பேச்சு, பேட்டி, அறிக்கை
தர்மபுரி பா.ம.க., - எம்.எல்.ஏ., சவுமியா பேட்டி:
கடந்த 2014ல் தர்மபுரி பா.ம.க., - எம்.பி.,யாக இருந்த அன்புமணி, மத்திய ரயில்வே அமைச்சரை 19 முறை சந்தித்து, 350 கோடி ரூபாய் மதிப்பில் மொரப்பூர் - தர்மபுரி ரயில்வே திட்டத்திற்கு 2019ல் அடிக்கல் நாட்டினார். கடந்த தி.மு.க., ஆட்சியில் நில எடுப்பு பணிகளை துரிதப்படுத்தாமல் கிடப்பில் போட்டனர். தர்மபுரி பா.ம.க., முன்னாள் எம்.எல்.ஏ., வெங்கடேஸ்வரன் எடுத்த தொடர் முயற்சியால், ஒன்றரை ஆண்டுகளாக நில எடுப்பு பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. இப்ப, தர்மபுரிக்கு நீங்களே எம்.எல்.ஏ.,வாகிட்டீங்க... த.வெ.க., அரசுடனும் இணக்கமாக இருப்பதால், சீக்கிரமே திட்டத்தை முடிக்க பாருங்க! அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன் அறிக்கை:
சட்டசபையில், திரைப்பட இயக்குநர் அட்லி குறித்து பேசுகின்றனர். கேள்வி கேட்டால், 'சட்னி குறித்தும் பேசுவோம்' என்கிறது தி.மு.க., தரப்பு. ஆனால், தி.மு.க.,வை குற்றம்சாட்டும் கிட்னி திருட்டு குறித்து மட்டும் பேச மறுக்கின்றனர். சட்டசபையில் உங்க கட்சியினரும் இருக்காங்களே... கிட்னி திருட்டு குறித்து அவங்க ஏன் மவுனம் சாதிக்கிறாங்க? மா.கம்யூ., மாநில செயலர் சண்முகம் பேட்டி:
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயரும் போது, இந்தியா முழுதும் ஒரே இரவில் பெட்ரோல், டீசல் விலையை உயர்த்துகின்றனர். அமெரிக்கா - ஈரான் அமைதி ஒப்பந்தம் ஏற்பட்டு போர் முடிவுக்கு வந்துள்ளது. இதையடுத்து, கச்சா எண்ணெய் 120 அமெரிக்க டாலரில் இருந்து 78 டாலராக குறைந்துள்ளது. கச்சா எண்ணெய் விலை குறைந்த பின், உயர்த்தப்பட்ட பெட்ரோல், டீசல், எரிவாயு விலையை குறைக்க பா.ஜ., அரசு முன் வரவில்லை. மழை விட்டாலும் துாவானம் விடாத கதையாக, போர் நிறுத்தத்தை மீறி லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதால், ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் மீண்டும் மூடிடுச்சே... இனி எங்கிருந்து நமக்கு கச்சா எண்ணெய் வரும்? திருச்சி ம.தி.மு.க., - எம்.பி., துரை வைகோ பேட்டி:
'வாஷிங் மிஷின், குதிரை பேரம்' போன்ற விமர்சனங்கள் அனைத்து கட்சிகள் மீதும் உள்ளன. ஊழல் குற்றச்சாட்டுக்கு உள்ளானவர்கள் த.வெ.க.,வில் இணையும் போது, அக்கட்சி தலைமை கவனத்துடன் இருக்க வேண்டும். வைகோ - முதல்வர் விஜய் சந்திப்பில் எந்த அரசியலும் பேசவில்லை. ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் வரக்கூடாது என்ற கோரிக்கையை முதல்வரிடம் தெரிவிப்பதற்காகவே இந்த சந்திப்பு நடந்தது. விஜயுடன் உங்க தந்தை, 45 நிமிடங்கள் பேசியிருக்காரு... அவ்வளவு நேரமும், 'ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் வரக்கூடாது'ன்னு திரும்ப திரும்ப சொல்லிட்டு இருந்தாரா என்ன?