உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / சொல்கிறார்கள் /  மாணவர்களுக்கு கலை பொருட்கள் செய்ய பயிற்சி!

 மாணவர்களுக்கு கலை பொருட்கள் செய்ய பயிற்சி!

கரூர் மாவட்டம், வெள்ளியணை அரசு மேல்நிலைப் பள்ளியில், பகுதி நேர தையல் ஆசிரியையாக பணி யாற்றி வரும், மாரியம்மாள்: சிறு வயது முதலே, எனக்கு தையல் மிகவும் பிடிக்கும். தையல் கலையை கற்றுக் கொண்டு, விடுமுறையில் வீட்டிலேயே துணிகள் தைத்தேன். தையல் கலைஞரையே திருமணம் செய்து கொண்டேன். திருமணத்திற்கு பின், கணவர் தான் என்னை எம்.ஏ., இளங்கலை கல்வியியல் எனும் பி.எட்., மற்றும் 2010ல், தையல் கலையில் பட்டய படிப்பும் படிக்க வைத்தார். கடந்த, 2012ல் வெள்ளியணை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், பகுதி நேர தையல் கலை ஆசிரியை வேலை கிடைத்தது. தையல் மட்டுமல்லாமல், கைவினைப் பொருட்கள், ஒயர் கூடை பின்னுவது என பல வேலைகள் எனக்கு தெரியும். வீணாகும் பொருட்களை வைத்து, அகப்பை முதல் பொம்மை வரை, பலவிதமான கைவினைப் பொருட்களை உருவாக்க, கடந்த, 14 ஆண்டுகளாக மாணவர்களுக்கு பயிற்சி கொடுக்கிறேன். அந்த வகையில், 15க்கும் மேலான கூடை வகைகள், கொட்டாங்குச்சியில் அஞ்சறை பெட்டி, அகப்பை, தலையாட்டி பொம்மை என, விதவிதமான பொருட்களை செய்ய கற்றுக் கொடுக்கிறேன். எங்கள் மாணவர்கள் செய்த கலைப் பொருட்களை காட்சிப்படுத்திய போது பள்ளி நிர்வாகிகளும், பொது மக்களும் பாராட்டினர். கலைப் பொருட்கள் தவிர மாணவர்களுக்கு, 96 விதமான பூ வேலைப்பாடுகளையும், 35 வகையான தையல் வகைகளையும், 54 வகையான உடைகளுக்கு அளவெடுக்கவும், தைக்கவும் சொல்லி தருகிறேன். இது தவிர, புள்ளி வைத்த கோலம், ரங்கோலி கோலம் போடவும் கற்றுத் தருகிறேன். இப்போது மாணவர்களே புதுமையாக யோசித்து, புதிய அலங்கார பொருட்களை உருவாக்கும் அளவுக்கு வளர்ந்து இருக்கின்றனர். பல மாணவர்கள், அவர்கள் செய்யும் கைவினைப் பொருட்களை, விடுமுறை நாட்களில் வீட்டிலேயே வைத்து விற்பனை செய்து, அந்த பணத்தை படிப்பு செலவுக்கு பயன்படுத்திக் கொள்கின்றனர். 'பிள்ளைகள் மிகவும் பொறுப்பாக நடந்து கொள்கின்றனர்' என்று பெற்றோர் என்னிடம் சொல்லும்போது, பெருமையாக இருக்கும். மாணவர்களின் தன்னம்பிக்கையும், அவர்களால் பெற்றோருக்கு கிடைக்கும் பெருமையையும் தொடர்ந்து ஊக்குவிப்பது தான் என் நோக்கம்!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை