உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / டீ கடை பெஞ்ச் / பா.ஜ.,வுக்கு தாவும் அமைச்சரின் முன்னாள் நிழல்?

பா.ஜ.,வுக்கு தாவும் அமைச்சரின் முன்னாள் நிழல்?

''பா. ஜ.,வுக்கு பயந்து சாலையை திறந்துட்டாங்க...'' என்றபடியே, நாயர் தந்த இஞ்சி டீயை உறிஞ்சினார் அந்தோணிசாமி. ''எந்த ஊருல வே...'' என கேட்டார், பெரியசாமி அண்ணாச்சி. ''ஈரோடு மாவட்டம், சென்னிமலையில் மலை மீதிருக்கும் முருகன் கோவிலுக்கு போக, 3.9 கி.மீ.,க்கு தார்ச்சாலை இருக்கு... சேதமான இந்த சாலையை சீரமைத்து, தடுப்பு சுவர் கட்ட, 6.70 கோடி ரூபாய் ஒதுக்கியிருந்தாங்க... பணிகள் முடிஞ்சிட்டாலும், முதல்வர் தேதிக்காக திறக்காம வச்சிருந்தாங்க... ''மலை பாதையை அடைச்சு வச்சிருந்ததால, படிக்கட்டு வழியா குழந்தைகள், முதியோர் கோவிலுக்கு போக முடியாம தவிச்சாங்க... சாலையை திறக்கும்படி பக்தர்கள் வச்ச கோரிக்கையை யாரும் கண்டுக்கல... ''ஈரோடு தெற்கு மாவட்ட பா.ஜ., தலைவர் செந்தில், திருப்பூர் தெற்கு மாவட்ட பா.ஜ., தலைவர் மோகனபிரியா சரவணன் ஆகியோர், 'அக்டோபர் 14க்குள்ள சாலையை திறக்கலன்னா, நாங்களே திறப்பு விழா நடத்துவோம்'னு அதிரடியா அறிவிச்சாங்க... ''இது பத்தி, இந்த மாவட்ட அமைச்சர்கள் சாமிநாதன், முத்துசாமி ஆகியோர் முதல்வரிடம் பேச, 13ம் தேதியே காணொளி காட்சி வாயிலா சாலையை முதல்வர் திறந்துட்டாருங்க...'' என்றார், அந்தோணிசாமி. ''சும்மா போறவங்களும் நோயாளி ஆகிடுவாங்க பா...'' என்ற அன்வர்பாயே தொடர்ந்தார்... ''அரியலுார் அரசு மருத்துவக் கல்லுாரிக்கு, 2020ல் அ.தி.மு.க., ஆட்சியில் அடிக்கல் நாட்டினாங்க... 26 ஏக்கரில், 347 கோடி ரூபாயில் ஆறு மாடியில் கட்டடம் கட்டி, 2022 தி.மு.க., ஆட்சியில் செயல்பாட்டுக்கு வந்துச்சு பா... ''ஆனா, நாலே வருஷத்துல சுவர்ல சிமென்ட் பூச்சு பெயர்ந்து விழுது... உள்ள போனா துர்நாற்றம் வீசுது... துாய்மை பணிகளை செய்ய வேண்டிய தனியார் ஒப்பந்த ஊழியர்கள், நோயாளிகளுக்கு குளுக்கோஸ் ஏத்துறது, காயங்களுக்கு கட்டு போடுற வேலைகளை பார்க்குறாங்க பா... ''கழிப்பறை, வார்டு, பணியாளர் குடியிருப்புன்னு பல பகுதியிலும் பைப் லைன் பழுதாகி, அங்கங்க தண்ணி தேங்கி குட்டையா நிற்குது... இதனால, கடுமையான சுகாதார சீர்கேடு ஏற்படுது... இதனால, இங்க சிகிச்சையில் இருக்கிறவங்களை பார்க்க போறவங்களும் நோயாளி ஆகுற நிலை ஏற்பட்டிருக்கு பா...'' என்றார், அன்வர்பாய். ''பா.ஜ.,வுக்கு தாவ போறார் ஓய்...'' என, கடைசி தகவலுக்கு வந்தார் குப்பண்ணா. ''யாரை சொல்றீங்க பா...'' என கேட்டார், அன்வர்பாய். ''தென் மாவட்ட அமைச்சருடன் நிழல் மாதிரி வலம் வந்த உறவினர், சமீபத்துல, அவரிடம் சண்டை போட்டுண்டு வெளியில போயிட்டாரோல்லியோ... இது பத்தி நாம ஏற்கனவே பேசியிருக்கோம் ஓய்... ''அவர், அரசு வேலை, டெண்டர் எடுத்து தரதா, பலரிடமும் கோடிகளை சுருட்டியிருக்கார்... ரெண்டு சட்டசபை தொகுதிகள்ல சீட் வாங்கி தரதா சொல்லியும், சிலரிடம் பணம் வாங்கியிருக்கார் ஓய்... ''அவரிடம் பணம் குடுத்து ஏமாந்தவா, அமைச்சரிடம் இதை சொல்ல, அவர் அதிர்ச்சியாகிட்டார்... இதனால, உறவினரிடம் இருக்கும் கட்சி பதவியை பறிக்கும்படி, தலைமைக்கு சிபாரிசு பண்ணியிருக்கார் ஓய்... ''அதே நேரம், வசூல் பணத்தை காப்பாத்திக்கவும், சட்ட நடவடிக்கையில இருந்து தப்பிக்கவும், தாமரை கட்சியில் சேர உறவினர் முடிவு பண்ணிட்டாராம் ஓய்...'' என முடித்தார், குப்பண்ணா. ஒலித்த மொபைல் போனை எடுத்த அந்தோணிசாமி, ''அனிதா... சங்கர் வேற வீடு பார்த்துக்கிறேன்னு சொல்லிட்டாரு...'' என பேசியபடியே நடக்க, மற்றவர்களும் கிளம்பினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

D.Ambujavalli
அக் 18, 2025 18:36

சாதாரணமாக இந்தமாதிரி, பதவிக்கு லஞ்சம் , சீட்டுக்கு லஞ்சம் வாங்கிவிட்டால் ஆளும் கட்சியில்தானே சேரவேண்டும் அங்கு போய் சேர்ந்தால் நல்ல ‘கனமான’ துறை அமைச்சர் ஆகலாம் -அதுவும் தேர்தல் வரும் நேரம் இப்போது தாவுவது தான் அறிவுடைமை இது ஏன் அந்த ‘மாஜி நிழலுக்கு’ தோன்றவில்லை?


சுந்தரம் விஸ்வநாதன்
அக் 18, 2025 06:52

சும்மா போறவங்களும் பயனாளி ஆகிடறாங்க .உள்ள போனா துர்நாற்றம் வீசுது... துாய்மை பணிகளை செய்ய வேண்டிய தனியார் ஒப்பந்த பணியாளர்கள் பயனாளிகளுக்கு , குளுக்கோஸ் ஏத்துறது, காயங்களுக்கு கட்டு போடுற வேலைகளை பார்க்குறாங்க பா. கழிப்பறை, வார்டு, பணியாளர் குடியிருப்புன்னு பல பகுதியிலும் பைப் லைன் பழுதாகி, அங்கங்க தண்ணி தேங்கி குட்டையா நிற்குது... இதனால, கடுமையான சுகாதார சீர்கேடு ஏற்படுது... இதனால, இங்க சிகிச்சையில் இருக்கிறவங்களை பார்க்க போறவங்களும் பயனாளி ஆகுற நிலை ஏற்பட்டிருக்கு பா...