பேச்சு, பேட்டி, அறிக்கை
கடலுார் காங்., - எம்.பி., விஷ்ணு பிரசாத் அறிக்கை: 'மேகதாது அணை திட்டத்தை கைவிடும்படி கர்நாடக காங்., அரசிடம் ராகுல் கூற வேண்டும்' என, பா.ம.க., தலைவர் அன்புமணி கூறுகிறார். அவரால், பிரதமர் மோடியிடம், மேகதாது அணை கட்டக்கூடாது என்று கர்நாடக பா.ஜ.,வை ஒரே ஒரு தீர்மானம் கொண்டு வர சொல்ல துணிவு இருக்கிறதா? அன்புமணி இவரது மச்சானாக இருந்தாலும், ராகுல் மீது குற்றம்சாட்டியதும் பொங்கி எழுந்துட்டாரே!தி.மு.க., துணை பொதுச் செயலர் கனிமொழி அறிக்கை: கன்னியாகுமரியில் அணு கனிம சுரங்கம் அமைப்பதற்கான நில ஒதுக்கீட்டு ஆணையை, அது காலாவதியாகும் கடைசி நாளன்று ஓராண்டுக்கு நீட்டித்து த.வெ.க., அரசு அரசாணை வெளியிட்டிருப்பது ஏற்புடையதல்ல. அணு கனிமங்களை அகழ்ந்தெடுக்கும் சுரங்க திட்டத்தை கைவிட வேண்டும் என, த.வெ.க., செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றி விட்டு, இப்போது சுற்றுச்சூழலுக்கு மிகவும் ஆபத்தான மத்திய அரசின் திட்டத்திற்கு அனுமதி வழங்கும் த.வெ.க., அரசின் இரட்டை நிலைப்பாடு, தென் மாவட்ட மக்களுக்கு செய்யும் பெரும் துரோகம். த.வெ.க., அரசுக்கு முன்னாடி இருந்த உங்க கட்சி ஆட்சியில் தான், அந்த அரசாணையை போட்டீங்க என்பதை மறந்துட்டீங்களா? பா.ஜ., தமிழக விவசாய அணி தலைவர் நாகராஜ் பேச்சு: 'விபி ஜி ராம்ஜி' என்ற புதிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்திற்கு மத்திய அரசு நடப்பு நிதியாண்டில், 95,000 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளது. மத்திய அரசின் விதிமுறைக்கு உட்பட்டு இத்திட்டம் செயல்படுத்தப்பட்டால் தமிழகத்தின் வளர்ச்சிக்கு இது வரப்பிரசாதம். எனவே, கடந்த தி.மு.க., ஆட்சியை போல் முறைகேடு இல்லாமல் இத்திட்டம் நடக்க முதல்வர் தனி கவனம் செலுத்த வேண்டும். வேலையே செய்யாதவங் களுக்கும் கூலி வழங்கி கொள்ளை அடித்தது, இந்த ஆட்சியிலும் தொடராம பார்த்துக்கணும்! பா.ஜ., தமிழக செயலர் வினோஜ் செல்வம் அறிக்கை: கேரள பகுதியில் உள்ள செண்பகவல்லி தடுப்பணை உடைந்ததால், தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய மேற்கு தொடர்ச்சி மலையின் மழைநீர் வீணாக கேரளாவுக்கு செல்கிறது. விருதுநகர், தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களில் ஒரு லட்சம் ஏக்க ர் நிலங்கள் பாசனம் இன்றியும், 40 லட்சம் மக்கள் குடிநீர் ஆதாரத்தை இழந்தும் பாதிக்கப்பட்டுள்ளனர். கேரளாவில் காங்., ஆட்சி நடக்கிறது. காங்., தமிழக தலைவர் மாணிக்கம் தாகூர், காங்., அமைச்சர்கள் இரண்டு பேரும் செண்பகவல்லி அணையை சீரமைக்க ஏன் முயற்சி எடுக்கவில்லை? 'மாணிக்கம் தாகூர் உள்ளிட்ட மூணு பேரும் சிமென்ட், மணல் மூட்டைகளுடன் போய் அணையை சீரமைக்கணும்'னு சொல்ல வர்றாறோ?