உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / டீ கடை பெஞ்ச் /  குடிநீர் இணைப்புகள் வழங்கியதில் தம்பதி, கோல்மால்!

 குடிநீர் இணைப்புகள் வழங்கியதில் தம்பதி, கோல்மால்!

''போராட்டத்துக்கு காரணம் தெரிஞ்சிடுத்து ஓய்...'' என்றபடியே, பில்டர் காபியை உறிஞ்சினார் குப்பண்ணா. ''எந்த போராட்டத்தை சொல்றீங்க பா...'' என கேட்டார், அன்வர்பாய். ''சம வேலைக்கு சம ஊதியம் என்ற கோரிக்கையுடன் இடைநிலை ஆசிரியர்கள், ஒன்றரை மாசத்துக்கும் மேலா போராடிண்டு இருக்கால்லியோ... இதுல, ஓய்வு பெற்றவா மாநில நிர்வாகிகளா இருக்கிற ஆசிரியர் சங்கங்கள், 'சம வேலைக்கு சம ஊதியம்' என்ற கோரிக்கையை கண்டுக்காம விட்டதால தான், இடைநிலை ஆசிரியர்கள் தனியா போராடறா ஓய்... ''அதோட, 'அவா கோரிக்கைக்கு பணியக் கூடாது'ன்னு அரசுக்கு ஆதரவான சங்கங்கள், அரசுக்கு துாபம் போடறா... இதனால, போராடும் சங்க நிர்வாகிகளை, பொங்கலுக்கு முன்னாடியே, முதல்வரை சந்திக்க வச்சு, போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர போட்ட திட்டம் தோல்வியில முடிஞ்சிடுத்து... 'சங்கங்களுக்குள்ள இருக்கற, 'ஈகோ' பிரச்னையால, போராட்டம் முடிவுக்கு வராம நீடிக்கறது ஓய்...'' என்றார், குப்பண்ணா. ''தேசியக்கொடி ஏத்த விடாம தடுத்துட்டாவ வே...'' என்ற பெரியசாமி அண்ணாச்சியே தொடர்ந்தார்... ''துணை முதல்வர் உதயநிதியின், சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில, மாவடி விநாயகர் கோவில் தெரு இணைப்பு பகுதியில், அ.தி.மு.க., - பா.ஜ.,வினர் மற்றும் அப்பகுதி மக்கள் சேர்ந்து, குடியரசு தின விழாவை கொண்டாட முடிவு செஞ்சாவ... ஆனா, ஆளுங்கட்சி கூட்டணியின் அழுத்தம் காரணமா, தேசியக்கொடி ஏத்த போலீசார் அனுமதி தரல வே... ''குறிப்பா, ஆளுங்கட்சி கூட்டணியில இருக்கிற, வி.சி., கட்சி நிர்வாகிகள் சிலர், 'அங்க ஈ.வெ.ரா., படம் இருக்கு... அது பக்கத்துல காவி நிறத்துல கொடி ஏத்தக்கூடாது'ன்னு நுாதனமான காரணத்தை சொல்லி, தேசியக்கொடி ஏத்த விடாம தடுத்துட்டாவ வே...'' என்றார், அண்ணாச்சி. ''குடிநீர் இணைப்புல முறைகேடு பண்ணிட்டதா, தம்பதி மீது புகார் குடுத்திருக்காங்க...'' என்றார், அந்தோணிசாமி. ''எந்த ஊர்ல ஓய்...'' என கேட்டார், குப்பண்ணா. ''துாத்துக்குடி மாநகராட்சியில், 'துணை'யான பதவியில் ஒரு பெண்மணி இருக்காங்க... இவங்க கணவர், தி.மு.க.,வில் மாவட்ட பொறுப்புல இருக்காருங்க... ''இவங்க ரெண்டு பேர் மீதும், மாநகராட்சி கமிஷனரிடம் அ.தி.மு.க., சார்பில் புகார் குடுத்திருக்காங்க... அதுல, 46வது வார்டில் இருக்கிற ஒவ்வொரு வீட்டுக்கும் குடிநீர் இணைப்பு தர்றோம்னு, ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி, தலா, 24,000 ரூபாயை தம்பதி வசூல் பண்ணியிருக்காங்க... இப்படி, 200க்கும் மேற்பட்டவங்களிடம் பணம் வாங்கிட்டாங்க... ''அப்ப, குடிநீர் இணைப்பு வழங்கிய, 15 நாளைக்குள்ள பணம் தந்ததுக்கான ரசீது, குடிநீர் இணைப்பு அட்டை வழங்கப்படும்னு உறுதி தந்தாங்க... ஆனா, 18 மாசங்கள் ஆகியும், எந்த ரசீதும், அட்டையும் தரல... ''அதுவும் இல்லாம, மாநகராட்சி நிர்வாகத்துக்கு தெரியாம திருட்டுத்தனமா குடிநீர் இணைப்புகளை குடுத்திருக்காங்க... இதனால, குடிநீர் கட்டணமும் வசூலிக்க முடியல... இது சம்பந்தமா விசாரணை நடத்தி, தம்பதி மீது நடவடிக்கை எடுக்கணும்னு, அ.தி.மு.க., காரங்க கேட்டிருக்காங்க...'' என முடித்தார், அந்தோணிசாமி. ஒலித்த மொபைல் போனை எடுத்த குப்பண்ணா, ''சொல்லுங்கோ ஜெனிட்டா மேடம்... ஆத்துக்காரர் செல்வராஜ் நன்னா இருக்காரோல்லியோ...'' என பேசியபடியே நடக்க, மற்றவர்களும் கிளம்பினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

சுந்தரம் விஸ்வநாதன்
பிப் 01, 2026 08:53

தூத்துக்குடி பரவாயில்லை. தாம்பரம் மாநகராட்சியில நெறைய வீடுகளுக்கு குடிநீர் இணைப்பே கிடையாது. ஆனா, திராவிட மாடலில் எல்லாரும் உடனடியா குடிநீருக்கான வரிக்கட்டணத்தை செலுத்தவேண்டும் என்று நோட்டீஸ் அனுப்பி இருக்காங்க.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை