நாளிதழை மடித்தபடியே, “காங்கிரஸ் போட்டியிட்ட தொகுதிக்கு குறி வச்சிருக்காவ வே...” என, அரட்டையை ஆரம்பித்தார் பெரியசாமி அண்ணாச்சி.“எந்த தொகுதியை சொல்றீங்க பா...” என கேட்டார், அன்வர்பாய்.“கடந்த, 2021 சட்டசபை தேர்தல்ல, தி.மு.க., கூட்டணியில், ஸ்ரீவில்லிபுத்துார் தொகுதியில, காங்., வேட்பாளரா போட்டியிட்டவர் மாதவராவ்... ஓட்டுப்பதிவு முடிஞ்சு, ஓட்டு எண்றதுக்குள்ளயே உடல்நலக் குறைவால இறந்து போயிட்டாருல்லா...“விருதுநகர் மாவட்டத்துல இருக்கிற, ஏழு சட்டசபை தொகுதிகள்ல, இங்க மட்டும், அ.தி.மு.க., ஜெயிச்சிடுச்சு... இதனால, வர்ற சட்டசபை தேர்தல்ல, இந்த தொகுதியை மறுபடியும், காங்கிரசுக்கு ஒதுக்காம, தி.மு.க.,வே போட்டியிட திட்டமிட்டிருக்கு வே...“இதுக்கு, தகுதியான வேட்பாளரை தேர்வு செய்யும் பணியிலும் ஈடுபட்டிருக்கு... இதனால, 'சீட்' கனவுல மிதந்துட்டு இருந்த உள்ளூர் காங்கிரஸ் நிர்வாகிகள் கடுப்புல இருக்காவ வே...” என்றார், அண்ணாச்சி. “அசைவ விருந்து குடுத்து அசத்திட்டாருங்க...” என்ற அந்தோணிசாமியே தொடர்ந்தார்...“கரூர் மாவட்ட தி.மு.க.,வுல, பூத் கமிட்டி உறுப்பினர்கள் நியமனத்தை எல்லாம் வெற்றிகரமா நடத்தி முடிச்சிட்டாங்க... புதிய உறுப்பினர் சேர்க்கையிலும், முதல்வர் ஸ்டாலின் பாராட்டும் அளவுக்கு முதலிடத்தை பிடிச்சிருக்காங்க...“இதுக்காக, சிரமப்பட்டு உழைச்ச கட்சி நிர்வாகிகள் மற்றும் பூத் கமிட்டி நிர்வாகிகளுக்கு, சமீபத்துல, மாவட்டச் செயலரும், முன்னாள் அமைச்சருமான செந்தில் பாலாஜி, தடபுடலான அசைவ விருந்து குடுத்திருக்காருங்க...“தலைவாழை இலை போட்டு சிக்கன், மட்டன், மீன் உட்பட ஒன்பது வகையான அசைவ ஐட்டங்களை போதும் போதும்னு சொல்ற அளவுக்கு நிர்வாகிகளுக்கு பரிமாறி அசத்திட்டாருங்க...” என்றார், அந்தோணிசாமி.“கலெக்டரிடம் வாக்குவாதத்துல இறங்கிட்டாரு பா...” என்றார், அன்வர்பாய்.“எந்த ஊருல ஓய்...” என கேட்டார், குப்பண்ணா.“மாநில ஆதிதிராவிட நலக்குழு உறுப்பினரான செல்வகுமார், கோவையைச் சேர்ந்தவர்... சமீபத்துல, கோவை கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மாவட்ட ஆதிதிராவிடர் நலக்குழு கூட்டத்தில் பங்கேற்க வந்தாரு பா...“அப்ப, கலெக்டர் அலுவலக வாசல்ல, 'குரூப் 1' அதிகாரிகள் பலர் நின்று, அவருக்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்றாங்க... அதுக்கு, 'நீங்க எல்லாம் வந்திருக்கீங்க... கலெக்டர், அவர் சீட்டை விட்டு எழுந்து வர மாட்டாரா...'ன்னு செல்வகுமார் சத்தம் போட, அதிகாரிகள் அதிர்ச்சியாகிட்டாங்க பா...“அப்புறமா கூட்டம் நடந்துச்சு... கூட்டம் முடிஞ்சதும், மாவட்ட ஆதிதிராவிட நலக்குழு உறுப்பினர்கள் பலரும், கலெக்டர்கிட்ட போய், 'போயிட்டு வர்றோம்'னு சொல்லிட்டு கிளம்பினாங்க... கலெக்டரும் அமர்ந்தபடியே தலையை ஆட்டினாரு பா...“இதை, மொபைல் போன்ல படம் எடுத்த செல்வகுமார், 'எங்க உறுப்பினர்கள் கிளம்புறப்ப, நீங்க உட்கார்ந்துட்டே வழியனுப்புறீங்களே... எங்களை தாழ்த்தப்பட்டவர்கள்னு அவமதிக்கிறீங்களா...'ன்னு மறுபடியும் வாக்குவாதத்துல இறங்கிட்டாரு... ஒருவழியா அவரை, கலெக்டர் சமாதானப்படுத்தி அனுப்பி வச்சாரு பா...” என முடித்தார், அன்வர்பாய்.பெஞ்சில் புதியவர்கள் சிலர் அமர, பெரியவர்கள் கிளம்பினர்.