உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / சொல்கிறார்கள் /  பல பயிர் சோலைவனம்!

 பல பயிர் சோலைவனம்!

அரியலுார் மாவட்டம், கருக்கை கிராமத்தில், 5.5 ஏக்கரில், 'நற்பவி வளர்ச்சோலை' வைத்திருக்கும் பழனிசாமி: என் சொந்த ஊர், கடலுார் மாவட்டம், விருத்தாசலம் அருகே உள்ள ஆலிச்சிக்குடி. இக்கிராம ஊராட்சி மன்ற தலைவராக, 15 ஆண்டுகள் பதவி வகித்தேன். இது, என் மனைவிக்கு அவங்க அப்பா சீதனமாக கொடுத்த நிலம். 2007ம் ஆண்டு இங்கு விவசாயத்தை துவங்கினேன். இந்த நிலத்தில் பல வகையான மரங்கள் வளர்க்க முடிவெடுத்து , 2017ம் ஆண்டு மரப் பயிர் சாகுபடியை துவங்கினேன். பழ மரங்கள், மர வேலைப்பாடு களுக்கு உரிய மரங்கள், மூலிகை செடிகள், கிழங்கு வகைகள் உள்ளிட்ட பலவிதமான பயிர்களை வளர்த்து, இங்கு ஒரு சோலைவனம் உருவாக்க ஆசைப்பட்டேன். எந்த ஒரு தாவரமாக இருந்தாலும், அது வளர்வதற்கான சூழலை உருவாக்கி விட்டால் வெற்றிகரமாக வளர்ந்துவிடும். இந்த சோலைவனத்தில் அன்னாசி, பலா, வாட்டர் ஆப்பிள், தேக்கு, மகோகனி, செம்மரம், வேங்கை, மூங்கில், குடம்புளி, இனிப்பு புளி, பட்டை , லவங்கம், காபி, இன்சுலின், திப்பிலி, நன்னாரி, தவசி கீரை, வெற்றிலை , மிளகு என பலவிதமான பயிர்களை செழிப்பாக வளர்த்து வருகிறேன். இவை வளர்ந்து ஓரளவுக்கு நிழல் உருவான பின், மலைப்பிரதேச பயிர்களை சாகுபடி செய்ய துவங்கினேன். போதுமான அளவு தண்ணீர் கொடுத்தால், பயிரை வெற்றிகரமாக விளைவிக்க முடியும் என்பதற்கு இந்த சோலைவனமே சிறந்த உதாரணம். ஐந்து ஆண்டுக்கு முன், மிளகு கொடி பயிர் செய்து, மரங்களில் ஏற்றி விட்டிருக்கிறேன்; நன்றாக வளர்ந்து செழிப்பாக இருக்கிறது. காபி செடி, அரிய வகை மூலிகைகளான, தேள் கொடுக்கு, பூனை மீசை உள்ளிட்ட பயிர் களையும் வளர்க்கிறேன். இயற்கை உர தேவைக்காகவும், அன்றாட வருமானத்துக்காகவும், 300 நாட்டு கோழிகளை வளர்க்கிறேன். பண்ணையில் மரங்கள், பழமரக்கன்றுகள் உற்பத்தி, நாட்டுக்கோழி முட்டை, மிளகு கன்று உற்பத்தி, இறைச்சிக் கோழி என ஆண்டுக்கு, 6.80 லட்சம் ரூபாய் லாபம் கிடைத்து வருகிறது. இந்த சோலைவனம் நெடுஞ்சாலை ஓரத்தில் இருப்பதால், ஏராளமான வாடிக்கையாளர்கள் நேரடியாக வந்து வாங்கி செல்கின்றனர். உற்பத்தி செய்யப் படும் பொருட்களை, இடைத்தரகர் மற்றும் வியாபாரிகள் தலையீடு இல்லாமல் நுகர்வோர்களிடம் நேரடியாக விற்பனை செய்வதால் அதிக லாபம் கிடைக்கிறது. என் மகன் வனவாழ் உயிரியல் தொடர்பான ஆய்வுக் கூடமாகவும் பயன்படுத்தி வருகிறார். சோலைவனத்தின் ஒரு பகுதியில், வண்ணத்துப்பூச்சி பூங்கா அமைக்கவும், சில ஆண்டுகளில் வேளாண் சுற்றுலா திட்டத்தை செயல்படுத்தவும் திட்டமிட்டுள்ளேன்! தொடர்புக்கு 93677 95559


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை