பேச்சு, பேட்டி, அறிக்கை
விழுப்புரம், வி.சி.க., - எம்.பி., ரவிகுமார் அறிக்கை: இந்தியாவில் கடந்த ஐந்தாண்டுகளில், கழிவுநீர் கால்வாய்கள் மற்றும், 'செப்டிக் டேங்க்' சுத்தம் செய்யும்போது நடந்த உயிரிழப்புகள் குறித்து, லோக்சபாவில் கேள்வி எழுப்பினேன். இதற்கு மத்திய சமூக நீதித்துறை அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே அளித்த பதிலில், 2021 முதல் ஐந்தாண்டுகளில், 332 பேர் உயிரிழந்துள்ளனர். அதிகபட்சமாக மஹாராஷ்டிராவில், 58 பேர்; ஹரியானாவில், 47 பேர்; தமிழகத்தில், 38 பேர் உயிரிழந்துள்ளனர். தேசிய அளவில், தமிழகம் மூன்றாம் இடத்தில் இருக்கும் நிலையில், கழிவுநீர் சாக்கடை சுத்தம் செய்யும்போது மனிதர்கள் உயிரிழக்கும் கொடுமையை ஒழிக்க, தமிழக அரசு தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும். இவர் சொல்ற ஐந்தாண்டுகளும், தமிழகத்தில் தி.மு.க., ஆட்சி தானே நடந்துச்சு... அதுக்கு, இவரது கட்சி கண்ணை மூடிட்டு ஆதரவும் கொடுத்துட்டு இருந்துச்சே!த.மா.க., தலைவர், வாசன் பேட்டி: புதிதாக அமைந்துள்ள அரசுக்கு கால அவகாசம் தேவை. த.வெ.க.,வின் ஊழல் ஒழிப்பு நடவடிக்கைகளை வரவேற்கிறோம். த.வெ.க.,வுடன் கூட்டணி குறித்து, உரிய நேரத்தில் அறிவிக்கப்படும். உள்ளாட்சி தேர்தல் நெருங்கும் போது, அதை தெரிவிப்போம். த.வெ.க., கூட்டணியில் சேர இவர் தயார் தான்... ஆனா, காலி பெருங்காய டப்பாவாகிப் போன இவரது கட்சியை, அவங்க சேர்த்துக்குவாங்களா? 'வீ தி லீடர்ஸ்' என்ற அமைப்பின் தலைவர், அண்ணாமலை பேட்டி: புதுக்கோட்டையில் காவிரி, வைகை, குண்டாறு இணைப்பு திட்டத்தின், நில எடுப்பு பணிகளில் ஈடுபட்டுள்ள ஊழியர்களின் பணி நீட்டிப்புக்கான அரசாணை, இதுவரை வெளியிடப்படவில்லை. இதனால், அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, அவர்களின் பணிக் காலத்தை வரும் டிசம்பர் வரை நீட்டித்து, நிலுவையில் உள்ள ஏப்ரல், மே, ஜூன் மாதங்களின் ஊதியத்தையும் உடனே வழங்க வேண்டும். இந்தத் திட்டம், அ.தி.மு.க., ஆட்சியில் கொண்டு வரப்பட்டது என்றாலும், பயனுள்ள திட்டம் என்பதால், த.வெ.க., அரசு இதை தொடர வேண்டும். தமிழக மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் விக்னேஷ் பேட்டி: ' ஜனநாயகன் படம் வெளியாகும் நேரத்தில் பொறுப்பாக நடந்து கொள்ள வேண்டும்' என, முதல்வர் விஜய் வேண்டுகோள் விடுத்திருந்தார். ஆயினும், படம் வெளியாகும் நேரம் மட்டும் பழைய ரசிகராக செயல்பட அனுமதி கேட்டோம். இனி, வாழ்க்கையில் எப்போது முதல் நாள், முதல் காட்சி என்பது தெரியவில்லை. நாட்டுல, ஆயிரத்தெட்டு பிரச்னைகள் அணிவகுத்துட்டு இருக்கு... அமைச்சர் கவலையைப் பார்த்தால், 'ரோம் நகரம் பற்றி எரியும் போது பிடில் வாசித்த நீரோ மன்னன்' கதை தான் நினைவுக்கு வருது!