ஜி.ஆரால் உருவாக்கப்பட்டு, தமிழக அரசியலில் ஒரு முக்கிய சக்தியாக இருந்த அ.தி.மு.க., தற்போது, பழனிசாமி தலைமையில் பா.ஜ.,விடம் கையேந்தி நிற்கிறது. அக்கட்சியை உடைத்து பலவீனப்படுத்த, அனைத்து அஸ்திரங்களையும் வெளிப்படையாகவே பிரயோகிக்கும் பா.ஜ.,வை கண்டிக்க கூட முடியாமல், அஞ்சி நடுங்கும் பழனிசாமிக்கு, காங்., கட்சியை பற்றி பேச என்ன அருகதை இருக்கிறது. கரூர் காங்., மகளிர் அணி பெண்மணியை தி.மு.க.,வில் சேர்த்துக்கிட்டதை இவங்க கண்டிச்சாங்களே... அதுக்கு தி.மு.க.,விடம் இருந்து ஏதாவது பதில் வந்துச்சா?