டேபிள் டென்னிசால் சுவாரஸ்யமான வாழ்க்கை!
மூத்தோர் டேபிள் டென்னிசில் பதக்கங்களை குவிக்கும், மும்பையில் வசிக்கும், 45 வயதான தமிழ் பெண் சிவபிரியா: என் சொந்த ஊர் தென்காசி. கோகோ விளையாட்டில் பல்கலைக்கழக அளவில் விளையாடி இருக்கிறேன். டேபிள் டென்னிசில் மாவட்ட அளவில் விளையாடினேன். படிப்பு முடித்தவுடனேயே திருமணமாகி, குடும்பமே வாழ்க்கையாகி போனது. டேபிள் டென்னிசை மறந்தே போனேன். 'கோச்சிங் கிளாஸ், ஐஸ்கிரீம் பார்லர், டிரைவிங் கிளாஸ்' என, பல்வேறு தொழில்களை, பல்வேறு கால கட்டங்களில் செய்து வந்தேன். இப்போது, டிரைவிங் மட்டும் சொல்லி கொடுக்கிறேன். மும்பை, டோம்பிவில்லி பகுதியில் குடியேறியபோது, அங்கிருந்த டேபிள் டென்னிஸ் கிளப்பில் இலவசமாக விளையாட வாய்ப்பு கிடைத்தது. கிளப்பில் மற்றவர்களுடன் சேர்ந்து விளையாடுவதன் வாயிலாக, அதில் பயிற்சி கிடைத்தது. அங்கிருந்த டேபிள் டென்னிஸ் வீரர் ஒருவர் என்னை ஊக்கப்படுத்தினார். நாளடைவில் போட்டிகளில் பங்கேற்கும் முனைப்பு ஏற்பட்டது. ஆரம்பத்தில், எங்கள் பகுதியில் நடந்த டேபிள் டென்னிஸ் போட்டிகளில் விளையாடி பரிசு பெற்றபோது தன்னம்பிக்கை கிடைக்க, தொடர்ந்து, மஹாராஷ்டிரா மாநிலம் முழுதும் நடந்த போட்டிகளில் பங்கேற்றேன். 2022ல் காஷ்மீரின் ஸ்ரீநகரில் நடந்த, 28வது டேபிள் டென்னிஸ் சாம்பியன் போட்டியில் பங்கேற்று, வெண்கல பதக்கம் வென்றேன். போட்டிகளுக்கு செல்லும் செலவுகளுக்கான பணம், என் சொந்த சம்பாத்தியம் தான். கடந்த, 2023ல் சிங்கப்பூரில் நடந்த போட்டியில் மூன்றாவது இடம். அதே ஆண்டில், தாய்லாந்தில் நடந்த போட்டியில் இந்தியா சார்பாக பங்கேற்கும் வாய்ப்பு கிடைத்தது. மஸ்கட்டில் நடந்த, 20வது உலக மூத்தோர் டேபிள் டென்னிஸ் போட்டியில், இரட்டையர் பிரிவில் வெள்ளிப் பதக்கம் என வெளிநாடுகளிலும் வெற்றி பெற்றேன். அடுத்து மாலத்தீவு, கோவாவில் நடக்கவிருக்கும் போட்டிகளுக்கு தயாராகி வருகிறேன். எனக்கென பயிற்சியாளர் யாரும் இல்லை. எனவே, எப்போதும் என்னை விட திறமையானவர்களுடன் விளையாடுவதையே விரும்புவேன்; அதன் வாயிலாக, அவர்களிடம் இருந்து புதிது புதிதாக கற்றுக் கொள்கிறேன். சொல்லப் போனால், அவர்கள் தான் என் மானசீக பயிற்சியாளர்கள். எனக்குள் துருப்பிடித்திருந்த என் ஸ்போர்ட்ஸ் ஆசையை மீட்டெடுத்த பின், என் வாழ்க்கை இந்தளவுக்கு சுவாரஸ்யமாகவும், உற்சாகமாகவும் மாறும் என்று நானே எதிர்பார்க்கவில்லை. பேசியே சாதித்த 'டிஸ்கோ ஜாக்கி!'
மேடையில் இசை நிகழ்ச்சிகள் நடக்கும் போது, பதிவு செய்யப் பட்ட பலவித பாடல்க ளை, ஒலிபெருக்கிகள் வாயிலாக ஒலிபரப்பும் 'டிஸ்கோ ஜாக்கி' எனும் டி.ஜே.,வான நெல்லையைச் சேர்ந்த, 23 வயதாகும் ஷிபானா: திருநெல்வேலி தான் சொந்த ஊர். எனக்கு ஸ்கூல் படிக்கும்போதே, புதிதாக ஏதாவது கற்றுக்கொண்டு செய்ய வேண்டும் என்ற தேடல் இருந்தது. கோவை, பாரதியார் பல்கலையில், இதழியல் மற்றும் மக்கள் தகவல் தொடர்பியல் படித்தேன். பொதுவாக, பெண்களை மீடியா வேலைக்கு செல்ல, வீட்டில் சீக்கிரம் அனுமதிக்க மாட்டார்கள். ஆனால், நான் படிப்பை முடித்ததும், எங்கள் வீட்டில், 'டி.ஜே., வேலைக்கு செல்ல போகிறேன்...' என்று கூறியதும், எதிர்ப்பு வந்தது. ஆனால், நமக்கு ஒன்று வேண்டுமெனில் நாம் தானே பேசணும் என்று பேசினேன்; சம்மதித்தனர். புதிதாக நிறைய கற்றுக் கொண்டேன். ஒவ்வொரு புத்தாண்டு அன்றும், ஒரு கோர்ஸ் சேர்ந்து விடுவேன். நாட்டுப்புற நடனம், 'வெஸ்டர்ன் பெயின்டிங், கம்ப்யூட்டர் கோடிங், நியூட்ரிஷியன் கோர்ஸ்' என, நிறைய கற்றுக் கொண்டேன். ஒரு விஷயத்தை பிடித்து செய்தால், நமக்கு அது கஷ்ட மாகவே தெரியாது. அதனால் தான் கல்லுாரி படிப்பு, பார்ட் டைம் கோர்ஸ், பார்ட் டைம் வேலை என, எல்லாவற்றையும் சமாளிக்க முடிந்தது. சின்ன சின்ன நிகழ்ச்சிகளை நான் தொகுத்து வழங்கியதை பார்த்து, மியூசிக்குடன் நிகழ்ச்சியை கொண்டு செல்லும், 'டி.ஜே., வேலை செய்வாயா?' என்று பலரும் கேட்டனர். 'செய்துட்டா போச்சு ' என்று, அதையும் கற்றுக் கொண்டு செய்தேன்; மிகவும் சுவாரஸ்யமாக இருந்தது. இப்போதும் அந்த வேலையை செய்கிறேன். அதுவும் ஒரு பெண்ணாக இந்த வேலை செய்வது மிகவும் பெருமையாக இருக்கிறது. கூடவே, ஓவிய ஆசிரியர், புகைப்படம் எடுப்பது, 'டப்பிங் ஆர்ட்டிஸ்ட், மாடலிங்' என, பல விஷயங்களை செய்தபடியே இருக்கிறேன். இந்த வேலைகளில் வந்த வருமானத்தில் தான், மொபைல் போன், இருசக்கர வாகனம் எல்லாம் வாங்கினேன். உறவினர்கள் சிலர் என் புகைப்படம், வீடியோக்களை எல்லாம் பார்த்துட்டு, 'இதெல்லாம் தேவையா? நீ சம்பாதித்து தான் உன் பெற்றோர் சாப்பிடணும்னு இருக்கா' என்று கேட்டனர். நாம் எல்லாவற்றையும் கடந்து தான் வரவேண்டும். நமக்கு பிடித்ததை செய்ய, நம் வீட்டில் நாம் தான் நமக்கு வழக்கறிஞர். பேசி புரிய வைப்போம்... பிடித்ததை செய்து சாதிப்போம்!