‘மிட்டாய்களை தினமும் செய்து அன்றே விற்பனை செய்கிறோம்!’
திண்டுக்கல் மாவட்டம், பழனி அருகே கணக்கம்பட்டி கிராமத்தில், மிட்டாய்கள் தயாரித்து விற்பனை செய்து வரும், 31 வயதாகும் தவுபிக் ராஜா: என் தாத்தா, அந்த காலத்தில் வட மாநிலத்திற்கு சென்றிருந்தார். அங்கு ஒரு இனிப்பு கடையில், வித்தியாசமாக ஒரு இனிப்பை செய்து வைத்திருந்தனர். அதை வாங்கி சாப்பிட்டவருக்கு, அதன் ருசி பிடித்து போனது. இந்த இனிப்பை நாமே வீட்டில் செய்து பார்க்கலாமே என்று, ஊருக்கு வந்து பல முயற்சிகள் செய்து, ஒருவழியாக அந்த பக்குவத்தை கொண்டு வந்து விட்டார். அக்கம் பக்கத்தினர், உறவினர்களுக்கு இந்த இனிப்பை கொடுக்க, அவர்கள் சாப்பிட்டு பார்த்து அசந்து விட்டனர்; பின், அதையே தொழிலாக மாற்றிக் கொண்டார். 55 ஆண்டுகள் இந்த மிட்டாயை தான் விற்பனை செய்து வந்தார். தாத்தாவுக்கு பின் அப்பா... அவர் தான், இந்த தொழிலை எனக்கு கற்று தந்தார். அப்பாவுக்கு காது கேட்காது; ஆனாலும், நேர்மையாக உழைப்பார். அந்த உழைப்பை பார்த்து தான் நானும் வளர்ந்தேன். பழனி கல்லுாரி ஒன்றில் கணினி அறிவியல் படிப்பில் சேர்ந்து, மூன்று மாதங்கள் தான் ஆகியிருக்கும். திடீரென அப்பாவுக்கு உடல்நிலை சரியில்லாததால், தொழிலுக்கு செல்ல முடியவில்லை. வீட்டில் அடுப்பு எரியணுமே... அதனால், படிப்பை விட்டுட்டு மிட்டாய் தொழிலை கையில் எடுத்தேன். இதோ, எட்டு ஆண்டுகள் ஓடி விட்டன. சைக்கிள் தான் என் கடை. இந்த மிட்டாய்க்கு, ‘டீலக்ஸ்’ மிட்டாய் என்று பெயர் வைத்துள்ளோம். இதுவும் ஜவ்வு மிட்டாய் ரகம் தான். ஆனால், இதன் ருசியே அலாதியானது. தினமும் அதிகாலையில் எழுந்து மிட்டாய் தயாரித்து விடுவேன். இதற்கு தேவையான பொருட்கள் சர்க்கரை, தேங்காய், முந்திரி, கோதுமை, வெண்ணெய். முதலில் சர்க்கரையை பாகு காய்ச்சி கொள்வேன். தேங்காய்ப்பால், முந்திரி மாவு, கோதுமை மாவு, வெண்ணெய் சேர்த்து பாரம்பரிய பக்குவத்தில் நன்றாக கிளற வேண்டும்; அதில் தான் தொழில் சூட்சுமம் இருக்கிறது. ஒரு மிட்டாய், 5 ரூபாய். ஒரு நாளைக்கு குறைந்தது, 500 மிட்டாய்களாவது விற்பனை செய்து விடுவேன். பள்ளி மாணவர்கள் முதல் அலுவலகம் செல்லும் நபர்கள் வரை, எனக்கு தொடர் வாடிக்கையாளர்கள் அதிகம் உள்ளனர். பள்ளி மாணவர்களிடம் கணக்கு பார்க்க மாட்டேன். ஒரு ரூபாய், இரண்டு ரூபாய் என கிடைப்பதை கையில் வைத்துக் கொண்டு ஆசையாக வருவர்; யோசிக்காமல் கொடுத்து விடுவேன். இந்த மிட்டாய் வருமானம் தான் எங்கள் வாழ்வாதாரம். போதும் என்ற அளவுக்கு இதில் வருமானம் வருகிறது; நிம்மதியாக சாப்பிடுகிறோம். திருமண வீடுகளில் இருந்தும், ‘ஆர்டர்’கள் வருகின்றன. பெரிய கடையாக வைக்கலாமே என்று பலரும் கேட்கின்றனர். தினசரி செய்து, அன்றே விற்பனை செய்வது தான் எனக்கு பிடித்திருக்கிறது. தொடர்புக்கு: 90424 06435.