உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / சொல்கிறார்கள் / என் தொழிலுக்கு வங்கி கடன் தான் கை கொடுத்தது!

என் தொழிலுக்கு வங்கி கடன் தான் கை கொடுத்தது!

வீட்டு உபயோக பொருட்களை தயாரிக்கும், 'பெல்' என்ற நிறுவனம் மூலம் ஆண்டுக்கு 5 கோடி ரூபாய், 'டர்ன் ஓவர்' செய்யும் நாகர்கோவிலைச் சேர்ந்த அருள்ஞான பெல்: கன்னியாகுமரிக்கு பக்கத்தில் உள்ள தென்தாமரைக்குளம் கிராமம் தான் சொந்த ஊர். பிளஸ் 2வுக்கு பின், பாலிடெக்னிக்கில் டிப்ளமா மெக்கானிக்கல் முடித்து, சென்னை யில் ஒரு கம்பெனியில் வேலைக்கு சேர்ந்தேன். இதற்கிடையில், தொலைதுார கல்வி வாயிலாக பி.டெக்., முடித்தேன்.சென்னையில் சாப்பாடு, தங்குமிடம் என செலவு அதிகம். எனவே, ஊரிலேயே வேலை பார்க்கலாம் என்று, நாகர்கோவிலில் ஒரு ஹோம் அப்ளையன்ஸ் கடையில் 2004ல் வேலைக்கு சேர்ந்தேன்; மாதம் 2,000 ரூபாய் சம்பளம்.அங்கு தான் கிரைண்டர், மிக்சி போன்ற வீட்டு உபயோக பொருட்களின் தயாரிப்பு, விற்பனை குறித்து நன்கு தெரிந்து கொண்டேன். பெண்கள் எந்த மாதிரியான பொருட்களை விரும்புவர், எந்த தரத்தில், என்ன விலையில் பொருட்களை எதிர்பார்க்கின்றனர் என்பதை முழுமையாக அறிந்து கொண்டேன்.ஒரு கட்டத்தில், நம்மாலும் இந்த பிசினஸ் செய்ய முடியும் என்ற நம்பிக்கை வந்ததும், செயலில் இறங்கினேன். முதலில் கிரைண்டர் விற்பனையில் இறங்கலாம் என நினைத்தேன். 'பெல்' என்ற பெயரில் நாகர்கோவிலில் ஒரு சின்ன அறையில் கிரைண்டர் கம்பெனியை துவங்கினேன். தற்போது, 36 சென்ட் நிலத்தில் சொந்த கட்டடத்தில் இந்த நிறுவனம் செயல்பட்டு வருகிறது.இப்போது, 2 லிட்டர் முதல் 20 லிட்டர் வரை அளவுள்ள கிரைண்டர்கள் தயாரிக்கிறோம். அதற்கு தேவையான கல்லையும், நாங்களே சொந்தமாக கடைசல் செய்து தயாரிக்கிறோம். ஜூஸ் போட உதவும் புல்லட் மிக்சி உட்பட 50 விதமான பொருட்களை தயாரிக்கிறோம்.அதேபோல், வீடுகளில் தினமும் பயன்படுத்தும் பொருட்களுக்கு சர்வீஸ் தான் முக்கியம். தமிழகம் முழுதும் சேல்ஸ் மற்றும் சர்வீசுக்கு கிட்டத்தட்ட 50 ஊழியர்கள் பணிபுரிகின்றனர். எங்கள், 'கஸ்டமர் கேர்' எண்ணுக்கு அழைத்தால், குறிப்பிட்ட நேரத்தில் வீட்டுக்கு சென்று, பழுதுகளை உடனே சரி செய்து தருகிறோம். நடுத்தர மற்றும் அடித்தட்டு மக்களும் வாங்கும் வகையில் குறைந்த விலையில், தரமான பொருட்களை வழங்க வேண்டும் என்ற எண்ணத்தில் பணி செய்தது தான், எங்கள் வெற்றிக்கு காரணம். தற்போது, எங்களுக்கு 300 டீலர்கள் உள்ளனர். முன்னணி ஷோரூம்களில் எங்கள் தயாரிப்புகள் கிடைக்கின்றன.பிசினசுக்கு பணம் ஒரு பிரச்னை தான். என் தொழிலுக்கு பெரும்பாலும் வங்கி கடன் தான் கை கொடுத்தது. படிப்படியாக முன்னேறி, இன்று ஆண்டுக்கு சராசரியாக, 5 கோடி ரூபாய்க்கு, 'டர்ன் ஓவர்' செய்கிறோம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை