ஆண்டுக்கு ரூ.40 கோடி டர்ன் ஓவர்!
'எஸ்.ஆர்.எம்., ஸ்வீட்ஸ் அண்டு கேக்ஸ்' என்ற பெயரில், பேக்கரிகளை நடத்தி வரும், ஈரோட்டைச் சேர்ந்த மகுடீஸ்வரன்: ஈரோடு மாவட்டம், கோபிச்செட்டிபாளையம் அருகே சிறுவலுார் தான் சொந்த ஊர். எங்கள் குடும்பத்தில், ஆறு மகள்கள், மூன்று மகன்கள். 1969ல், நான் ஐந்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தபோது, வறுமை காரணமாக ஈரோட்டிற்கு குடும்பத்துடன் குடிபெயர்ந்தோம். இதனால், குடும்பத்தில் உள்ள அனைவருமே வேலைக்குச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. நான், பேக்கரியில் பொட்டலம் கட்டும் வேலைக்குச் சேர்ந்தேன். காலை 8:00 மணிக்கு பேக்கரிக்குள் நுழைந்தால் இரவு 8:00 மணிக்குதான் வேலை முடியும். அப்போது வாரத்துக்கு 4 ரூபாய் சம்பளம். 15 வயதாக இருக்கும்போது தொழில் ஏதாவது கற்றுக்கொண்டால் தான் அடுத்த கட்டத்துக்கு நகர முடியும் என்று தோன்றியது.ஈரோட்டில் பார்த்த வேலையை விட்டுவிட்டு, உறவினரின் பலகாரக் கடையில் வேலைக்கு சேர்ந்தேன். ஓய்வு நேரங்களில் பலகாரங்களின் செய்முறை, அளவு என, அனைத்தையும் கற்றுக் கொண்டேன். மாஸ்டர் இல்லாத நாட்களில் இனிப்பு, கார வகைகளை நானே செய்ய ஆரம்பித்தேன். ஒருநாள் ஊதியமாக 70 ரூபாய் கிடைத்தது; அதில் குடும்ப செலவு போக மீதமுள்ள பணத்தை வங்கியில் சேமிக்க துவங்கினேன்.குடும்பத்தில் மீண்டும் பொருளாதாரப் பிரச்னை தலைதுாக்கிய போது, சுயமாக தொழில் துவங்க எண்ணி, வங்கியில் சேர்த்து வைத்த பணத்தை முதலீடாக வைத்து, 1981ல் சிறிய அளவிலான பலகாரக் கடையை குடும்ப உறுப்பினர்களுடன் சேர்ந்து துவக்கினேன். வாடிக்கையாளர்களிடம் வரவேற்பு இருந்தது. அடுத்த ஓராண்டுக்குள் ஈரோடு முழுக்க, 130 கடைகளுக்கு இனிப்பு, கார வகைகளை சப்ளை செய்தேன். தரமான, சுவையான பலகாரம் மற்றும் கடின உழைப்பு காரணமாக, 10 ஆண்டுகளில் என் தயாரிப்புகளுக்கு என, தனி அடையாளத்தை உருவாக்கினேன்.வாடிக்கையாளர்களுக்கு பொருட்கள் தரமாக இருக்கும் என்ற நம்பிக்கை வர வேண்டும் என்பதற்காக சூடான முறுக்கு, சிப்ஸ், பக்கோடாவை கடை வாசலில் போடத் துவங்கினேன். நல்ல வரவேற்பு கிடைத்தது.பொருட்களின் தரம் குறையக்கூடாது என்பதற்காக, வங்கியில் 70 லட்சம் ரூபாய் கடன் பெற்று, அதிநவீன இயந்திரங்கள் கொண்ட, 'சென்ட்ரலைஸ் கிச்சன்' ஒன்றை ஈரோட்டில் துவங்கியுள்ளோம்.இங்கிருந்து இனிப்பு, கார வகைகளை தயாரித்து, எங்களது 15 கடைகளுக்கும் அனுப்பி வருகிறோம்; இங்கு, 220 பேர் பணியாற்றுகின்றனர். எனக்கென ஒரு அடையாளத்தை உருவாக்கி, கடுமையாக உழைத்ததால், இன்று ஆண்டுக்கு 40 கோடி ரூபாய், 'டர்ன் ஓவர்' செய்கிறேன்.