உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / சொல்கிறார்கள் / என் தாய் தமிழ் தான் அனைத்தையும் எனக்கு கொடுத்தது!

என் தாய் தமிழ் தான் அனைத்தையும் எனக்கு கொடுத்தது!

கடந்த 15 ஆண்டுகளாக, முழு நேர பேச்சாளராக வெற்றிகரமாக இயங்கி வரும், இலக்கிய மற்றும் ஆன்மிக சொற்பொழிவாளர் சுமதிஸ்ரீ: எங்கள் வீட்டில், பெண்கள் யாரும் சத்தம் போட்டு சிரிக்கவோ, பேசவோ மாட்டார்கள். நான்காம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கும் போது, என் பேச்சுத் திறமையை அறிந்த என் தலைமை ஆசிரியர், என்னை பேச்சுப் போட்டிகளில் மேடையேற்றி, கை தட்டுகளை காது நிறைய கேட்க செய்தார்.'பொம்பள புள்ள இப்படி மைக் புடிச்சுப் பேசலாமா' என, உறவினர்கள் கேட்டதும், பதற்றம் அடைந்த என் பெற்றோர், 'இனி எங்கள் மகளை பேச்சுப் போட்டிக்கு அனுப்ப வேண்டாம்' என்று தலைமை ஆசிரியரிடம் கூறினர்.ஆனால், பொறுமையாக என் பெற்றோருக்கு புரிய வைத்து என்னை மெருகேற்றினார். எம்.ஏ., படித்துக் கொண்டிருந்த போது, என் கல்லுாரி பேராசிரியர்கள் தலைமை தாங்க வேண்டிய விழாவுக்கு, அவர்களால் செல்ல இயலாத காரணங்களால், என்னை அனுப்பினர். 'ஒரு மாணவி எப்படி நிகழ்ச்சிக்கு தலைமை தாங்க முடியும்' என்று விழா தரப்பினர் தயங்கினர். ஆனால், நான் பேசி முடித்த பின் என்னை பாராட்டியதுடன், மிகுந்த மரியாதையும் தந்து, அடுத்தடுத்த மேடைப் பேச்சு, நிகழ்ச்சி தொகுப்பிற்கு என்னையே அழைக்க, என் மேடைப் பயணம் தடதடக்க ஆரம்பித்தது.திருச்சியை மட்டுமே என் உலகமாக பார்த்துக் கொண்டிருந்த நான், பட்டிமன்றங்களின் வழியாக தமிழகம் முழுக்க பயணப்பட்டேன். மற்றொரு பக்கம் கல்லுாரியில் தமிழ் விரிவுரையாளராக பணிபுரிந்தேன்.என்னுடையது காதல் திருமணம். என் மேடைப் பேச்சை ஊக்குவிக்கும் கணவர் எனக்கு கிடைத்தது வரம். பேச்சையே முழு நேர பணியாக்கி, கல்லுாரி பணியை நான் துறந்த போது, என் பக்கம் நின்றார். '2 - கே கிட்சின்' பிரியத்திற்குரிய நபராக நான் இருப்பதில் எனக்கு பெருமகிழ்ச்சி.அமெரிக்கா, நார்த் கரோலினா தமிழ் சங்கத்தில் நான் பேசி முடித்த போது, 7 வயது சிறுமி ஒருத்தி என்னை பாராட்டியதை மறக்கவே இயலாது. ஆஸ்திரேலியா, பிரிஸ்பேன் நகரில் வசித்து வந்த, 75 வயது பாட்டி ஒருவர், என் பேச்சுக்கு ரசிகை. நிகழ்ச்சி ஒன்றுக்காக நான் சிட்னி சென்றிருந்த போது, என்னை சந்திப்பதற்காக அவர், 1,000 கி.மீ., பயணப்பட்டு சிட்னி வந்தது, தமிழ் தந்த ஆசீர்வாதம்.முக்கிய ஆன்மிக விழாக்களின் போது, முன்னணி தொலைக்காட்சிகளில் பல ஆண்டுகளாக நேர்முக வர்ணனை செய்து வருவது என் தமிழுக்கு கிடைத்த வெற்றி.சமூகத்தில் எனக்கென்று ஓர் அடையாளம், அங்கீகாரம், நிறைவான ஊதியம், மக்களின் பேரன்பு ஆகிய அனைத்தையுமே என் தாய் தமிழ் தான் எனக்கு கொடுத்திருக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !